Published:Updated:

`ஆண் குழந்தை; ஜோசியம்; போட்டுக்கொடுத்த தோழி!'- திருச்சிக்கு அதிர்ச்சி கொடுத்த குழந்தை விற்பனை

குழந்தை விற்கப்பட்ட விவகாரத்தில் கைதானவர்கள்
குழந்தை விற்கப்பட்ட விவகாரத்தில் கைதானவர்கள்

திருச்சியில் ஆண் குழந்தைகள் விற்கப்பட்ட விவகாரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கோவிந்தன். இவரது மனைவி அஸ்வினி. இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ருத்ரன் என்கிற ஆண் குழந்தையைத் திடீரெனக் கொண்டு வந்து கோவிந்தன் வளர்த்து வந்தார். இதுகுறித்து தகவலறிந்த குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் அஜித் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அஸ்வினி, குழந்தை தன்னுடையது எனக் கூறிவந்தார்.

குழந்தை விற்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள்.
குழந்தை விற்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள்.

ஆனால் தொடர் விசாரணையில், 3 மாதங்களுக்கு முன்பு குழந்தையை திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த வேலம்மாள் என்பவர் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கியதை ஒப்புக்கொண்டார்.

மேலும் அவர், ``எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ஜாதகம் பார்த்தபோது, மூன்றாவதும் பெண் குழந்தைதான் பிறக்கும் என ஜோசியர் கூறினார். இதனால் ஆண் குழந்தையை விலைக்கு வாங்கினோம். எங்க குடும்பத்தில் இருக்கும் எல்லோரையும் ஜெயிலில் போட்டுக்கோங்க. ஆனால் நாங்கள் ஆசையாய் வளர்த்த குழந்தை ருத்ரனை மட்டும் எங்களிடம் கொடுத்து விடுங்கள்" எனக் கதறியிருக்கிறார்.

தொடர்ந்து, குழந்தை ருத்ரனை மீட்ட போலீஸாரின் விசாரணையில், திருச்சி பெட்டவாய்த்தலை அடுத்துள்ள காமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த முருகேசன் மனைவி புவனேஸ்வரிக்கு இந்தக் குழந்தை பிறந்தது என்றும், அவர்களுக்கு ஏற்கெனவே நான்கு குழந்தைகள் உள்ளதால் குழந்தை ருத்ரனை விற்பனை செய்ததும், இடைத்தரகராகச் செயல்பட்ட வேலம்மாள் திருச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றியதும் தெரியவந்தது.

திருச்சி அரசு பொது மருத்துவமனை
திருச்சி அரசு பொது மருத்துவமனை

இவ்விவகாரம் விசாரணையில் இருக்கும்போதே, திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த 4 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று விற்கப்பட்டதாகத் தகவல் வந்துள்ளது. அதையடுத்து, திருச்சி மாவட்டக் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், திருச்சி துறையூர் அடுத்த உப்பிலியாபுரம், பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் மற்றும் ராணி ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர்.

`7,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட குழந்தை' - திருச்சிக்கு அதிர்ச்சி கொடுத்த கும்பல் #TamilnaduCrimeDiary

விசாரணையில், தர்மராஜுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராணி, மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். சில காரணங்களால் உறவினர்களிடம் தனது கர்ப்பத்தை மறைத்த ராணி, திருச்சி திருவெறும்பூர் அடுத்த அரசன்குடி பகுதிக்குக் கட்டுமான வேலைக்குச் சென்று வந்தார்.

அங்கு ராணிக்குப் பழக்கமான ஷீலா அவருக்கு உதவி வந்தார். இந்நிலையில், ராணிக்குக் கடந்த 25 நாள்களுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைத்தான், திருச்சி உப்பிலியாபுரம், புதுபட்டியைச் சேர்ந்த குமார் மற்றும் சாரதா தம்பதியருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து போலீஸாரின் விசாரணையில், திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்த குழந்தையின் பிறப்பு குறித்த பதிவேட்டில் குழந்தையின் தாய் சிவகாமி என்றும் தந்தை பாலசுப்பிரமணியம் என்றும் இருந்தது. அப்போதுதான், ராணியின் தோழியான ஷீலாவின் தாய் தனது உறவினரான சிவகாமி என்பவருக்குக் கொடுத்திட முடிவு செய்திருந்தார். இடையில் வந்த ராணியின் தாய், குழந்தையை 1 லட்சம் ரூபாய்க்குக் குமாரின் மனைவி சாரதாவுக்கு விற்றுள்ளார். இந்தக் கோபத்தில்தான் ஷீலா போலீஸுக்குத் தகவல் கொடுத்தது தெரியவந்தது.

இந்த இரு வழக்கிலும், குழந்தை ருத்ரனை விலைக்கு வாங்கிய அஸ்வினி, இடைத்தரகர் வேலம்மாள், குழந்தையை விற்பனை செய்த தாய் புவனேஸ்வரி, அவருக்கு உடந்தையாக இருந்த லூர்துமேரி உள்ளிட்டோரைக் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து ரூபாய் 82 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனர்.

குழந்தை விற்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள்.
குழந்தை விற்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள்.

இதேபோல் ராணி, அவரது கணவர் தேவராஜ், குழந்தையை விலைக்கு வாங்கிய புதுப்பட்டி குமார், சாரதா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது, குழந்தைக் கடத்தல், முறைகேடான தத்தெடுப்பு மற்றும் குழந்தை விற்பனை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைக் கடத்தல் விவகாரம் இன்னும் பூதாகரமாகும் என்ற தகவலால் திருச்சி மாவட்டமே பரபரப்பின் உச்சத்தில் இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு