Published:Updated:

``பிராந்திய மொழிப் பத்திரிகையாளர்களே அதிகம் தாக்கப்படுகிறார்கள்’’- யுனெஸ்கோ அறிக்கை #KeepTruthAlive

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பத்திரிகை சுதந்திரம்
பத்திரிகை சுதந்திரம் ( Global research )

டிசம்பர் 2013 ஐ.நா சபை தீர்மானம் மூலம் பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச நாள் அங்கீகரிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான கருவாக #KeepTruthAlive என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"பத்திரிகையாளர்கள் இல்லாத இடத்தில், பத்திரிகையாளர்கள் பணி செய்ய இயலாத இடத்தில்தான் இனப்படுகொலைகள் நடைபெறுகின்றன" - கம்போடியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் லூக் ஹன்ட்டின் இந்த வரிகள் இன்றுவரை எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

அதன்படி, உலகில் நிகழும் பல குரூரங்களுக்கு சாட்சியாகவும் அராஜகவாதிகளுக்கு அச்சுறுத்தலாகவும் பத்திரிகையாளர்களே திகழ்கிறார்கள். அதேசமயம், பத்திரிகையாளர்கள் மீதே பல கொடுமைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அதைத் தடுக்கும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 2-ம் தேதி ஐ.நா-வால் பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

யுனெஸ்கோ அறிக்கை
யுனெஸ்கோ அறிக்கை

2018-ம் ஆண்டு யுனெஸ்கோ வெளியிட்ட அறிக்கையில், 2006 முதல் 2018 வரை உலகம் முழுவதும் 1,010 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. அதில் 55% கொலைகள் பதற்றம் இல்லாத இடங்களில் நடந்துள்ளது. இதில் பெரும் பகுதியினர் அந்தந்த நாடுகளின் பிராந்திய மொழியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவருகிறது. இதில் வெறும் 115 சம்பவங்களில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் 90% வழக்குகள் இன்று வரை முடிக்கப்படாமல் இருப்பதாகவும் பதிவு செய்துள்ளது.

மேலும், அந்த அறிக்கை, "பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களில் தண்டனையின்மை என்பது குற்றம் புரிபவர்களுக்கு வலு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் சுய தணிக்கைக்கும் வித்திடுகிறது" என்கிறது.

"பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்பட்டால் அதற்கான விலையை ஒட்டுமொத்த சமூகமும் கொடுத்தாக வேண்டும்."
ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரேஸ்.

இந்தியாவின் நிலை என்ன?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு அங்கன்வாடி பள்ளியில் மாணவர்களுக்கு உப்பு கலந்த ரொட்டி உணவாக வழங்கப்படுகிறது. அதை ஒரு இந்தி பத்திரிகையாளர் கண்டறிந்து செய்தியாக வெளியிடுகிறார். மிகப்பெரிய அளவில் சர்ச்சையான இந்தச் சம்பவத்தால் உத்தரப்பிரதேச அரசுக்கு கடும் நெருக்கடி உருவானது. எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்தன. இதற்கு எதிர்வினையாக, நடந்த சம்பவத்தைப் பற்றி விசாரிக்க உத்தரவிட்டதாக உத்தரப்பிரதேச அரசு செய்தி வெளியிட்டது. இதோடு முடியவில்லை. மாணவர்கள் ரொட்டி சாப்பிடுவதை வீடியோ எடுத்து வெளியிட்டதற்காக பவன் ஜெய்ஸ்வால் என்கிற அந்தப் பத்திரிகையாளர் மீது உத்தரப் பிரதேச அரசு கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது.

ஆந்திர அரசாணை
ஆந்திர அரசாணை

ஆந்திர அரசு புதிதாக வெளியிட்டுள்ள அரசாணையில், அரசின் மீது அவதூறு பரப்பும் விதமாக அச்சு, காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடுபவர்கள் மீது புகார் செய்து வழக்கு தொடர, சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

ஆந்திர அரசு ஏற்கெனவே 2007-ம் ஆண்டு இந்த அதிகாரத்தைத் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை ஆணையருக்கு வழங்கியிருந்தது. தற்போது, அதைத் துறைச் செயலாளர் வரை நீட்டித்துள்ளது. `பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதோடு மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களையும் சேர்த்து பொதுமக்களையும் அச்சுறுத்தும் நடவடிக்கை இது’ என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எல்லை கடந்த பத்திரிகையாளர்கள் (Reporters without borders) அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கான அறிக்கையில், 2019-ம் ஆண்டு இந்தியா 140 வது இடத்தில் உள்ளது. 2018-ம் ஆண்டு அறிக்கையில், உலகில் பத்திரிகையாளர்கள் பணி செய்வதற்கு மோசமான சூழல் உள்ள ஐந்து நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் முறையாக இடம்பெற்றிருந்தது.

எல்லை கடந்த பத்திரிகையாளர்கள் (Reporters without borders)
எல்லை கடந்த பத்திரிகையாளர்கள் (Reporters without borders)

கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட ரைசிங் காஷ்மீர் பத்திரிகையின் ஆசிரியர் சுஜத் புகாரி வழக்கு விசாரணையும் எந்தவொரு தெளிவான நிலையையும் எட்டவில்லை. 2017-ம் ஆண்டு கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ் கொலை வழக்கு விசாரணையும், 2015-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட கன்னட எழுத்தாளர் கல்பூர்கி கொலை வழக்கின் விசாரணையும் தற்போது வரை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இதற்கிடையே கடந்த ஆண்டு ஐ.நா, மனித உரிமையாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் 38 நாடுகள் அடங்கிய 'வெட்கக்கேடான நாடுகள்' என்றொரு பட்டியலை வெளியிட்டது. இதில் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளோடு இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

விஜய சங்கர்
விஜய சங்கர்

இந்தியாவின் தற்போதைய சூழல் குறித்து மூத்த பத்திரிகையாளர் விஜய சங்கர் நம்மிடம் பேசுகையில், "மூன்று நாள்களுக்கு முன்பாக கௌரி ஊடக அறக்கட்டளையின் பத்திரிகையாளர் நரசிம்மமூர்த்தி, நக்சலைட் எனக் கைது செய்யப்பட்டுள்ளார். தபோல்கர் தொடங்கி சுஜத் புகாரி வரை அனைவரின் வழக்குகளிலும் இன்று வரை எந்தவொரு முடிவும் எட்டவில்லை. அரசு அவமதிப்பு வழக்கு போன்று சட்டபூர்வமாகப் பத்திரிகையாளர்களைக் குறிவைக்கிறது என்றால், அரசுக்கு ஆதரவானவர்கள் பத்திரிகையாளர்களுக்கு நேரடியாகவே அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.

இதில் களத்துக்குச் சென்று பணி செய்யும் பிராந்திய மொழி பத்திரிகையாளர்களே அதிக அச்சுறுத்தல்களைச் சந்திக்க நேர்கிறது. இங்கு பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றத்தை விரைந்து விசாரிக்க வேண்டிய அரசுகளே, பத்திரிகையாளர்கள் மீது வழக்கு தொடுப்பதும், கெடுபிடிகளை அதிகமாக்குவதும் நடைபெற்று வருகின்றன. இது ஆரோக்கியமான போக்கு அல்ல. பத்திரிகைகளுக்கான அச்சுறுத்தல் எப்போதும் இருந்து வந்துள்ளன. இந்தியாவில் மட்டுமல்ல இன்று சர்வதேச அளவிலும் பத்திரிகை சுதந்திரத்துக்காகக் கொடுக்கக்கூடிய விலை மிகவும் அதிகமாகவே உள்ளது" என்றார்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு