விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி காவல் நிலையத்தில் அன்பரசன் என்பவர் இரண்டாம் நிலை காவலராகவும், ஆறுமுகவேல் என்பவர் தலைமைக் காவலராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் இவர்கள் இருவரும் கடந்த மாதம் நாருகாபுரம் கிராமத்தில் மர்மமான முறையில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரின் கணவர் ஜான்பாண்டியனை கைது செய்து விருதுநகர் கிளைச்சிறையில் அடைத்துள்ளனா். பின்னர், ஜாண்பாண்டியனை விருதுநகர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்திவிட்டு வெளியே அழைத்து வந்துள்ளனா்.

அப்போது காவலர்கள் இருவரும் 'டீ' குடிக்க ஆசைப்பட்டு டீக்கடைக்கு வந்தபோது காவலர்களுக்கு நன்கு அறிமுகமானவரும் கைதியாக அழைத்துவரப்பட்டவருக்கு உறவினருமான, இருக்கன்குடியைச் சேர்ந்த மாடேஸ்வரன் அங்கிருந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் போலீஸ் துப்பாக்கியை கொடுத்த காவலர்கள் "நாங்கள் 'டீ' குடித்துவிட்டு வரும்வரை துப்பாக்கியை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தநேரத்தில், மாடேஸ்வரன் கையிலிருந்த போலீஸ் துப்பாக்கியுடன் விதவிதமான போஸ்களில் போட்டோ எடுத்து தனது வாட்ஸ்அப் பக்கத்திலும் ஸ்டேட்டஸாகவும் பதிவேற்றம் செய்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுபற்றிய தகவல் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகருக்கு தெரியவரவும், விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

போலீஸ் விசாரணையில், காவலர்கள் அன்பரசன், ஆறுமுகவேல் இருவரும் பணியில் அஜாக்ரதையாக செயல்பட்டது உறுதியானது. இதைத்தொடர்ந்து காவலர்கள் அன்பரசன் மற்றும் ஆறுமுகவேல் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவிட்டுள்ளார்.