Published:Updated:

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்... `பொன்மகள் வந்தாள்' படம் சொல்லும் தரவுகள் உண்மைதானா?!

Ponmagal vanthal
Ponmagal vanthal

குழந்தைகளுக்கு வீடுதான் பாதுகாப்பான இடம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நமக்கு இந்த தரவுகள் உணர்த்தும் செய்தி பயத்தை உண்டாக்குகிறது.

பொன்மகள் வந்தாள்... கொரோனா நோய்த் தொற்று, அதன் காரணமாகப் போடப்பட்டுள்ள ஊரடங்கால் தியேட்டரில் ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் பல பஞ்சாயத்துகளுக்குப் பிறகு அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. நெட்டிசன்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இந்தப் படத்தின் கதைக் கரு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பானது.

இந்தப் படத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக சில முக்கிய வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த வசனங்களுக்கு ஏற்ற ஆதாரபூர்வ தரவுகள் இருக்கின்றனவா என்பதை அலசுவதுதான் இந்தக் கட்டுரை.

பொன்மகள் வந்தாள்
பொன்மகள் வந்தாள்

``குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்குற மாநிலங்களில் தமிழகம் 3-ம் இடத்துல இருக்குறதா தேசிய குற்ற ஆவண அறிக்கை சொல்லுது''

படத்தின் எண்ட் கிரெடிட் போடும்போது வரும் வசனம் இது. குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் கடத்தல், கொலை, குழந்தைகளை வேலைக்கு வைப்பது உள்ளிட்ட மொத்த குற்றப் பிரிவுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் தமிழகம் அந்தப் பட்டியலில் முதல் 5 இடத்துக்குள் கூட இல்லை. ஆனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் 3-வது இடத்தில் இருக்கிறது என்பது உண்மைதான்.

இந்தியாவில், 2018-ம் ஆண்டில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களில், போக்ஸோ சட்டப் பிரிவு 4 மற்றும் 6-ன் கீழ், மொத்தம் 21,605 வழக்குகள் பதியப்பட்டுள்ளன, என்கிறது மத்திய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை. இதில், தமிழகத்தில் மட்டும் 1,457 வழக்குகள் உள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த வழக்குகளில் 1,442 வழக்குகள் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளாகவும் 15 வழக்குகள் ஆண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளாகவும் பதியப்பட்டுள்ளன.

Crime against Children, 2018
Crime against Children, 2018
Vikatan Infographics

இதையொட்டி இன்னொரு தரவையும் நாம் இங்கே நினைவு கூற வேண்டியிருக்கிறது. உலக அளவில், ஆபாசப் படங்கள் அதிகம் பார்ப்பதில், இந்தியாதான் முதல் இடம் வகிக்கிறது என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு தகவல் வெளியிட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் பேர் ஆபாசப் படங்களைப் பார்ப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆபாச தளங்களில் சென்று ஆபாசப் படங்கள் பார்ப்பவர்களின் பட்டியலை ஐ.பி அட்ரஸோடு அந்தந்த மாநில காவல்துறைக்கு அனுப்பியது மத்திய அரசு.

தமிழகத்தில் மொத்தம் 5,000 பேர் தடைசெய்யப்பட்ட வலைதளங்களுக்குச் சென்று ஆபாசப் படம் பார்த்திருக்கிறார்கள். இதில், 3,000 பேர் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களைப் பார்த்தவர்கள்.
தமிழகக் காவல்துறை

2017-ம் ஆண்டில் போரூர் சிறுமி, அரியலூர் பெண், 2018-ம் ஆண்டில், கத்துவா சிறுமி என்று மக்களின் கவனம் பெறும் வழக்குகள் மிக மிகக் குறைவு என்பதைத்தான் மேற்கண்ட புள்ளி விவரங்கள் அனைத்தும் உணர்த்துகின்றன. 2018-ம் ஆண்டு மட்டும் போக்ஸோ சட்டத்தின் அனைத்துப் பிரிவுகளின் கீழும், இந்திய அளவில் 39,827 வழக்குகளும் தமிழ்நாடு அளவில் 2,023 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இந்தியாவில், ஆண்டுக்கு 30,000 வழக்குகளுக்கு மேல் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதியப்படுகின்றன. இதில் 2018-ம் ஆண்டு நிலவரப்படி பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் தொடர்பாக போக்ஸோ சட்டப் பிரிவு 4 மற்றும் 6-ன் கீழ் போடப்பட்ட வழக்குகளில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 63,636. ஆனால், இதில் தண்டனை வழங்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை வெறும் 6,988 மட்டுமே என்கிறது மத்திய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை.

POCSO ACT infographics
POCSO ACT infographics
Vikatan Infographics

போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்ற வழக்குகளில், தண்டனை விதிக்கப்படும் விகிதமானது மிகவும் குறைவாக உள்ளது. 2018-ம் ஆண்டில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வரும் பாலியல் வன்கொடுமை குற்றப் பிரிவுகள் 4 மற்றும் 6-ன் கீழ் போடப்பட்டுள்ள 100 சதவிகித வழக்குகளில் வெறும் 31.6 சதவிகித வழக்குகளுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், நாளொன்றுக்கு 109 குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம்
`பொன்மகள் வந்தாள்' படத்தில் வரும் வசனம்
நம்ம குழந்தைங்க எல்லாம் பாதுகாப்பா இருக்கிறதா நம்ம நம்பிக்கிட்டுருக்கோம். ஆனா, என்னைக்காவது ஒருநாள் உங்க குழந்தைங்ககிட்ட அன்பா இருக்கும்போது அக்கறையோடு கேட்டுப்பாருங்க... உங்களுக்கு ரொம்ப தெரிஞ்ச ஒருத்தரே உங்க குழந்தைகிட்ட அத்துமீறுனதா சொல்லுவாங்க.

மேற்கண்ட இந்த வசனம், பெற்றோர்களை பதைபதைக்கச் செய்கிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைச் செய்பவர்கள் அந்தக் குழந்தையின் குடும்பத்தினருக்கு நன்கு தெரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற அர்த்தத்தில் சொல்லப்படும் இந்த வசனைத்தை நிரூபிக்கும் வகையிலான சில தரவுகளைக் கடந்த மாதம் வெளியிட்டது CHILDLINE INDIA அமைப்பு.

மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலோடு குழந்தைகள் பாதுகாப்புக்காக இயங்கி வரும் அமைப்புதான் இந்த `சைல்டுலைன் இந்தியா அமைப்பு'. இந்தியாவில் குழந்தைகள் பாதுகாப்புக்காக, 1098 என்ற ஹெல்ப்லைன் சேவை எண்ணை அறிமுகப்படுத்தியது இந்த அமைப்பு. 24 மணிநேரமும் இந்த ஹெல்ப்லைன் எண் ஆனது செயல்பட்டுக் கொண்டிருக்கும். இந்த எண்ணிற்குக் கடந்த மார்ச் 20 முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வந்த அழைப்புகள் பற்றி வெளியிடப்பட்டுள்ள தரவுகள் நம்மை அச்சத்தில் ஆழ்த்துகின்றன.

Crime against children
Crime against children
Vikatan Infographics

மார்ச் 20 முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை ஹெல்ப்லைன் எண்ணுக்கு வந்த மொத்த அழைப்புகள் 3.07 லட்சம் என்று அந்த தரவுச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், 92,105 அழைப்புகள் பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக வந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்தச் செய்தியில் லாக்டெளன் அறிவிக்கப்பட்ட பின், அதாவது மார்ச் 25 முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வந்த அழைப்புகளின் எண்ணிக்கை எப்போதும் விட 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மார்ச் 20 முதல் ஏப்ரல் 1 வரையிலான 13 நாள்களில், 8 நாள்கள் லாக்டெளனுக்குள் அடங்கும்.

குழந்தைகளுக்கு வீடுதான் பாதுகாப்பான இடம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நமக்கு இந்த தரவுகள் உணர்த்தும் செய்தி பயத்தை உண்டாக்குகிறது. லாக்டெளன் காரணமாக நாடே வீட்டிற்குள் அடைந்து கிடந்த காலத்திலும்கூட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான அழைப்புகள் அதிகம் வருகிறதென்றால், அந்தக் குழந்தைகளுக்கு தொந்தரவு தரும் நபர்கள் பெற்றோர்களுக்கு நிச்சயம் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள் என்பது உறுதியாகிறது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்
இந்தியர்களின் காப்புரிமை பற்றி `ஹீரோ' படம் சொல்லும் கணக்கு சரிதானா? விரிவான அலசல்!

இந்த தரவுகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் குழந்தைகளின் பாதுகாப்புக்காக, இந்தியாவில் இயங்கி வரும் அரசு சாரா அமைப்பான `சாக்‌ஷி' அமைப்பின் தலைவர் ஸ்மிதா பாரதி ஒரு வாதத்தை முன் வைக்கிறார்...

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடப்பதைக் கண்டுபிடிப்பதே மிகவும் கடினம். காரணம், இந்த வகை குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அந்தக் குழந்தையின் குடும்பத்துக்குத் தெரிந்தவர்களாகவும் அந்தக் குடும்பத்தின் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும்தான் இருக்கிறார்கள். இந்த வகையான குற்றங்களில் ஈடுபடுபவர்களில், 90 சதவிகிதம் பேர் உறவினர்களாகவோ, நண்பர்களாகவோ அல்லது அக்கம் பக்கத்தினராகவோதான் இருப்பார்கள்.
ஸ்மிதா பாரதி, சாக்‌ஷி அமைப்பு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கண்டுபிடிப்பதே கடினம் என்று சாக்‌ஷி அமைப்பின் ஸ்மிதா பாரதி முன் வைக்கும் கருத்தை வைத்துப் பார்த்தால், போக்ஸோ சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள 39,827 வழக்குகள் தவிர்த்துப் பதியப்படாத எத்தனையோ ஆயிரம் வழக்குகள் இந்தியா முழுவதும் மறைந்து கிடக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் குழந்தைகள் நலனுக்கு ஆதரவாக 27 ஆண்டுகளாக இயங்கி வருகிறது இந்த `சாக்‌ஷி அமைப்பு'. தனியாகவும் அரசு அமைப்புகளோடு சேர்ந்தும் குழந்தைகள் நலனுக்காகப் பல விஷயங்களைச் செய்து வரும் சாக்‌ஷி அமைப்பு சமீபகாலமாக ஒரு ஹேஷ்டேக் கொண்டு செயல்பட்டு வருகிறது. #MakeHomeASafeSpace அதாவது குழந்தைகளுக்கு வீட்டை பாதுகாப்பான இடமாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் இந்த ஹேஷ்டேக். மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நல அமைச்சகத்தோடு இணைந்து இந்தத் திட்டம் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை எதிர்த்து பிரசாரம் செய்வதோடு குழந்தைப் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு வகுப்புகளையும் நடத்தி வருகிறது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாட்டின் மூலை, முடுக்கெங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை மேற்கண்ட தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன. சமீப காலமாக இதைத் தடுப்பதற்கான வழிமுறைகளில் முக்கியமானதாகக் குழந்தைகள் நல ஆர்வலர்களால் முன் வைக்கப்படும் ஒரு கருத்தைத்தான் `பொன்மகள் வந்தாள்' திரைப்படமும் முன் வைத்து முடித்திருக்கிறது. அதே கருத்தைத்தான் இந்த கட்டுரையின் முடிவிலும் சொல்லப் போகிறோம்.

பெண் குழந்தைகளுக்கு, யார் யாரிடம் பேச வேண்டும், எந்தெந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும், செல்லக் கூடாது, உடை எப்படி அணிய வேண்டும் என்று சொல்லி வளர்க்கிற பெற்றோர்கள், ஆண் குழந்தைகளிடமும் பெண்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும், அவர்களிடம் எப்படி மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதைச் சொல்லி வளர்க்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்...
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்...
Illustration: Prem Davinci / Vikatan

மேற்கண்ட வழிமுறையை பின்பற்றினால் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் முழுவதுமாக இல்லாமல் போய்விடும் என்று சொல்லிவிட முடியாது. கடந்த சில ஆண்டுகளாக `குட் டச்', `பேட் டச்' என்று பெண் பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்கத் தொடங்கியிருக்கும் நம் சமூகம், ஆண் பிள்ளைகளிடம் இது குறித்து வாய் திறப்பதே இல்லை. ஆண் பிள்ளைகள் அப்படி வளர்க்கப்படும் பட்சத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் பாதியாகக் குறையும் வாய்ப்புகள் உள்ளன.

அடுத்த கட்டுரைக்கு