Published:Updated:

`நாளிதழ்களில் விளம்பரம்.. ஃப்ளைட் டிக்கெட்.. ஹோட்டல் ரூம்!'- டிப் டாப் ஆசாமியால் ஏமாந்த பட்டதாரிகள்

சிம்ரன் சிங்
சிம்ரன் சிங்

வேலை வாங்கித்தருவதாகக் கூறி மோசடி செய்த டிப் டாப் ஆசாமியை போபால் போலீஸார் கைது செய்தனர்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சிம்ரன் சிங் பெரிய நிறுவனங்களில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி இதுவரை 30-க்கும் அதிமான நபர்களை ஏமாற்றியுள்ளார். இவரிடம் பணத்தைப் பறிகொடுத்தவர்கள் அளித்த புகாரின் பேரில் சிம்ரன் சிங் கைதாகியுள்ளார். டிப் டாப் உடை, சரளமான ஆங்கிலம் பேசும் திறன் போன்றவற்றால் எளிதில் இவரது வலையில் விழுந்து விடுகின்றனர். பிரபல நாளிதழ்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வேலைவாய்ப்பு தொடர்பாக விளம்பரங்களை போலியான நிறுவனத்தின் பெயரில் வெளியிடுவார். இதைப் பார்க்கும் மக்கள் அவரது எண்ணைத் தொடர்பு கொள்வார்கள். தனது டார்கெட்டுகளை சரியாக ஃபிக்ஸ் செய்யும் சிம்ரன் சிங் அவர்களை போபாலுக்கு வரவழைப்பார்.

`நாளிதழ்களில் விளம்பரம்.. ஃப்ளைட் டிக்கெட்.. ஹோட்டல் ரூம்!'- டிப் டாப் ஆசாமியால் ஏமாந்த பட்டதாரிகள்

இவரிடம் ஏமாந்தவர்கள் எல்லாம் பட்டதாரிகள்தான். வேலை தேடுபவர்கள் மட்டுமல்லாமல் ஏற்கெனவே பணியில் இருப்பவர்களையும் குறி வைத்துச் செயல்பட்டு வந்துள்ளார். வெளிநாட்டில் வேலை கிடைத்தும் சிலருக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அதுபோன்ற நபர்களைக் குறிவைத்து அதற்கான விளம்பரங்களையும் கொடுத்துள்ளார். எளிதில் விசா கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனத் தனது வழக்கமான பாணியில் விளம்பரம் செய்துள்ளனர். பெண்கள்தான் இவரின் முதல் டார்கெட்டாக இருந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த ராக்கி என்ற பெண் அளித்த புகாரின் பேரில் தான் சிம்ரன் சிங் தற்போது காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். நவம்பர் 16-ம் தேதி தன் கணவரைக் காணவில்லை என்று அந்தப்பெண் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். அந்தப் புகாரில், ``என் கணவர் ராஜேந்திரா 15-ம் தேதி அவருடைய நண்பர் அனில் பவாருடன் போபால் சென்றார். அவர் திரும்பி வராததால் மொபைல் போனுக்குத் தொடர்புகொண்டேன். போன் நீண்டநேரம் ரிங் ஆகிறது. ஆனால், யாரும் போனை எடுக்கவில்லை. என் கணவரின் வங்கிக்கணக்கிலிருந்து 2 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது என அந்தப்புகாரில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அவர் கணவரின் மொபைல் போன் இருக்கும் லோகேஷனை காவல்துறையினர் ட்ரேஸ் செய்தனர். அப்போது அவரது மொபைல் எம்.பி.நகர் பகுதியில் இருந்த ஹோட்டலில் இருப்பதாகக் காட்டியது. இதையடுத்து போலீஸார் அந்தப்பகுதிக்கு விரைந்தனர். அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் நண்பர் இருவரும் மயங்கிய நிலையில் இருந்தனர். இதையடுத்து இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

`நாளிதழ்களில் விளம்பரம்.. ஃப்ளைட் டிக்கெட்.. ஹோட்டல் ரூம்!'- டிப் டாப் ஆசாமியால் ஏமாந்த பட்டதாரிகள்

இதன்பின்னர் காவல்துறையினர் ராஜேந்திராவிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ``எனக்கு ஐரோப்பாவில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால் விசா நடைமுறையில் சில சிக்கல்கள் இருந்தன. அப்போதுதான் நாளிதழில் விளம்பரம் பார்த்தேன். எளிதில் விசா கிடைக்க ஏற்பாடு செய்து தரப்படும் என விளம்பரம் இருந்தது. அதற்குக் கீழே கொடுக்கப்பட்ட எண்ணைத் தொடர்புகொண்டு பேசினேன். போபாலில் உள்ள அலுவலகத்துக்கு வருமாறு கூறினார்கள். இதையடுத்து என் நண்பருடன் இங்கு வந்தேன். அந்த நிறுவனத்தைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவரைச் சந்தித்தோம்.

அவர் இந்த ஹோட்டலில் நாங்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். இந்த ஹோட்டலில் எங்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் டீ, வழங்கினார். அந்த டீ-யைப் பருகிய சில நிமிடங்களில் நாங்கள் மயக்கமடைந்தோம். இருவரின் மோதிரம், கிரெடிக் கார்டுகள், ரூ.6000 ரொக்கம் மற்றும் 2 லட்சத்துக்கான காசோலையை அந்த நபர் திருடிச்சென்றுவிட்டார்கள்” எனக் கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போதே மும்பையைச் சேர்ந்த மதுஸ்ரீ என்ற பெண் காவல்நிலையத்தில் ஒரு புகார் தெரிவித்தார்.

மும்பை கல்யாண் பகுதியைச் சேர்ந்த மதுஸ்ரீ கணவருடன் விவாகரத்து ஆன நிலையில் தனிமையில் வசித்து வருகிறார். காவல்நிலையத்தில் அவர் அளித்த புகார் மனுவில், “ஜெர்மன் நிறுவனத்தில் பர்சனல் செக்ரட்டரி வேலைக்குப் படித்த பெண்கள் வேண்டும் என்ற விளம்பரத்தை நாளிதழில் பார்த்தேன். இதையடுத்து அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டு பேசினேன். போபாலில் நேர்காணல் நடப்பதாகக் கூறினார்கள். நவம்பர் 15-ம் தேதி போபால் செல்வதற்கான விமான டிக்கெட்டும் அந்த நிறுவனம் சார்பில் அனுப்பிவைக்கப்பட்டது. நான் போபால் சென்றதும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர் தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

எம்.பி.நகர் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்க வைத்தார். டின்னர் முடிந்த பின்னர் எனக்கு காபி கொடுத்தார். அதை வாங்கிப்பருகியதும் மயக்கமடைந்தேன். கண் விழித்துப்பார்த்தபோது நான் கொண்டு வந்திருந்த பணம், ஏடிஎம் கார்டுகள் திருடுபோயின. மேலும், நான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தேன்” எனக் கூறியிருந்தார்.

ஏடிஎம்
ஏடிஎம்

இந்தப் புகாரையடுத்து காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். இருவரையும் ஏமாற்றியது அலெக்ஸ் என்ற பெயரில் உலாவந்த சிம்ரன் சிங் என்பது தெரியவந்தது. தன்னை அலெக்ஸ் எனக்கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் சிம்ரன் சிங்கை போபால் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் 30-க்கும் அதிகமானவர்களை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``சிம்ரன் சிங் இருப்பிடத்திலிருந்து ஏராளமான போலி ஆவணங்கள், போலியான ஆதார் அட்டை, அடையாள அட்டைகளைக் கைப்பற்றியுள்ளோம். சரளமான ஆங்கிலப்பேச்சு, டிப் டாப் உடை என சந்தேகம் வராதபடி நடந்து வந்துள்ளார். நிறைய தூக்க மாத்திரைகள் அங்கிருந்தன. தூக்க மாத்திரைகள் மூலமாகத்தான் அனைவரையும் மயக்கமடைய வைத்துள்ளார் எனத் தெரிகிறது.

கைது
கைது

ஒவ்வொரு சம்பவத்துக்குப் பிறகும் தனது மொபைல் எண்ணை மாற்றி வந்துள்ளார். போலீஸிடம் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக தான் உபயோகப்படுத்தும் மொபைல் போனை சைலன்ட் மோடில் வைத்து ரயில் அல்லது பேருந்தில் வைத்து விடுவார். போலீஸாரை ஏமாற்றுவதற்காகத்தான் இவ்வாறு செய்ததாகக் கூறியுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதியில் மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். முழுமையான விசாரணைக்குப் பின்னரே எத்தனை நபர்கள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவரும்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு