Published:Updated:

`என் பெற்றோரால் உயிருக்கு ஆபத்து!’ -ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் கலங்கிய திருநங்கை

திருநங்கை சசி
திருநங்கை சசி

திருநங்கையாக மாறியவர், பெற்றோர் தன்னை மிரட்டுவதாகக் காவல் நிலையத்தில் சக திருநங்கைகளுடன் வந்து புகார் அளித்துள்ள சம்பவம், ஜோலார்பேட்டையில் நடந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சொரங்கன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர், சம்பத். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இரண்டாவது மகனான சசி (21), உடலில் ஏற்பட்ட ‘ஹார்மோன்’ மாற்றத்தால், தன்னைப் பெண் போல் பாவிக்கத் தொடங்கினார். பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அவர், திடீரென திருநங்கைகளுடன் சேர்ந்து வெளியில் சுற்றியுள்ளார்.

Vikatan

பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த அவர், கடந்த மாதம் வீட்டிலிருந்து திடீரென வெளியேறினார். அண்ணனும் தங்கையும் போன் செய்தபோது, மும்பை செல்வதற்காக ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருப்பதாகக் கூறினார்.

குடும்பத்தினர் ரயில் நிலையத்துக்கு விரைந்துசென்று, அவரை மிரட்டி வீட்டுக்கு அழைத்துவந்தனர். தன்னுடைய உடல்நிலை மாற்றத்தைத் தெளிவாக எடுத்துக்கூறியும் பெற்றோர் புரிந்துகொள்ளாததால், யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டிலிருந்து மீண்டும் வெளியேறினார்.

என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. பெற்றோரின் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு வழங்க வேண்டும்.
திருநங்கை சசி

ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணராஜபுரத்துக்குச் சென்ற சசி, ‘எங்கு செல்வது’ என்று தெரியாமல் தவித்தார். அப்போது, அங்கிருந்த திருநங்கை சத்யா என்பவரைச் சந்தித்து உதவி கேட்டார். அவரும், சசியைத் தன் வீட்டுக்கு அழைத்துச்சென்றார். சசியும் திருநங்கையாக மாறினார். தன் பெயரையும் அக்ஷிதா என்று மாற்றிக்கொண்டார்.

இதையறிந்த பெற்றோர், போன் மூலம் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துவருவதாகக் கூறப்படுகிறது. இதனால், அச்சமடைந்த அவர், சக திருநங்கைகள் 7 பேரை அழைத்துக்கொண்டு ஜோலார்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்தார். ‘என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. பெற்றோரின் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று புகார் அளித்தார்.

ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார்
ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார்

இதையடுத்து போலீஸார், சசியின் பெற்றோரை அழைத்து அறிவுறுத்தினர். தொடர்ந்து, சக திருநங்கைகளோடு சசி பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். இந்தப் பஞ்சாயத்தால், காவல் நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு