Published:Updated:

மாணவியை கத்தி, கரண்டியால் கொடூரமாகத் தாக்கிய டியூஷன் ஆசிரியை!- தாயின் அனுமதியுடன் நடந்த கொடுமை

காலாண்டுத் தேர்வு எழுத முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த மாணவியை ஆசிரியர்கள் தனியாக அழைத்து விசாரித்தபோது, அதிர்ச்சித் தகவல் வெளியானது.

காயம்பட்ட சிறுமி
காயம்பட்ட சிறுமி

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரத்தைச் சேர்ந்தவர் ஞானத்தாய். இவரது மகள் ஐஸ்வர்யா, பெத்தேல்புரம் அரசு உதவிபெறும் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துவருகிறார். ஞானத்தாய் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரான ஜெசி மோளிடம் தனது மகள் ஐஸ்வர்யாவை டியூஷனுக்கு அனுப்பியுள்ளார்.

`இரும்புவாளியால் மாணவனைத் தாக்கிய டியூஷன் டீச்சர்!' - போலீஸ் புகாரால் வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறைவு

ஐஸ்வர்யாவுக்குக் கணிதப் பாடம் சரியாக வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, டியூஷன் ஆசிரியை ஜெசிமோள் கத்தி மற்றும் கரண்டியால் குழந்தையைத் தாக்கியுள்ளார்.

முதுகில் ரத்தக்கட்டு மற்றும் காயம் ஏற்பட்ட நிலையில், இன்று காலாண்டுத் தேர்வு எழுதுவதற்காக மாணவி பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கு தேர்வு எழுத முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த மாணவியை ஆசிரியர்கள் தனியாக அழைத்து விசாரித்துள்ளனர்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குமுதா
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குமுதா

அப்போது, மாணவியின் முதுகில் ரத்தக்கட்டு மற்றும் காயங்கள் இருந்ததைப் பார்த்த ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கும், காவல்துறைக்கும் தகவல் அளித்துள்ளனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குமுதா, நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், குழந்தையின் தாய் ஞானத்தாய் கொடுத்த புகாரின் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸார் டியூஷன் ஆசிரியை ஜெசி மோள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "நன்றாகப் படிக்கவில்லை என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்'' எனக் குழந்தையின் தாய் ஞானத்தாய் கூறியிருக்கிறார். அதனால் ஜெசி மோள், கத்தி, கரண்டிகளைக் கொண்டு மாணவியைத் தாக்கியுள்ளார். நேற்று மாலை டியூஷனுக்குச் சென்ற குழந்தை இன்று காலை வரை டியூஷன் ஆசிரியையின் வீட்டில் அழுதுகொண்டே இருந்துள்ளது. இன்று பள்ளிக்குச் செல்வதற்கான சீருடையை டியூஷன் ஆசிரியையிடம் கொடுத்து, சிறுமியை ஸ்கூலுக்கு அனுப்பி வைக்கும்படி ஞானத்தாய் கூறியுள்ளார். சிறுமி தாக்கப்பட்ட விவரம் ஞானத்தாய்க்குத் தெரியும். ஆனாலும் அவர் குழந்தையைச் சரியாகக் கவனிக்கவில்லை" என்றனர்.

காயம்பட்ட சிறுமி
காயம்பட்ட சிறுமி

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குமுதா கூறுகையில், "காயம் பட்டுள்ளதால், குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். மாணவியின் தாய் அவரை சரியாகக் கவனிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, சிகிச்சைக்குப் பிறகு சிறுமியர் காப்பகத்தில் குழந்தையைச் சேர்ப்போம். உடல்நிலை சரியான பிறகு, குழந்தை எங்கு செல்ல விருப்பப்படுகிறதோ அங்கு அனுப்பிவைப்போம்" என்றார்.