Published:Updated:

சிவகங்கை: `மீன் குழம்புதானேவெக்கச் சொன்னேன்!’ - மனைவியைக் கோடரியால் தாக்கிய கணவர்

கைதுசெய்யப்பட்ட பாண்டி
கைதுசெய்யப்பட்ட பாண்டி

மீன் குழம்பு வைத்துக் கொடுக்காத மனைவியைக் கோடரியால் தாக்கிய கணவனைக் கைதுசெய்து போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த பாண்டி - கண்ணகி தம்பதி அண்ணா நகர் பகுதியில் வசித்துவருகின்றனர். ஆட்டோ ஓட்டுநராக இருந்துவரும் பாண்டி, தினமும் குடித்துவிட்டு மனைவியோடு சண்டையிடுவது வழக்கம் என்கிறார்கள். குடிப்பழக்கம் இருப்பதால், தினமும் காரசாரமாகக் குழம்புவைக்க வேண்டும் என பாண்டி கேட்பாராம்.

கண்ணகி - பாண்டி
கண்ணகி - பாண்டி

இந்தநிலையில், நேற்று இரவு மது போதையில் பாண்டி வந்தபோது, அவரின் மனைவி வீட்டிலிருந்த அம்மியில் சட்னி அரைத்துக்கொண்டிருந்திருக்கிறார். இதைப் பார்த்த பாண்டி கண்ணகியிடம், `வாய்க்கு ருசியா மீன் குழம்புவெக்கச் சொன்னேன். உன்னை யாரு சட்னி அரைக்கச் சொன்னா...’ எனக் கேட்டிருக்கிறார்.

குமரி: `துவைத்த துணியைக் காயப்போடவில்லை’ - மனைவி கொலையில் கைதான முன்னாள் ராணுவ வீரர்

அப்போது கண்ணகி, `நீ கெட்ட கேட்டுக்கு மீன் குழம்புதான் குறையா...’’ என்பதுபோல் பேசியதாகச் சொல்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த பாண்டி, மனைவியைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். அப்போது தப்பிக்க முயன்ற கண்ணகியை அருகே இருந்த சிறிய அளவில் இருந்த கோடரியை எடுத்து தாக்கியிருக்கிறார். இதில் படுகாயமடைந்த கண்ணகி நிலைகுலைந்தார். அப்போது கண்ணகியை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவருக்கு காரைக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் பாண்டி
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் பாண்டி

தற்போது கண்ணகிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தநிலையில், பாண்டியின் மகன் நாகேஷ்வரன் கொடுத்த புகாரின்பேரில் காரைக்குடி வடக்கு காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``பாண்டி மீது ஏற்கெனவே மதுரை கீரைத்துறையில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது. தன் தாயைக் கட்டையால் அடித்த கேஸில் விசாரணை நடந்துவரும் நிலையில், ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். மேலும், தன் மூத்த மனைவியின் மூக்கை அறுத்த வழக்கும் நிலுவையில் இருக்கிறது. தற்போது தன் இரண்டாவது மனைவி கண்ணகியைத் தாக்கியது குறித்து விசாரணை நடத்திவருகிறோம்’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு