கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம், விராஜ்பேட்டை தாலுகாவிலுள்ள கெடாமுல்லூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இஸ்லாமியர் பெயரில் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை அவற்றில் பதிவிட்டுவந்திருக்கிறார்.
இந்த நிலையில், அந்த இளைஞர் கர்நாடக மக்கள் மிகவும் புனிதமாகக் கருதும் காவிரி தேவி தொடர்பாக அநாகரிகமான முறையில் கருத்துகளைப் பதிவிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, சிலர் `இஸ்லாமிய இளைஞர் ஒருவர் காவிரி தேவி குறித்து அநாகரிகமாகப் பதிவிட்டிருக்கிறார்’ என காவல்துறையிடம் புகார் அளித்திருக்கின்றனர்.

இது தொடர்பாக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு அந்த நபரைக் கைதுசெய்தது. அதன் பிறகே அவர் `இந்து' எனத் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர் பதிவுகளை காவல்துறை ஆராய்ந்தபோது அதில் கோடவா சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு எதிராகவும், அவ்வப்போது சர்ச்சைச் சம்பவங்களுக்கு ஏற்றவாறும் முஸ்லிம்போல போலிக் கணக்கில் கருத்து பதிவிட்டுவந்தது தெரியவந்தது. போலீஸார் அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் முஸ்லிம் போர்வையில் போலி சமூக வலைதளக் கணக்கு தொடங்கி, சர்ச்சைக் கருத்துகளைப் பதிவிட்டுவந்த நபரின் செயல் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.