Published:Updated:

கூலிப்படை கூடாரமாகிறதா கரூர்?

கரூர்
பிரீமியம் ஸ்டோரி
கரூர்

திக்திக் கொலைகள்...

கூலிப்படை கூடாரமாகிறதா கரூர்?

திக்திக் கொலைகள்...

Published:Updated:
கரூர்
பிரீமியம் ஸ்டோரி
கரூர்
காவிரி, அமராவதி, நொய்யல் பாயும் மண்ணில், சமீபமாக அதிகரித்துவரும் கொலைகளால் ரத்த ஆறு பாய்வது கரூர் மாவட்ட மக்களைக் கலக்கமடையச் செய்துள்ளது.

கரூர் மாவட்டம் நங்கவரம் என்ற ஊரில் அன்பழகன் என்கிற பால் வியாபாரி சமீபத்தில் கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். பால் வியாபாரத்துக்காக மோட்டார் சைக்கிளில் அன்பழகன் சென்றபோது, நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிச் சாய்த்துவிட்டுத் தப்பிச் சென்றது. இதை தொடர்ந்து கதிரேசன், வினோத், ராஜேஷ், குமார் ஆகிய நான்கு இளைஞர்கள் ‘கொலையை நாங்கள்தான் செய்தோம்’ என்று குளித்தலை காவல்நிலையத்தில் சரணடைந்தனர். மது போதையின்போது ஏற்பட்ட மோதல்தான் இந்தக் கொலைக்குக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கதிரேசனின் தந்தையுடன் அன்பழகனுக்கு மோதல் ஏற்பட்டதில், கதிரேசனின் கையை அன்பழகன் உடைத்துவிட்டதாகவும், அதற்குப் பழிவாங்கவே அன்பழகனை கொலை செய்ததாகவும் சர்வசாதாரண மாகச் சொல்லியிருக்கின்றனர் இந்த இளைஞர்கள். இப்போது இந்த நான்கு பேரையும் பழிவாங்குவதற்கு கூலிப்படை இறக்கிவிடப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரத்திலேயே பேசிக்கொள்கின்றனர்.

கூலிப்படை கூடாரமாகிறதா   கரூர்?

கரூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் சமீபகாலமாக இதுபோன்று நிறைய கொலைகள் நடப்பதாகவும், சில கொலைகள் மட்டுமே வெளியில் தெரிவதாகவும் சொல்லி அதிரவைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இதுகுறித்து அவர்கள் நம்மிடம் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

‘‘முதலைப்பட்டியில் ஆக்கிரமிக்கப்பட்ட 40 ஏக்கர் ஏரி நிலத்தை மீட்க சட்டப் போராட்டம் நடத்திய வீரமலை என்பவரையும் அவரின் மகன் நல்லதம்பியையும் ஆறு பேர் கொண்ட கும்பல் எட்டு மாதங்களுக்கு முன்பு வெட்டிக் கொன்றது. ஏரி நிலத்தை ஆக்கிரமித்திருந்தவர்கள்தான் கூலிப்படை யினரை வைத்து இந்தக் கொலையைச் செய்தார்கள். அதில் முதல் குற்றவாளியான ஜெயகாந்தன்மீது ஏற்கெனவே இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

அதேபோல், சில வருடங்களுக்கு முன் நெய்தலூர் - நச்சலூர் சாலையில் உள்ள ஒரு காட்டில் கட்டாணிமேட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை ரௌடிகள் சிலர் கொலைசெய்தனர். இவையெல்லாம் வெளியே தெரிந்தவை. வெளியே தெரியாமல் பல கொலைகள் நடக் கின்றன. அவற்றையெல்லாம் போலீஸாரே பஞ்சாயத்து செய்து முடித்துவிடுகின்றனர். நச்சலூர், நங்கவரம், கட்டாணிமேடு, நெய்தலூர் காலனி, சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி என திருச்சி மாவட்ட எல்லையை யொட்டியுள்ள கரூர் மாவட்டப் பகுதிகளில் கூலிப்படையினர் பெருகி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலா னோர் 25 வயதுக்குள் உள்ள இளைஞர்கள்தான்” என்று அதிர்ச்சி தந்தனர்.

 கதிரேசன் - வினோத் - ராஜேஷ் - குமார்
கதிரேசன் - வினோத் - ராஜேஷ் - குமார்

குளித்தலை, தோகைமலை காவல் நிலையத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றும் சில காவலர்களே, இந்தக் கூலிப்படை இளைஞர்களை வளர்த்துவிடுவதாகவும், கூலிப் படையினர் நடத்தும் விருந்துகளில் போலீஸார் சிலர் அடிக்கடி பங்கேற்பதாகவும் சிலர் ரகசியமாகச் சொல்கின்றனர்.

சமூக ஆர்வலர் சண்முகம் நம்மிடம் பேசியபோது, ‘‘பொன்மாணிக்கவேல், திரிபாதி ஆகியோர் திருச்சி சரக டி.ஐ.ஜி-யாக இருந்தபோது, இந்தப் பகுதிகளில் புறக்காவல் நிலையங்கள் அமைக்க முயற்சி நடந்துள்ளது. ஆனால், என்ன காரணத்தினாலோ அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டது. முதலைப்பட்டி ஏரி விவகாரத்தில் நடந்த இரட்டைக் கொலையில் குற்றவாளிகளைத் தப்பவிட்டதாக, குளித்தலை ஆய்வாளராக இருந்த பாஸ்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நச்சலூர் பகுதியில் விரைவில் ஒரு காவல்நிலையம் அமைத்து நேர்மையான அதிகாரிகளை நியமித்தால்தான், இந்தப் பகுதி கூலிப்படையின் கூடாரமாவதைத் தடுக்க முடியும்’’ என்றார்.

வீரமலை - நல்லதம்பி
வீரமலை - நல்லதம்பி

இதுகுறித்து கரூர் மாவட்ட எஸ்.பி பாண்டியராஜனிடம் பேசினோம். ‘‘அன்பழகன் கொலை, முன்விரோதம் காரணமாக நடந்தது. தன் அப்பாவை அன்பழகன் அடித்ததால், கூட்டாளிகளைச் சேர்த்துக்கொண்டு கதிரேசன் செய்த கொலை அது. வீரமலையையும் அவரின் மகனையும் கொலைசெய்தது ஏரி ஆக்கிரமிப்பாளர்கள்தான். கூலிப்படையெல்லாம் இல்லை. அது கரூர், திருச்சி பார்டர் என்பதால், ஒன்றிரண்டு கேரக்டர்கள் நெகட்டிவாக இருக்கலாம். மற்றபடி, அங்கே பெரிதாக ஒன்றுமில்லை. அங்கே காவல்நிலையம் அமைப்பது பற்றி நானும் மேலிடத்துக்குப் பரிந்துரை செய்கிறேன்’’ என்றார்.

சண்முகம் - பாண்டியராஜன்
சண்முகம் - பாண்டியராஜன்

திருச்சி சரக ஐ.ஜி-யான அமல்ராஜிடம் பேசியபோது, பிரச்னையை விரிவாகக் கேட்டவர் ‘‘உடனே அதுபற்றி விசாரிக்கிறேன்’’ என்றார்.

விசாரிப்பதுடன் விரைவாக தீர்வுகாண வேண்டியதும் அவசியம்!