Published:Updated:

`4 அடிகூட இல்லாத சிறுமி எப்படி 9 அடி உயரத்தில் தூக்கு மாட்டிக்கொள்வார்?” #Justice4WalayarSisters

வாளையார் சிறுமிகள்
வாளையார் சிறுமிகள்

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வாளையார் சிறுமிகளுக்கு நீதி கேட்டு, உண்ணாவிரதம், கடையடைப்பு என்று கடவுளின் தேசமே போராட்டக்களமாக மாறிவருகிறது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகள் மீதான குண்டாஸ் ரத்துசெய்யப்பட்ட அதே நேரத்தில்தான், அந்தக் கொடூரமும் நடந்துள்ளது. ஆனால், அந்தச் சம்பவம் கடவுளின் தேசத்து அரக்கர்களால் நடத்தப்பட்டது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் இருக்கிறது வாளையார்.

தமிழக – கேரள எல்லையான அங்கு, 2017-ம் ஆண்டு பட்டியலினத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அவர்களது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சடலத்தை முதலில் பார்த்தது, அந்தச் சிறுமியின் தங்கை.

வாளையார் சிறுமிகள்
வாளையார் சிறுமிகள்
Manji Charutha

அடுத்த 52 நாள்களுக்குப் பிறகு அந்தச் சிறுமியின் 9 வயது தங்கையும் அதே வீட்டில் தூக்கில் சடலமாகத் தொங்கியுள்ளார். பிரேதப் பரிசோதனையில், இரண்டு சிறுமிகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டது உறுதியானது. இதையொட்டி, மஞ்சிமா (Manji Charutha ) எனும் மாணவி வரைந்த மேற்கண்ட ஓவியமும் வைரலாக #Justice4WalayarSisters எனும் ஹேஷ்டேக்கில் இதுகுறித்துப் பலரும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துவந்தனர்.

இந்த வழக்கில் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு குற்றவாளிகள் விடுதலையாகினர். குற்றவாளிகள் அனைவரும் ஆளும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் கேரளாவைக் கொந்தளிக்க வைத்துள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராகவும், பினராயி விஜயன் தலைமையிலான சி.பி.எம் அரசாங்கத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் வலுத்துள்ளன.

போராட்டம்
போராட்டம்
``தற்கொலை பண்ற வயசா; அந்தப் பிஞ்சுகளுக்கு என்ன தெரியும்?"- வாளையார் சிறுமிகள் வழக்கில் தாய் வேதனை

இந்த விஷயத்தை திசைதிருப்பத்தான் மாவோயிஸ்ட்டுகள் என்கவுன்டர் நடத்தப்பட்டதாகவும், பினராயி அரசாங்கத்துக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதுகுறித்து கேரள ஆதிவாசிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் மாரியப்பன், ``முதல் சிறுமி கொல்லப்பட்டதை, இரண்டாவது சிறுமி நேரில் பார்த்துள்ளார். சாட்சியாக இருந்ததால்தான், இரண்டாவது சிறுமியையும் அதே மாதிரி கொலை செய்துள்ளனர். இதில், ஒரு குற்றவாளி சிறுமிகளின் சகோதரர் (சித்தப்பா மகன்) என்பதுதான் கொடுமையே. குற்றவாளிகள் சி.பி.எம் என்பதால், அரசு வழக்கறிஞர் சரியாக வாதாடவில்லை.

மாரியப்பன்
மாரியப்பன்

இதனால், குற்றவாளிகள் வெளியில் வந்துவிட்டனர். பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க, டெல்லியிலிருந்து அதிகாரிகள் வந்தனர். ஆனால், அந்த அதிகாரியை சந்திக்கவிடாமல், பெற்றோரை சிலர் கடத்திவிட்டனர். வாளையாரில் மட்டும், கடந்த 10 ஆண்டுகளில் 27 பெண்கள் பாலியல் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது நடைபெறும் போராட்டங்கள் எல்லாம் கண்துடைப்புதான். இதில், காங்கிரஸ் மற்றும் சி.பி.எம் கட்சிகளுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை. குற்றவாளிகள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. பணம் மற்றும் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில்தான் இங்கு நீதி வழங்கப்படுகிறது.

வாளையர் சிறுமிகளுக்கான அஞ்சலி
வாளையர் சிறுமிகளுக்கான அஞ்சலி

இந்தியாவிலேயே, கேரளாவுக்குத்தான் படிப்பறிவு அதிகம் என்று சொல்கிறார்கள். ஆனால், இங்கு பகுத்தறிவு என்பது துளிகூட இல்லை. வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டுதான், பெண் குழந்தைகளை வளர்த்துவருகிறோம்" என்றார் வேதனையாக.

பாலக்காடு நாடாளுமன்றத் தொகுதி எம்.பி ஶ்ரீகண்டன் (காங்கிரஸ்), ``முதல் குழந்தை இறந்தபோதே, வழக்கை முறையாக விசாரித்திருந்தால், இரண்டாவது குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. கொலை நடந்ததிலிருந்தே, இந்த விஷயத்துக்காக நாங்கள் குரல்கொடுத்துவருகிறோம். அதன் பிறகுதான், குற்றவாளிகளைக் கைதுசெய்தனர். இதனால், சற்று அமைதியாக இருந்தோம்.

ஶ்ரீகண்டன்
ஶ்ரீகண்டன்

தற்போது, குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டதால், மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம். சி.பி.எம் அரசின் அழுத்தம் இந்த வழக்கில் அதிகமாகவே இருக்கிறது. கேரள போலீஸ் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம். எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ தான் மறு விசாரணை செய்ய வேண்டும்" என்றார்.

``இதைத் தற்கொலை என்றும் சிலர் சொல்லிவருகின்றனர். அந்தக் குழந்தைகளுக்கு மரணம் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் எப்படி தற்கொலை செய்துகொள்வார்கள்? அவர்களின் உயரமே, நான்கு அடிக்குக் கீழேதான். அவர்கள் எப்படி 9 அடி உயரத்தில் தூக்கு மாட்டிக்கொள்ள முடியும்?

வாளையார் சிறுமிகளுக்கான் அஞ்சலி
வாளையார் சிறுமிகளுக்கான் அஞ்சலி

ஆரம்பத்திலிருந்தே, போலீஸார் இந்த வழக்கை விசாரித்த விதம் சரியில்லை. எனவே, சி.பி.ஐ தான் வழக்கை விசாரிக்க வேண்டும். முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தும் இதை வலியுறுத்தியுள்ளோம்" என்கின்றனர், சிறுமிகளின் பெற்றோர்.

சி.பி.எம் கட்சியின் பாலக்காடு மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், ``குற்றவாளிகள் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்களை சி.பி.எம் ஆதரிக்கவும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பமே சி.பி.எம் ஆதரவாளர்கள்தான்.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்

இதில், குற்றவாளிகளைக் காப்பாற்ற நாங்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை. குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை" என்றார்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன், நேரடியாகக் களத்தில் விசாரணை நடத்திவருகிறார். அவரிடம் பேசினோம், ``அரசு வழக்கறிஞரோ, காவல்துறையோ உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை. தொடக்கத்திலிருந்தே, காவல்துறை இந்த வழக்கில் அலட்சியமாக இருந்துவருகிறது.

வாளையார் சிறுமிகள் வீட்டில் முருகன்
வாளையார் சிறுமிகள் வீட்டில் முருகன்

எனவே, கேரள அரசு தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோரிடம் விசாரணை நடத்துவதற்காக, வருகின்ற 11-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளோம். இப்போது இவ்வளவுதான் சொல்ல முடியும்" என்றார்.

பாலியல் கொலை செய்யப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கேட்டு, உண்ணாவிரதம், கடையடைப்பு என்று கேரளா, போராட்டக்களமாக மாறிவருகிறது. காங்கிரஸ், பி.ஜே.பி போன்ற எதிர்க்கட்சிகள், பழங்குடி சங்கங்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.

வாளையார் சிறுமிகள்
வாளையார் சிறுமிகள்

வருகின்ற 16-ம் தேதி, பாலக்காட்டில் தொடங்கி வாளையார் வரை மாபெரும் பேரணி நடக்க இருக்கிறது. ஆனால், முதல்வர் பினராயி விஜயன் இப்போது வரை இந்த விஷயத்தில் மௌனம் காத்துவருகிறார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, மாவோயிஸ்ட்டுகளின் தொடர்பு இருப்பதாக, சி.பி.எம் பிரமுகர்கள் இரண்டு பேர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் (UAPA) கைது செய்யப்பட்டுள்ளனர். வாளையார் சிறுமிகளின் கொலைக்குக் காரணமானவர்களும் அதே சி.பி.எம் பிரமுகர்கள்தான்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

அப்படி இருக்கும்போது, ஏன் இந்த பாரபட்சம் மிஸ்டர் பினராயி? பாதிக்கப்பட்டவர்கள், உங்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என்று உங்கள் மாவட்டத் தலைவர் சொல்கிறார். உங்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கு நீங்கள் காட்டும் நீதி இதுதானா?

காஷ்மீர் கத்துவா சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்டபோது, ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றீர்களே பினராயி? அதே வாளையாறில் நடக்கும்போது மௌனம் காப்பது ஏன்? ஒடுக்கப்பட்டவர்களுக்குக் குரல் கொடுப்பதுதானே இடதுசாரிகளின் சித்தாந்தம்?

ஆனால், சமீபகாலமாக உங்களது நடவடிக்கைகளுக்கு, உங்கள் கூட்டணியிலிருக்கும் சி.பி.ஐ கட்சியே எதிர்த்து நிற்கிறது. சிறுமிகளின் சாவுக்கு நீதி வாங்கித் தருவது, அரசின் கடமை மட்டுமல்ல, அதுதான் பொதுவுடைமை.

அடுத்த கட்டுரைக்கு