சிறுத்தையைச் சமைத்து உண்ட கொடூரம் - கேரளாவில் முதல்முறை எனப் பதறும் வனத்துறை!

கேரள மாநிலம் மாங்குளம் பகுதியில் சிறுத்தைக்கு சுருக்கு வைத்து வேட்டையாடி, அதன் இறைச்சியை சமைத்து உண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாங்குளம் வனச்சரக வனச்சரகத்தில் சிலர் சிறுத்தையை வேட்டையாடியதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,கேரள வனத்துறையினர்,அந்த வேட்டை கும்பலை தேடும் பணியில் களமிறங்கினர்.

மாங்குளம் பகுதியில் தொடர் விசாரணை மேற்கொண்டதில் வினோத்(45), குரியகோஸ்74, பினு (50), குஞ்சப்பன் (54), வின்சென்ட் (50) ஆகிய 5 நபர்கள் சிறுத்தை வேட்டையில் ஈடுபட்டதை உறுதி செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து சிறுத்தையின் தோல், பற்கள், நகங்கள் மற்றும் 10 கிலோ அளவிலான சிறுத்தையின் உடல் பாகங்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், அந்த 5 நபர்களும் சிறுத்தையை வேட்டையாடி கொன்று தோல் உள்ளிட்டவற்றைப் பதப்படுத்த எடுத்துவிட்டு, சிறுத்தையின் உடல் பாகங்களை உணவாக சமைத்து உண்டுள்ளனர். சிறுத்தையைக் கொன்று அதனை உணவாக சமைத்து சாப்பிட்டிருப்பதை அறிந்த கேரள வனத்துறையினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாங்குளம் வனத்துறை அதிகாரி ஒருவர்,``வினோத் என்பவர் வைத்த சுருக்கு வலையில் சுமார் 6 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை ஒன்று கடந்த புதன்கிழமை காலை சிக்கி இறந்துள்ளது. இதனை யாருக்கும் தெரியாமல் சிலரது உதவியுடன் வினோத், தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

சிறுத்தையின் தோல் உள்ளிட்ட பாகங்களை எடுத்து பத்திரப்படுத்திவிட்டு, அதன் இறைச்சியை உணவாக சமைத்து உண்டுள்ளனர். இப்படி நடந்திருப்பது இதுவே முதல் முறை. தகவல் கிடைத்த 4 மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கைது செய்துள்ளோம். இவர்கள் வேறு சில வன விலங்குகளை வேட்டையாடியதும் தெரிய வந்துள்ளது. விசாரணைக்குப் பின் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.