Published:Updated:

`குஞ்சு பொரிக்கப்பட்ட 10 பாம்பு முட்டைகள்!' -கேரளப் பெண் கொலை வழக்கில் அதிர்ச்சி வாக்குமூலம்

உத்ராவை கடித்த பாம்பு
உத்ராவை கடித்த பாம்பு

சில நாள்களுக்குப் பிறகு உத்ராவின் தாய் வீட்டுக்குப் பாட்டிலில் கருநாகப் பாம்புடன் சென்ற சூரஜ், மனைவிக்கு பழச்சாறு மற்றும் பாயசத்தில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த உத்ரா என்ற இளம்பெண்ணை அவரின் கணவர் சூரஜ் பாம்பைவிட்டு கடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில் தனது வீட்டில் வைத்து அணலி வகைப் பாம்பை விட்டு உத்ராவை கடிக்கவைத்துள்ளார் சூரஜ். அப்போது வலி ஏற்பட்டதால் சத்தம்போட்ட உத்ராவை காலதாமதமாக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அதில் உயிர்தப்பி தன் தாய் வீட்டில் தொடர் சிகிச்சையில் இருந்தார் உத்ரா.

சில நாள்களுக்குப் பிறகு உத்ராவின் தாய் வீட்டுக்குப் பாட்டிலில் கருநாகப் பாம்புடன் சென்ற சூரஜ், மனைவிக்கு பழச்சாறு மற்றும் பாயசத்தில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். நள்ளிரவு நேரத்தில் பாட்டிலில் இருந்த பாம்பைத் திறந்து மனைவி உத்ரா மீது விட்டுள்ளார். அவரை இரண்டு முறை பாம்பு கடித்துள்ளது. மனைவி இறந்ததை உறுதி செய்த சூரஜ் தூக்கம் வராமல் அங்கேயே பொழுதைக் கழித்துவிட்டு அதிகாலையில் அறையைவிட்டு வெளியேறினார். பொழுது புலர்ந்த பின்னரும் உத்ரா அறையைவிட்டு வெளியே வராததால் அவரின் தாயார் அவரை எழுப்பியுள்ளார். அப்போது சலனம் இன்றிக் கிடந்த மகளை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு பாம்பு கடித்ததால் உத்ரா இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பாம்பு கடித்ததால் இறந்த உத்ரா
பாம்பு கடித்ததால் இறந்த உத்ரா

இதற்கிடையில் உத்ரா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் விசாரணை நடத்தியதில் பணம், நகைகளுக்காக உத்ராவை பாம்பைக் கொண்டு கடிக்க வைத்து கொலை செய்ததை சூரஜ் ஒப்புக்கொண்டார். அதற்காக சுரேஷ் என்பவரிடம் பத்தாயிரம் ரூபாய்க்கு பாம்பை விலைக்கு வாங்கியதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து பாம்பு பிடிக்கும் சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்த அதேசமயம் பாம்பைப் பயன்படுத்தி கொலை நடந்ததால் வனத்துறையினரும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

`ரூ.10,000; ஏசி ரூமில் பாம்பு!’ மனைவி கொலையில் சிக்கிய கணவன் | Crime

கருநாகப் பாம்பு சுரேஷுக்கு எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்துவதற்காக சூரஜ் மற்றும் சுரேஷ் ஆகியோரை ஏழு நாள்கள் கஷ்டடியில் எடுத்து வனத்துறை விசாரணை நடத்திவருகிறது. விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து கேரள வனத்துறை தரப்பில் கூறுகையில்,``ஆற்றிங்கல்லில் ஒரு பகுதியில் வைத்து கருநாகப் பாம்பை பிடித்ததாக சுரேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் பாம்பு பிடித்த இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினோம். அவர் பாம்பு பிடிக்கப் பயன்படுத்திய உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளோம்.

கைது செய்யப்பட்ட சுரேஷ்
கைது செய்யப்பட்ட சுரேஷ்

கருநாகப் பாம்பை பிடித்த சுரேஷ் அங்கிருந்து பத்து பாம்பு முட்டைகளையும் எடுத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தப் பாம்பு முட்டைகளை வீட்டில் அடை வைத்து குஞ்சுகளைப் பொறிக்க வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த முட்டைகளில் இருந்து வெளியே வந்த பாம்புக் குஞ்சுகளை ரகசியமாக வளர்த்துவருகிறாரா அல்லது வெளியே விட்டுவிட்டாரா எனத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு