அலசல்
அரசியல்
கார்ட்டூன்
Published:Updated:

சொந்தக்காரங்களே இப்படி செஞ்சுட்டாங்களே!

கொலை
பிரீமியம் ஸ்டோரி
News
கொலை

வாளையாறு சிறுமிகள் கொலையில் நீதியை நிலைநாட்டுவது எப்போது?

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகள் நான்கு பேரும் என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில், வாளையாறு சிறுமிகளை பலாத்காரம் செய்து கொன்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்ட விவகாரம், கேரளத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் வாளையாற்றில் 2017-ம் ஆண்டு இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்த முக்கிய குற்றவாளிகள் மூன்று பேரும், 2019 - அக்டோபர் மாதம் விடுதலையாகினர்.

குற்றவாளிகள், கேரளத்தை ஆளும் சி.பி.எம் பிரமுகர்கள் என்பதால் ‘காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை, அரசு வழக்கறிஞர் சரியாக வாதாடவில்லை’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, இரட்டைச் சகோதரி களின் மரணத்துக்கு நீதி கேட்டு கடவுளின் தேசம் போராட்டத்தில் இறங்கியது. #JusticeForWalayarSisters என்ற ஹேஷ்டேக்கில் சமூக வலைதளங்களில் பதிவுகள் காட்டுத் தீயாகப் பரவின.

நீண்டநாள்களுக்குப் பிறகு இந்த விஷயத்தில் மௌனம் கலைத்த முதல்வர் பினராயி விஜயன், இந்த வழக்கில் வாதாடிய அரசு வழக்கறிஞர் லதா ஜெயராஜை பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி ஹனீஃபா தலைமையில் நீதி விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிலையில், குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டவர்கள், அதே பகுதிகளில் எப்போதும்போல் உலாவிக்கொண்டிருந்தனர். அரசாங்கத்தையும் நீதியையும் நம்பி இனி பயனில்லை என நினைத்த அந்தப் பகுதி மக்கள், முக்கிய குற்றவாளி என முன்பு கைதுசெய்யப்பட்டு பிறகு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட மது என்பவர்மீது சில நாள்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில்தான் உயிரிழந்த சிறுமிகளின் வீட்டுக்குச் சென்றோம். சிறுமிகளின் தாய்தான் நம்மிடம் பேசினார். ‘‘நாங்க கட்டட வேலை செய்யும் கூலித்தொழிலாளிங்க. காலையில 6 மணிக்குப் போனா, நைட் 8 மணிக்குத்தான் வீட்டுக்கு வருவோம். பக்கத்துல சொந்தக்காரங்க இருக்காங்க. அவங்கள நம்பித்தான் ரெண்டு குழந்தைகளையும் விட்டுட்டுப் போவோம். முதல் குற்றவாளி என் சித்தப்பா மகன்; ரெண்டாவது குற்றவாளி என் அக்கா மகன். மூணாவது குற்றவாளியும் எங்க சொந்தக்காரன்தான். யாரை நம்பி விட்டுட்டுப் போனோமோ, அவங்களே நாங்க வீடு திரும்புறதுக்குள்ள மன்னிக்க முடியாத படுபாதகத்தைச் செஞ்சுட்டாங்க.

சொந்தக்காரங்களே இப்படி செஞ்சுட்டாங்களே!

வழக்கு நடந்துட்டிருக்கும்போதே, என் மகள்களோட சாவுக்குக் காரணமானவங்க சகஜமா சுத்திக்கிட்டு இருக்கிறதை ஏத்துக்க முடியல. ஒரு பெண்ணை பாலியல் கொலை செஞ்சதுக்காக ஹைதராபாத்துல நாலு பேரைச் சுட்டுக் கொன்னிருக்காங்க. இங்கே ரெண்டு குழந்தைங்க பாலியல் கொலை செய்யப்பட்டிருக்காங்க. ஆனா, இந்தக் குற்றவாளிகளை எதுவும் செய்யலைன்னு நினைக்கும்போது, வேதனை நெஞ்சை அறுக்குது. நாங்களும் இந்த நாட்டுலதானே இருக்கோம்!

என் பெரிய மக, விளையாட்டுல ரொம்ப ஆர்வமா இருப்பா. `பெரிய ஆளாகி, உங்களை நல்லா பார்த்துக்கணும்’னு அடிக்கடி சொல்லுவா. பெரிய மகளை கொலை செஞ்ச படுபாவிங்க அன்னிக்கு எங்க வீட்டுல இருந்து வெளியே வந்ததை என் சின்ன மக பார்த்திருக்கா. அதை போலீஸ்கிட்டயும் சொன்னா. அவ செத்துப்போறதுக்கு முந்தைய நாள்கூட, ‘நான் போலீஸாகி, என் அக்கா சாவுக்குக் காரணமானவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பேன்’னு அக்கம்பக்கத்துல இருக்கிறவங்ககிட்ட சொல்லியிருக்கா. ஆனா, படுபாவிங்க அவளையும் அதே மாதிரி கொன்னுட்டாங்களே’’ என்று கதறி அழுதார்.

அழுது முடிக்கட்டும் என்று சிறிது நேரம் காத்திருந்தோம். ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார். ‘‘என் மகள்களைப் பற்றிப் பேசினா, வார்த்தைகளே வர்றதில்ல. எப்படியெல்லாமோ இருந்திருக்க வேண்டிய எங்க வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு. என் மகள்களைக் கொன்ன படுபாவிங்க வெளியில இருந்தா, இன்னும் பல பெண் குழந்தைகள் பாதிக்கப்படுவாங்க. காலம் கடத்தாம குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுக்கணும்’’ என்றவர், திடீரென ஆவேசத்துடன் நெஞ்சில் அறைந்துகொண்டு கொலையாளிகளுக்குச் சாபம்விடத் தொடங்கினார்.

வாளையாறு சிறுமிகள் பலாத்கார கொலை வழக்கில் கைதானவர்கள்மீதான புகார்களில் உண்மையில்லை என்று கருதிதான் அவர்களை விடுவித்தது நீதிமன்றம். அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பது உண்மையாக இருக்கும்பட்சத்தில், ‘உண்மையான குற்றவாளிகளை உடனடியாகக் கைதுசெய்து நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தவேண்டும்’ என்று ஒரு காலக்கெடுவையும் நீதிமன்றம் அப்போதே விதித்திருக்க வேண்டும். அரசாங்கத்தையும் இதற்குப் பொறுப்பாக்கி, விசாரணையைத் துரிதப்படுத்தச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், இவை எதுவுமே நடக்கவேயில்லை என்பதுதான் பொதுமக்களின் கோபத்தைக் கிளறிவிட்டிருக்கிறது.

காலம் கடந்த நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். நீதி வழங்கும் நடைமுறைகளில் உள்ள தாமதம்தான், என்கவுன்ட்டர் உள்ளிட்ட சட்டத்தை மீறிய நடவடிக்கைகளையெல்லாம் பொதுமக்களால் வரவேற்கப்படவும் கொண்டாடப்படவுமான சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கி்றது. எனவே, தெளிவாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளைக் கைதுசெய்து உரிய தண்டனையை விரைவில் வழங்கவேண்டும். அப்போதுதான் சட்டம் மற்றும் நீதியின்மீது மீண்டும் மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்குவதாக இருக்கும்!