இந்தியாவில் பரவலாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமரின் பிறந்த தினமான ராம நவமி கொண்டாடப்பட்டது. அப்போது மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து கைது, கண்ணீர்ப்புகைக் குண்டு, தடியடி எனக் கடுமையான நடவடிக்கைக்குப் பின்னர் அந்தப் பகுதிகளில் சூழல் கட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில் பீகார் மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்திலுள்ள முகமதுபூர் கிராமத்தில் நடந்த ராம நவமி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள், அங்கிருந்த ஒரு பள்ளிவாசலில் காவிக் கொடியேற்றினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தச் சம்பவத்துக்குப் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில், பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ``இது போன்ற செயல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் பா.ஜ.க-தான் இதற்குக் காரணம் எனக் கூறுபவர்கள் தங்கள் மூளையைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். இத்தகைய செயல்களை பா.ஜ.க ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை. எங்கள் பிரதமர் மோடி சமத்துவம், வளம் மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டின் மீது மட்டுமே நம்பிக்கைகொண்டிருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.