Published:Updated:

`அப்பா பயந்தாங்கொள்ளி; மிரட்டுனா பணம் தருவார்!’ - செல்போன் வாங்க, கடத்தல் நாடகமாடிய பள்ளி மாணவர்கள்

வேலூர் கோட்டை

செல்போன் வாங்குவதற்காகக் கடத்தல் நாடகமாடி, தந்தையிடமிருந்தே பணம் பறிக்க முயன்ற இரண்டு பள்ளி மாணவர்களால், வேலூரே பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.

`அப்பா பயந்தாங்கொள்ளி; மிரட்டுனா பணம் தருவார்!’ - செல்போன் வாங்க, கடத்தல் நாடகமாடிய பள்ளி மாணவர்கள்

செல்போன் வாங்குவதற்காகக் கடத்தல் நாடகமாடி, தந்தையிடமிருந்தே பணம் பறிக்க முயன்ற இரண்டு பள்ளி மாணவர்களால், வேலூரே பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.

Published:Updated:
வேலூர் கோட்டை

வேலூர், கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவரின் 12 வயது மகன், அங்குள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவருகிறான். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் பக்கத்துத் தெருவில் வசிக்கும் தன் நண்பனைப் பார்க்கச் செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்றான். போனவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. நேரம் ஆக ஆக... பதறிப்போன பெற்றோர் மகனைத் தேடி அங்கு சென்றனர். நண்பனும் வீட்டில் இல்லாததால், பதற்றமடைந்த பெற்றோர் இருவரையும் தேடத் தொடங்கினர். நள்ளிரவு 12 மணியைக் கடந்ததும், வியாபாரியின் மனைவிக்கு மர்ம அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மழலைக் குரல் மாறாத மர்மச் சிறுவன், ‘‘நான் கடத்தல்காரன் பேசுறேன். உன் பையனை நான்தான் கடத்தி வெச்சிருக்கேன். ரூ.1 லட்சம் கொடுத்தால் விட்டுடுறேன். இல்லைன்னா, கொன்னுடுவேன்’’ என திக்கி திக்கி ஒருவகையாக டயலாக்கைப் பேசி முடித்தான்.

வேலூர்
வேலூர்

வியாபாரியின் மனைவி, அந்தச் சிறுவனின் மிரட்டலை விளையாட்டாக எண்ணாமல், மகனை எப்படியாவது மீட்க வேண்டுமென நினைத்து தன் கணவரிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் தாமதிக்காமல், வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்குச் சென்று நடந்ததைக் கூறிப் புகாரளித்தனர். அலர்ட் ஆன போலீஸார், அந்த மர்மச் சிறுவனிடமிருந்து மீண்டும் வரும் அழைப்புக்காகக் காத்திருந்தனர். சில நிமிடங்களில் அதே நம்பரிலிருந்து அடுத்த கால் வந்தது. ‘‘கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலையோரத்துல மூன்று ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. நடுவிலுள்ள ஆட்டோவில் பணத்தை வைத்துவிட்டு ஓடிவிடு. கொஞ்ச நேரத்துல உன் பையனை விட்டுடுறோம்’’ என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டான் அந்தச் சிறுவன்.

போலீஸாரின் அறிவுறுத்தலின்பேரில், ஒரு பையில் பணத்துக்கு பதிலாக செங்கல்லை வைத்து மாணவனின் தந்தை அந்தப் பகுதிக்கு எடுத்துச் சென்றார். போலீஸாரும் மறைந்தபடி பின்தொடர்ந்து சென்றனர். அங்கு சென்ற பிறகு, மிரட்டல் சிறுவனிடமிருந்து மீண்டும் போன் வந்தது. ‘‘நாங்கள் இடத்தை மாற்றிவிட்டோம். நீ காட்பாடி சதுப்பேரி ஏரிக் கால்வாய்க்கு வா...’’ என்று கூறினான். சிறிது நேரத்தில் வந்த அழைப்பில், ‘‘காட்பாடி வேண்டாம். இடத்தை மாத்திட்டோம். நீ கொணவட்டத்துக்கே திரும்ப வா...’’ என்று சொல்லி, புதர்மறைவான இடம் ஒன்றுக்கு வரவழைத்தனர். செங்கல் பையுடன் மாணவனின் தந்தை அங்கு சென்றார்.

இருள் சூழ்ந்த இடம் அது. ‘‘அந்த இடத்தில் பையை வைத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் போ...’’ என அதே சிறுவன் பதுங்கியிருந்தபடியே சத்தம் போட்டான். வியாபாரியும் பையை வைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தார். பணப்பை என நினைத்து ஜாலியாக இரண்டு சிறுவர்கள் அந்த இடத்தை நோக்கி புதர் மறைவிலிருந்து வெளியே எழுந்து வந்தனர். அப்போது, அங்கு மறைந்திருந்த போலீஸார் விரைந்து சென்று அவர்களை மடக்கிப் பிடித்தனர். இருட்டில் சிக்கிய இரண்டு பேரையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து பார்த்தபோது, அதில் ஒரு சிறுவன் கடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட மாணவன் என்பதைப் பார்த்து பெற்றோரும், போலீஸாரும் அதிர்ந்துபோயினர். மற்றொருவன் அவனது நண்பன் என்றும் தெரியவந்தது. அவன் 10-ம் வகுப்புப் படித்துவருகிறான். போனில் மிரட்டலாகப் பேசிய சிறுவனும், இந்த மாணவன்தான் எனத் தெரியவந்தது.

செல்போன்
செல்போன்

இரண்டு பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தபோது, அந்தச் சிறுவர்கள் நடத்திய கடத்தல் நாடகமும் வெளிச்சத்துக்கு வந்தது. ஏழாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவனுக்கு உயர்ரக செல்போன் வாங்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. பெற்றோரிடம் கேட்டால் வாங்கித் தர மாட்டார்கள் என அவனுக்கே தெரிந்திருக்கிறது. வியாபாரம் செய்யும் தன் தந்தையிடம் பணம் புழங்குவதை அவன் பார்த்திருக்கிறான். ‘‘அப்பா ஒரு பயந்தாங்கொள்ளி; மிரட்டுனா பணம் தருவார்’’ என்று சொல்லி, தன் நண்பனுடன் சேர்ந்து திட்டமிட்டு, இந்தக் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி ரூ.1 லட்சத்தைப் பறிக்கப் பார்த்திருக்கிறான். கிடைக்கும் பணத்தை இருவரும் பங்கிட்டு, ஆளுக்கொரு செல்போன் வாங்கிக்கொள்ளவும் திட்டம் தீட்டியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு போலீஸ் அதிகாரிகள் அவர்களை எச்சரித்து, அறிவுரை வழங்கி பெற்றோர்களுடன் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவத்தால், வேலூரே பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.