Published:Updated:

காஞ்சிபுரம்: `ரூ.5 லட்சத்தில் ஆரம்பித்து 20 ஆயிரத்தில் முடிந்த பேரம்’ -போலீஸ் வலையில் சிக்கிய இருவர்

கடத்தல்
கடத்தல் ( representational image )

காவல்துறையினரே உறவினர் பேசுவதுபோல, கடத்தல்காரர்களுக்கு போன் செய்து பேசினார். முதலில் ஐந்து லட்சம் கேட்ட கடத்தல்காரர்களிடம் நான்கு லட்சம், மூன்று லட்சம் என்று படிப்படியாகப் பேரம் பேசி, கடைசியில் 20,000 ரூபாய்க்குப் பேரம் முடிவானது.

காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியப்பக்கத்தைச் சேர்ந்த முருகன், மீன் வியாபாரம் செய்துவருகிறார். இவர் கடந்த டிசம்பர் 15-ம் தேதி இரவு 8 மணிக்குத் தன் கடையைப் பூட்டிவிட்டுக் கிளம்பியிருக்கிறார். அப்போது அங்கு இரண்டு பைக்கில் வந்த நான்கு மர்மநபர்கள் முருகனோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். பிறகு கத்திமுனையில் முருகனை பைக்கில் கடத்திச் சென்றிருக்கிறார்கள். முருகனின் மனைவிக்கு போன் செய்த கடத்தல்காரர்கள், `முருகனை விடுவிக்க வேண்டுமென்றால் ரூபாய் ஐந்து லட்சம் தர வேண்டும்’ என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

ஆள் கடத்தல்
ஆள் கடத்தல்

இந்தச் சம்பவம் தொடர்பாக முருகனின் மனைவி ஒரகடம் காவல் நிலையத்தில் 16-ம் தேதி புகாரளித்திருக்கிறார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து, கடத்தல்காரர்களைத் தேடும் பணியைத் தொடங்கினர். மிரட்டல் வந்த எண்ணைக் கொண்டு தேடும் பணியைத் தொடங்கிய, காவல்துறையினர். எடமச்சி மலைப்பகுதியிலிருந்து அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காவல்துறையினரே உறவினர் பேசுவதுபோல, கடத்தல்காரர்களுக்கு போன் செய்து பேசினர். முதலில் ஐந்து லட்சம் கேட்ட கடத்தல்காரர்களிடம் நான்கு லட்சம், மூன்று லட்சம் என்று படிப்படியாகப் பேரம் பேசி, கடைசியில் 20,000 ரூபாய்க்குப் பேரம் முடிவானது. கடத்தல்காரர்கள் பணத்தை திருமுக்கூடல் பகுதிக்குக் கொண்டு வரச் சொல்ல, காவல்துறையினரே உறவினர்கள்போலப் பணத்தை எடுத்துக்கொண்டு சென்றனர்.

கைது
கைது
representational image

பணத்தைப் பெற சிலர் வந்தநிலையில், பணத்தோடு வந்திருப்பவர்கள் காவல்துறையினர் என்று சுதாரித்ததும் முருகனை அப்படியே விட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டனர். அவர்களை விரட்டிச் சென்று இருவரைக் கைதுசெய்து, ஒரகடம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திவருவதோடு, பிறரைத் தேடும் பணியும் முடக்கிவிடப்பட்டிருக்கிறது. நாளைக்குள் அந்தக் கும்பலில் மீதமிருப்பவர்களும் கைதுசெய்யப்படுவார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடத்தும்போது முருகனின் மார்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதோடு, `நான் சாதாரணமான நபர் என்னை ஏன் கடத்தினார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை’ என்றும் காவல்துறையினரிடம் கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு