Published:Updated:

வீரப்பன் கதை இருக்கட்டும்... தேடுதல் வேட்டையில் சிதைந்து போன மக்களின் கதை தெரியுமா?!

வீரப்பன் அலைந்து திரிந்ததாகச் சொல்லப்படும் வனப்பாதைகளில் அமைந்த கிராமங்கள்தோறும் ஆயிரமாயிரம் கதைகள் இருக்கின்றன. அந்தக் கதைகளுக்குக் குரலில்லை, மொழியுமில்லை அவற்றைக் கேட்கச் செவிகளுமில்லை!

மாதியை அந்த மலையடிவார ஒற்றையடிப்பாதையில்தான் சந்தித்தேன். மரங்களும் புதர்களும் அடர்ந்த மலையிலிருந்து சரசரவென வளைந்தும் நெளிந்தும் இறங்கும் அந்தப் பாதையில் மாடுகளை பற்றி விரட்டியபடி இறங்கிக்கொண்டிருந்தார். வதங்கிய கொடி போலிருந்தார் மாதி. சிரிப்பில் மட்டும் அத்தனை மலர்ச்சி. வெற்றிலையால் சிவப்பேரிய பற்கள். மடிப்பிழந்த கற்றைச் சேலை... கண்களில் அழுத்தமான சோகம் இழையோட என்னைப் பார்த்துச் சிரித்தார்.

மாதி ஒரு பழங்குடி மகள். சோளகர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஒரு பெண் எதிர்கொள்ளக்கூடாத எல்லாக் கொடுமைகளையும் எதிர்கொண்டவர். மாதி மட்டுமல்ல, அந்த பாங்காட்டு அடிவாரத்தில் வாழ்ந்த பல பெண்களுக்கு அதுவே நிகழ்ந்தது.

20-ம் நூற்றாண்டின் அதி பயங்கர அரசபயங்கரவாதம் அது. 'வீரப்பன் வேட்டை' என்ற பெயரில் நிகழ்த்திய வன்முறை ஒரு தலைமுறையின் வாழ்க்கையையே சிதலமடைய வைத்துவிட்டது.
சோளகர் தொட்டி மக்கள்
சோளகர் தொட்டி மக்கள்

திறன்மிக்க வேட்டைக்காரனாக, கொலைசெய்து உடல்களை துண்டு துண்டாக வெட்டி காவிரி நதி மீன்களுக்குப் போட்ட கொடூர கொலைகாரனாக, நூற்றுக்கணக்கான யானைகளை கொன்று தந்தங்களைக் கடத்திய கொள்ளைக்காரனாக, சந்தன மரக் கடத்தல்காரனாக வீரப்பனைப் பற்றி மாயங்களும் மர்மங்களும் நிறைந்த பல கதைகள் இன்னும் உயிர்ப்போடு உலவிக்கொண்டிருக்கின்றன. இன்னும் நெடுங்காலம் இந்தக் கதைகள் பேசப்படும்.

ஆனால், வீரப்பனைத் தேடிச்சென்ற காவலர்களாலும் வனத்துறையினராலும் கொடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட அப்பாவி மக்களின் கதைகள் மெல்ல மெல்ல மறக்கப்பட்டு விட்டன. கணவனை இழந்த, மகனைப் பறிகொடுத்த, பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட அபலைப் பெண்கள், கேட்டாலே நெஞ்சை நடுங்கச்செய்யும் கொடூர சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட ஆண்கள்... என வனங்களிலும் மலையடிவாரங்களிலும் வாழும் மக்கள் நெடுங்கால விளைவுகளைச் சுமந்துகொண்டு நடைபிணமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

மாதி, தாளவாடியை ஒட்டியுள்ள சோளகர் தொட்டியைச் சேர்ந்தவர். மாதியின் அண்ணன் பெயர் சித்தன். அரசுப் பதிவேடுகளில் 'துப்பாக்கிச் சித்தன்'. இரண்டு வரிசைகளை உள்ளடக்கிய முப்பது வீடுகளைக் கொண்டது சோளகர் தொட்டி. தொட்டியை ஒட்டி, வனத்தை வெட்டித் திருத்தப்பட்ட விளைநிலங்கள். தர்பூசணி, பீன்ஸ், வாழை, மாவென நிலங்களில் தளும்ப தளும்ப பச்சை பூத்திருக்கிறது. அந்த நிலங்களைக் கடந்தால் மலை. மூன்று புறங்களையும் சூழ்ந்து நிற்கிறது. தொட்டியிலிருந்து விரியும் மண் பாதை போகப்போக குறுகி மலைமீது ஏறும்போது ஒற்றையடிப்பாதையாகி விடுகிறது. அடிவாரத்தில் யானையின் சாணம் சூடாறாமல் கிடக்கிறது. வனத்துக்குள்ளிருந்து விதவிதமான ஒலிகள். முகப்பில், விலங்குகள் தாகமாற்ற ஒரு நீர்நிலையிருக்கிறது. அதையொட்டிய பாதையில் மேலேறி ஆடு மாடுகளை மேய்த்துத் திரும்புகிறார்கள், தொட்டிக்காரர்கள்.

சோளகர் தொட்டி
சோளகர் தொட்டி

"இதோ இந்த மலையிருக்குல்ல... இதுக்கு மேல கல்லடைஞ்ச ஒரு குகையிருக்கு. வீரப்பன்கிட்ட கோவிச்சுக்கிட்டு பேபி வீரப்பன் இங்கே வந்து தங்கியிருந்தான். ஒரு ஆட்காட்டி, மேலேபோயி, பேபி வீரப்பன்கிட்ட நல்லவனாட்டம் பேசி சுட்டுக்கொன்னுட்டு வந்துட்டான். அந்த நேரத்துல இந்த மலையே களேபரமாக் கெடந்துச்சு" என்கிறார் உடன்வந்த நண்பர்.

தொட்டியின் குலதெய்வமாகிய சனீஸ்வரனுக்கு அடுத்த சில தினங்களில் திருவிழா. மக்கள் திருவிழாவுக்குத் தயாராகிக்கொண்டிருந்தார்கள். ஆண்கள் கோயிலைச் சுத்தப்படுத்தி பந்தல் போட்டுக்கொண்டிருந்தார்கள். சித்தன் குத்துக்காலிட்டு அமர்ந்தபடி எல்லோருக்கும் ஆணை பிறப்பித்துக்கொண்டிருந்தார்.

ஒல்லியான தேகம். முறுக்கு மீசை... தலைப்பாகை கட்டியிருந்தார். காதுக்கும் தலைக்குமான இடுக்கில் பீடி சொருகப்பட்டிருக்கிறது. விரலிடுக்கிலும் ஒரு பீடி புகைகிறது...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"உண்மையைச் சொல்லணும்னா அப்போ நான் வீரப்பனை நேர்ல கூடப் பாத்ததில்லை. நானுண்டு, என் வேலையுண்டுன்னு இந்தக் காட்டுல கெடந்து உழண்டுக்கிட்டுக் கெடந்தேன். அதோ இருக்கு பாருங்க சீர்காடு... அது என் பூட்டன் காலத்துல உருவாக்கினது. சோளம், கம்புன்னு எதைப் போட்டாலும் கொத்துக் கொத்தா விளையும். அதுமட்டுமில்லை... இந்தப் பகுதியில் இருக்கிற எல்லா நிலங்களும் எங்க பாட்டன் பூட்டனுங்க உருவாக்கினதுதான். இப்போ இதுல முக்கால் பாகம் எங்கக்கிட்ட இல்லை. கீழ்நாட்டுக்காரனுக போன தலைமுறை ஆள்களை ஏச்சு, மதுப்பழக்கி அவனுக பேருக்கு மாத்திக்கிட்டானுக. நாங்கள்லாம் பழங்குடிகள்... யாருக்கிட்டயும் எதுத்துக் கேள்வி கேட்கமுடியாது. போலிஸ், அதிகாரிங்கள்லாம் அவங்க பக்கம்தான். எதுத்துக் கேள்வி கேட்ட ஒரே ஆளு நான் மட்டும்தான். அதுக்காகவே வஞ்சம் வச்சு என்னை சிக்க வச்சாங்க. என்னால இந்த தொட்டியே பெருந்துயரை அனுபவிச்சிருச்சு..." என்று நிறுத்தி மலையை அண்ணாந்து பார்க்கிறார் சித்தன்.

சோளகர் தொட்டி சித்தன்
சோளகர் தொட்டி சித்தன்

இதோ இந்த சாலைகளில் துளித்துளியாக பட்டுத் தெரித்த ரத்தங்கள் எல்லாம் காய்ந்து விட்டன. வாகனங்களின் உருமல் சத்தம் கேட்டாலே ஆண்கள் தலைதெறிக்க காட்டுக்குள் ஓடி ஒளிய வேண்டும். பெண்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வீடுகளுக்குள் ஒண்டிக்கிடக்க வேண்டும். யாரும் எதையும் மறக்கவில்லை. மறக்க முயல்கிறார்கள். முடியவில்லை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம். சிறை, சித்திரவதைக்கூடங்களெல்லாம் காலத்திற்கும் நினைவை விட்டு அகலாது.

வீரப்பனோடு தொடர்பிருப்பதாக சித்தன் கைது செய்யப்பட்டு வொர்க் ஷாப்புக்குக் கொண்டு செல்லப்பட்டு, உடைக்கு அளவெடுக்கப்பட்ட பிறகு தப்பித்து மனைவியோடு காட்டுக்குள் ஓடியது; சித்தனும் அவர் மனைவியும் காட்டுக்குள் உலவுவதை அறிந்து வீரப்பன் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தன்னோடு சேர்த்துக்கொண்டது; ஒரு கட்டத்தில் வீரப்பனின் செயல்பாடுகள் ஒவ்வாமல் தப்பி வந்து காவல்துறையிடம் சரணடைந்தது; கணவனும் மனைவியும் தண்டனைக்காலம் முடிந்து விடுதலையாகி தொட்டியில் அமைதியாக வாழ்வது... அனைத்தும் அதன்பிறகு பரவலாக எல்லோரும் அறிந்த செய்திகள்தான்.

வீரப்பன் கொல்லப்பட்ட பிறகு தொட்டியில் பதற்றம் தணிந்திருக்கிறது. ஆனாலும் புதிய மனிதர்களைக் கண்டால் கொஞ்சம் மிரளத்தான் செய்கிறார்கள். பல வருடங்களுக்குப் பிறகு சனீஸ்வரனுக்குத் திருவிழா நடத்துகிறார்கள். சோளகர் பாட்டன்களின் வியர்வையிலும் ரத்தத்திலும் உருவாக்கப்பட்ட நிலங்கள், கீழ்நாட்டார் சொத்துகளாகி மலைக்குத் தொடர்பில்லாத பயிர்களையெல்லாம் தாங்கி நிற்கின்றன. மெல்ல மெல்ல மலைக்குச் செல்லும் பாதையை ஆக்கிரமித்து சுருக்கிவிட்டார்கள். இருபக்கமும் மின்வேலிகள் மிரட்டுகின்றன.

சோளகர் தொட்டி
சோளகர் தொட்டி

தொட்டியின் அடுத்த தலைமுறைப் பிள்ளைகள், வனம் சார்ந்த வாழ்க்கையிலிருந்து வெகுவாக விலகிவிட்டார்கள். தொட்டியைச் சேர்ந்த ராஜா தன் மகளை வக்கீலுக்குப் படிக்க வைத்திருக்கிறார்.

"நாங்க பட்ட கஷ்டத்தை எங்க பிள்ளைகள் படக்கூடாதுங்க. துயரத்தோட துயரமா புள்ளைகளைப் படிக்க வச்சுட்டோம். யாரையும் எதிர்த்துக் கேள்வி கேக்கணும். அடிபணிஞ்சு அடிபணிஞ்சு தலைமுறை தலைமுறையா முதுகு கோணிப்போச்சு. எங்க பிள்ளைகளாவது நிமிர்ந்து நிக்கணும். இங்கிருக்கிற பலபேரு பார்க்கத்தான் ஆளாயிருப்பாங்க. உடம்புக்குள்ள ஏகப்பட்ட பிரச்னை. எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு வாழப் பழகிட்டோம். எங்க பிள்ளைககிட்ட இந்த வேலை நடக்காது..." என்கிறார் மாதி.

தொட்டியில் இதுவரை சொல்லப்படாத துயரங்கள் நிறைய இருக்கின்றன. தொட்டியில் மட்டுமல்ல... வீரப்பன் அலைந்து திரிந்ததாகச் சொல்லப்படும் வனப்பாதைகளில் அமைந்த கிராமங்கள்தோறும் அப்படியான ஆயிரமாயிரம் கதைகள் இருக்கின்றன. அந்தக் கதைகளுக்குக் குரலில்லை. மொழியுமில்லை. அவற்றைக் கேட்க செவிகளுமில்லை.

வரலாறு நெடுக குரலற்ற மனிதர்களை ஆதிக்கசக்திகள் அப்படித்தான் நடத்திக்கொண்டிருக்கின்றன. காலம் எல்லாவற்றையும் வருடி வருடி ஆற்றிக்கொண்டிருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு