Published:Updated:

`நம்ம வீட்டுக்குள்ள இதென்ன வித்தியாசமா இருக்கு..?!' -குளித்தலை இளைஞருக்கு நேர்ந்த துயரம்

வெடித்த மர்மப் பொருள்
வெடித்த மர்மப் பொருள்

`என்ன இது நம்ம வீட்டுல வித்தியாசமான பொருள் இருக்குதே' என்று மனைவியிடம் சொல்லிவிட்டு, அந்தப் பொருளைக் கையில் எடுத்திருக்கிறார் சுதாகர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது, நெய்தலூர் காலனி. இந்தப் பகுதியில் இருக்கும் குருணிகாரன் தெருவைச் சேர்ந்தவர் காத்தான். இவரின் மகன் சுதாகர் (வயது 34). விவசாயியான இவர், பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், தனது வீட்டைச் சுத்தம் செய்து, வெள்ளை அடிக்கத் திட்டமிட்டார். அதையொட்டி, வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார். அப்போது, வீட்டுக்குள் மர்மப் பொருள் ஒன்று இருந்துள்ளது.

 வெடித்த இடத்தில்...
வெடித்த இடத்தில்...

அதைப் பார்த்த சுதாகர் பக்கத்து அறையில் இருந்த தன் மனைவியிடம், `என்ன இது, நம்ம வீட்டுல வித்தியாசமான பொருள் இருக்குதே' என்று சொல்லிவிட்டு, அதைக் கையில் எடுத்துள்ளார். திடீரென வெடி வெடித்ததுபோல பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதனால், பதற்றம் அடைந்த சுதாகரின் பெற்றோரும் மனைவியும் வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, சுதாகர் உடலில் ரத்தக்காயத்துடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.

`மின்சார வயர்; தோட்டத்தில் திடீரென சரிந்துவிழுந்த தொழிலாளர்கள்!' - ஊட்டியைப் பதறவைத்த 3 பேர் இறப்பு

உடனடியாக வீட்டில் இருந்தவர்களும் அக்கம்பக்கத்தில் வசித்தவர்களும் சுதாகரை மீட்டு, சிகிச்சைக்காகத் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி சுதாகர் இறந்தார்.

இந்தச் சோக சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளித்தலை டி.எஸ்.பி கும்மராஜா தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும், புதுக்கோட்டையிலிருந்து தடயவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு, வெடித்து சிதறிக் கிடந்த மர்மபொருள்களின் பாகங்களைக் கைப்பற்றி, ஆய்வுக்காக எடுத்துச் சென்றார். இதுகுறித்து, சுதாகரின் பெற்றோர் குளித்தலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

 வெடித்த இடத்தில்...
வெடித்த இடத்தில்...

அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து, வெடித்துச் சிதறியது என்ன பொருள், அங்கே எப்படி வந்தது எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மர்மப் பொருள் வெடித்ததில் பலியான சுதாகருக்குத் திருமணமாகி மனைவியும் 3 வயதுடைய மகனும் உள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு