Published:Updated:

குருவிகுளம்: சுடுகாடு பாதை ஆக்கிரமிப்பு? - பிணத்தை ஆளாளுக்கு கைமாற்றித் தூக்கிச் சென்ற அவலம்!

மூதாட்டி உடலை சுமந்து செல்லும் உறவினர்கள்

சில தினங்களுக்கு முன்பு வயதான மூதாட்டி உயிரிழந்தார். அவரை சுடுகாடு கொண்டு செல்வதற்கான பாதை ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததால் காட்டுப் பாதையில் உறவினர்கள் மாற்றி மாற்றி கையில் தூக்கிச் சென்ற வீடியோ வைரலாக பரவுகிறது.

குருவிகுளம்: சுடுகாடு பாதை ஆக்கிரமிப்பு? - பிணத்தை ஆளாளுக்கு கைமாற்றித் தூக்கிச் சென்ற அவலம்!

சில தினங்களுக்கு முன்பு வயதான மூதாட்டி உயிரிழந்தார். அவரை சுடுகாடு கொண்டு செல்வதற்கான பாதை ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததால் காட்டுப் பாதையில் உறவினர்கள் மாற்றி மாற்றி கையில் தூக்கிச் சென்ற வீடியோ வைரலாக பரவுகிறது.

Published:Updated:
மூதாட்டி உடலை சுமந்து செல்லும் உறவினர்கள்

தென்காசி மாவட்டம் வடக்கு குருவிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம், வாகைக்குளம், அந்த கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியான பாப்பாத்தியம்மாள் என்பவர் சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அவர் உடலை சுடுகாடு எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டதாக உறவினர்கள் புலம்புகிறார்கள்.

வாகைக்குளம் கிராமம்
வாகைக்குளம் கிராமம்

வாகைக்குளம் மக்கள் பயன்படுத்தும் சுடுகாடு செல்வதற்கான பாதையை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து காம்பவுண்ட் சுவர் கட்டிவிட்டார். அதனால் வண்டியில் வைத்து பிணத்தை எடுத்துச் செல்வதாக இருந்தால் தெற்கு குருவிகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராமநேரி என்ற கிராமத்தின் தெரு வழியாகவே செல்ல வேண்டும். ஆனால் அந்த கிராமத்தினர், சடலத்தை எடுத்துச் செல்ல எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.

இரு கிராமங்களிலும் பட்டியல் சமூகத்தினரே வசித்தபோதிலும் அவர்களுக்குள் உள்ள உட்பிரிவு காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே சுமுகமான நிலை காணப்படவில்லை எனத் தெரிகிறது. அதனால் வாகைகுளம் கிராமத்தில் யாராவது இறந்துவிட்டால் காட்டுப் பாதை வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குச் செல்ல வேண்டும்.

பிணத்துடன் சுடுகாடு செல்லும் உறவினர்கள்
பிணத்துடன் சுடுகாடு செல்லும் உறவினர்கள்

ஒற்றையடிப் பாதையில் புதர்கள் மண்டிக் கிடக்கும் பகுதி வழியாகச் செல்பவர்கள், பிணத்தைக் கையில் தூக்கியபடியே நடக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு பாப்பாத்தியம்மாள் என்ற மூதாட்டி இறந்ததும் அவர் உடலை அது போல தூக்கிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.

பாப்பாத்தியம்மாள் உடலைத் தனியாளாக கைகளில் சுமந்து சென்ற கோபிநாத் என்ப்வர் கூறுகையில், ``சுடுகாடு செல்லும் சாலை ஆக்கிரமிக்கப்பட்டதால் மாற்றுப் பாதையாக காட்டு வழியாக பிணத்தைக் கையில் சுமந்து செல்கிறோம். நான் தூக்கிச் சென்றபோது கைகள் வலித்ததால் இன்னொருவர் மாற்றி உதவி செய்தார்.

உறவினர்கள்
உறவினர்கள்

காட்டு வழியில் ஒருவர் மட்டுமே நடக்க முடியும் என்பதால் ஆளாளுக்கு கொஞ்ச தூரம் தூக்கிச் சென்று சுடுகாடு செல்கிறோம். மழைக் காலங்களில் இது மாதிரி செல்வதில் சிக்கல் இருக்கிறது. அதனால் சுடுகாடு செல்லும் பாதையை உருவாக்கிக் கொடுக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருக்கிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

இந்த விவகாரம் குறித்து சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரான ராஜாவிடம் கேட்டதற்கு, ``வாகைகுளம் கிராம மக்களின் பிரச்னை பற்றி எனது கவனத்துக்கு வந்ததும் அதிகாரிகளிடம் பேசி, 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுடுகாடு செல்லும் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். விரைவில் அதற்கான பணி தொடங்கப்பட இருக்கிறது” என்றார்.