Published:Updated:

செத்துக்கிடந்த சிறுத்தை; மின்வேலியில் சிக்கியதா? - பேரணாம்பட்டு வனப்பகுதியில் தொடரும் அதிர்ச்சி

உயிரிழந்த சிறுத்தை

பேரணாம்பட்டு அருகே மர்மமான முறையில் பெரிய சிறுத்தை ஒன்று இறந்துகிடந்தது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.

செத்துக்கிடந்த சிறுத்தை; மின்வேலியில் சிக்கியதா? - பேரணாம்பட்டு வனப்பகுதியில் தொடரும் அதிர்ச்சி

பேரணாம்பட்டு அருகே மர்மமான முறையில் பெரிய சிறுத்தை ஒன்று இறந்துகிடந்தது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.

Published:Updated:
உயிரிழந்த சிறுத்தை

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வனச்சரகக் காப்புக் காடுகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமிருக்கின்றன. கணக்கெடுப்பில் 10-க்கும் அதிகமான சிறுத்தை ஜோடிகள் குட்டிகளோடு சுற்றுவதாக வனத்துறை தெரிவிக்கிறது. வனப்பகுதியையொட்டி மேய்ச்சலுக்குவிடப்படும் ஆடு, மாடுகளை இந்தச் சிறுத்தைகள் கடித்து, வேட்டையாடுவதும் அவ்வப்போது நிகழ்கின்றன. சிலநேரங்களில், அருகிலிருக்கும் கிராமங்களுக்குள் புகுந்தும் பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. இந்த நிலையில், வனப்பகுதிக்கு அருகேயுள்ள சேராங்கல் கிராமத்தில் 4 வயதாகும் பெரிய சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் நேற்றிரவு இறந்துகிடந்தது. தகவலறிந்ததும், வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். சிறுத்தை இறந்துகிடந்ததற்கு அருகில், விவசாயி வேணுமூர்த்தி என்பவரின் எலுமிச்சைத் தோட்டம் அமைந்திருக்கிறது. அதைச் சுற்றி மின்வேலி ஏதும் அமைக்கப்பட்டிருந்ததா எனவும் அந்த விவசாயியிடம் விசாரணை நடத்தினர்.

உயிரிழந்த சிறுத்தை
உயிரிழந்த சிறுத்தை

ஆனாலும், சிறுத்தையின் உடலில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்ததற்கான காயங்களோ, சுருக்குக் கம்பிவலை அல்லது மின்வேலியில் சிக்கியதற்கான தடயங்களோ இல்லை. இதையடுத்து, இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய சிறுத்தையின் உடலை உடற்கூறாய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கோக்கலூர் வனப்பகுதியில் சுருக்குக் கம்பியில் சிக்கிய சிறுத்தை ஒன்று, வனத்துறையினரால் மயக்க ஊசி போட்டு மீட்கப்பட்டது. பின்னர், அமிர்தி வனப்பூங்காவில் விடப்பட்ட அந்தச் சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது. அதேபோல, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பேரணாம்பட்டு சாத்கர் மலையில், சிறுத்தைக்குட்டி ஒன்று மர்மமான முறையில் இறந்துகிடந்தது. இந்த நிலையில், மூன்றாவதாக மேலும் ஒரு சிறுத்தை உயிரிழந்திருப்பது, வனத்துறையினர் மற்றும் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.