Published:Updated:

அதிரடி ரெய்டால் சிக்கிய`பாகுபலி' எம்.எல்.ஏ! - ஒரே இரவில் `லேடி சிங்க'மான ஐ.பி.எஸ் அதிகாரி!

IPS officer Lipi Singh
IPS officer Lipi Singh

ஒற்றை இரவில் தனது தைரியமான நடவடிக்கையால், அப்பகுதி மக்களின் `லேடி சிங்க'மாக மாறியுள்ளார் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர்.

பீகார் மாநிலம் மோகாமா தொகுதியில் சுயேச்சை எம்.எல்.ஏ-வாக இருப்பவர் அனந்த் சிங். பீகாரின் `பாகுபலி' எம்.எல்.ஏ என்று அப்பகுதி மக்களால் கூறப்படும் இவர், சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்றவர். கொலை, கடத்தல் என டஜன் கணக்கில் இவர்மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்குகளுக்கு மத்தியில் புதிய சர்ச்சை ஒன்றிலும் சிக்கியுள்ளார் அனந்த் சிங்.

MLA Anant Singh
MLA Anant Singh

அதற்குக் காரணம்... அப்பகுதி போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டுதான். கடந்த 18-ம் தேதி இரவு ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸார் அனந்த் சிங்கின் பூர்வீக வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அந்தச் சோதனையில் கிடைத்தவை அனைத்தும் அதிர்ச்சி ரகம். ஏ.கே. 47 துப்பாக்கி, 22 தோட்டாக்கள், இரண்டு கையெறி குண்டுகள் ஆகியவை கிடைத்தன. இதனால் அனந்த் சிங் மீது ஒட்டுமொத்த பீகாரின் பார்வையும் விழுந்தது.

பின்னர், அவர்மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைதுசெய்ய விரைந்தது போலீஸ். ஆனால், எம்.எல்.ஏ அங்கிருந்து தப்பிக்கவே, தற்போது அவரை தேடி வருகிறது காவல்துறை. ஆனால், தான் எங்கும் தலைமறைவாகவில்லை எனக் கூறி வீடியோ வெளியிட்டுள்ள அனந்த் சிங், ``அது என் தாத்தா பாட்டி இருந்த வீடு. அங்கு 14 வருடங்களாக நான் செல்லவில்லை.

IPS officer Lipi Singh when conduct a raid
IPS officer Lipi Singh when conduct a raid

அங்கு நான் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்தேன் என்ற கேள்விக்கே இடமில்லை. கைதுக்கு எல்லாம் பயப்படவில்லை. போலீஸ் முன்பு இல்லாமல், கோர்ட்டில் இரண்டு மூன்று நாள்களுக்குள் சரண் அடைந்துவிடுவேன். இந்த விஷயத்தில் எனக்கு எதிராகச் சதி நடக்கிறது" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

லேடி சிங்கம்!

எம்.எல்.ஏ மீதான சர்ச்சையைவிட இந்த விவகாரத்தில் அதிகம் பேசப்படும் நபராக மாறியிருக்கிறார் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி லிபி சிங். 2016 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான லிபி சிங், எம்.எல்.ஏ அனந்த் சிங் வீட்டில் நடந்த ரெய்டுக்கு முக்கிய காரணம். தனக்கு கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் சோதனையிடப்போவது எம்.எல்.ஏ-வின் வீடு... அரசியல் தலையீடுகள் இருக்கும் என எதைப் பற்றியும் கவலைப்படாமல் துணிச்சலாக ரெய்டை தலைமை தாங்கி நடத்தி, நடவடிக்கை எடுத்துள்ளார் ஏ.எஸ்.பி லிபி சிங்.

IPS officer Lipi Singh
IPS officer Lipi Singh
Vikatan

அதைவிட எம்.எல்.ஏ மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்திருக்கிறார். ஒற்றை இரவில் தனது தைரியமான நடவடிக்கையால், அப்பகுதி மக்களின் `லேடி சிங்க'மாக மாறியுள்ளார். இவரின் தந்தை முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் இந்நாள் அரசியல்வாதியுமான ராமச்சந்திர பிரதாப் சிங். இவர் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் நெருங்கிய நண்பராக அறியப்படுபவர்.

2016-ல் போஸ்டிங் கிடைத்ததில் இருந்தே லிபி சிங்கின் அதிரடி நடவடிக்கை தொடங்கியுள்ளது. அதனால் பல்வேறு இடமாறுதல்களையும் சந்தித்து வந்துள்ளார். தேர்தல் நேரத்தில் பயங்கரவாத தடுப்புப் படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதேநேரம் சர்ச்சைகளும் இவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மக்களவை தேர்தலின்போது இதே அனந்த் சிங்கின் மனைவிக்கு எதிராகச் செயல்பட்டார் எனப் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு