Published:Updated:

திருச்சி: `இவர்கள் டார்ச்சரைத் தாங்க முடியலை’ - பட்டியலின ஊராட்சித் தலைவரின் உண்ணாவிரதப் போராட்டம்

காந்தி சிலை முன்பு உண்ணாவிரதப் போரட்டம
காந்தி சிலை முன்பு உண்ணாவிரதப் போரட்டம

புகாரளித்தவர்கள் என்னிடம் நேரடியாக இது பற்றிக் கேட்டிருந்தால் எல்லா விவகாரத்தையும் தெளிவாகச் செல்லியிருப்பேன். நான் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதால், வேண்டுமென்றே என்னை அசிங்கப்படுத்த நினைக்கிறார்கள்.

`நான் எந்தக் கூட்டம் நடத்தினாலும் வருவது கிடையாது. எந்த விஷயத்தைச் செய்தாலும் அதில் குற்றம் சொல்கிறார்கள். இபோதுகூட நான் செய்யாத தவறுகளைச் செய்தாக ஆட்சியரிடம் புகாரளித்திருக்கிறார்கள்' என்றும், `பட்டியலினத்தைச் சேர்ந்தவள் என்பதால் வேண்டுமென்றே என் மீது பழி சுமத்துகிறார்கள்’ என்றும் ஊராட்சித் தலைவர் ஒருவர் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பெருக மணி ஊராட்சி மன்ற அலுவலகம்
பெருக மணி ஊராட்சி மன்ற அலுவலகம்

தமிழகத்தில் சமீபகாலமாக பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து அவ்வப்போது அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம் பெருக மணி ஊராட்சியில் ஒன்பது வார்டுகள் உள்ளன. இதில் ஊராட்சித் தலைவராக இருப்பவர் கிருத்திகா அருண்குமார். இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்.

ஊராட்சியில் எட்டாவது வார்டு உறுப்பினராக இருப்பவர் செந்தில்குமார், இவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் திருச்சி கலெக்டர் சிவராசுவிடம் ஒரு மனு அளித்திருக்கிறார். அதில் பெருகமணி ஊராட்சியில், சாக்கடை தூர்வாராமல் இருப்பதாகவும், நல்ல முறையில் இருக்கும் மின் மோட்டார்களை பழுது நீக்கியதாக ஊராட்சித் தலைவர் கிருத்திகா லட்சக்கணக்கில் ஊழல் செய்துவருகிறார் என்றும், இது பற்றி முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆட்சியரிடம் புகாரளித்தவர்கள்
ஆட்சியரிடம் புகாரளித்தவர்கள்

இந்தநிலையில் நேற்று ஊராட்சித் தலைவர் கிருத்திகா, ஊராட்சி மன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

என்ன நடந்தது என்று கிருத்திகாவிடம் பேசினோம். ``என்மீது ஆதாரமற்ற குற்றங்களைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார்கள். நான் எந்தக் கூட்டம் நடத்தினாலும் வருவது கிடையாது. எந்த விஷயத்தைச் செய்தாலும் அதில் குற்றம் சொல்கிறார்கள். இப்போதுகூட நான் செய்யாத தவறுகளைச் செய்ததாக கலெக்டரிடம் புகாரளித்திருக்கிறார்கள்.

கிருத்திகா
கிருத்திகா

இரண்டு நாள்களுக்கு முன்புகூட ஆட்சியரிடம் புகாரளித்திருக்கிறார்கள். புகாரளித்தவர்கள் என்னிடம் நேரடியாக இது பற்றிக் கேட்டிருந்தால், எல்லா விவகாரத்தையும் தெளிவாகச் செல்லியிருப்பேன். நான் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதால் வேண்டுமென்றே என்னை அசிங்கப்படுத்த நினைக்கிறார்கள். இவர்களின் செயல்பாடுகளால் பல நலத்திட்டங்கள் கிடப்பில் கிடக்கின்ற. இவர்கள் கொடுக்கும் டார்ச்சரால் என்னால் வேலை செய்ய முடியவில்லை. இதனால்தான் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டேன்” என்றார்.

காந்தி சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம
காந்தி சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம

இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்டதும் வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா, நேரில் சென்று கிருத்திகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கூட்டத்துக்கு உறுப்பினர்களை அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாகவும், இல்லாவிட்டால் இந்தப் பிரச்னை குறித்து ஆட்சியரிடம் தகவலைத் தெரியப்படுத்துவதாகவும் சொல்லியிருக்கிறார். இதை ஏற்றுக்கொண்ட கிருத்திகா உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு