Published:Updated:

காதலனின் தாயாரை கம்பத்தில் கட்டி சித்ரவதை செய்த காதலியின் தந்தை!- விருத்தாசலம் அதிர்ச்சி

ஜி.சதாசிவம்

விருத்தாசலம் அருகே காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் தந்தை, காதலனின் தாயை கம்பத்தில் கட்டிவைத்து சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்ரவதை
சித்ரவதை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி- செல்வி தம்பதிக்கு 25 வயதில் மகன் உள்ளார். இந்த வாலிபருக்கும், அதே ஊரைச் சேர்ந்த கொளஞ்சி (60) என்பவரின் மகளும் காதலித்து வந்துள்ளனர். கடந்த மாதம் கொளஞ்சி தனது மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்துவிட்டார். இந்நிலையில் காதலர்கள் இருவரும் சில நாள்கள் முன்பு வீட்டை விட்டு சென்றுவிட்டனர். இதனால் இரு குடும்பத்தினர் இடையே பிரச்னை இருந்து வந்தது.

சித்ரவதை
சித்ரவதை

இது குறித்து வாலிபரின் தாயார் செல்வியிடம், பெண்ணின் தந்தை கொளஞ்சி கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் செல்வியை அங்கிருந்த மின் கம்பத்தில் கட்டி தாக்கியுள்ளார். இது குறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று செல்வியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தனர். மேலும் செல்வி கொடுத்த புகாரின் பேரில் பெண்ணின் தந்தை கொளஞ்சியை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், ``இருவரும் காதலித்து வந்தார்கள். இது பெண்ணின் தந்தை கொளஞ்சிக்குப் பிடிக்காமல் வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்துவிட்டார். ஒரு மாதம் முன்பு இருவரும் ஊரைவிட்டு சென்றுவிட்டனர்.

கைது
கைது

திருமணம் நிச்சயம் செய்த தனது மகளை அழைத்து சென்றுவிட்டானே என்று மிகுந்த மள உளைச்சலில் இருந்த கொளஞ்சி நேற்று அந்தப் பையனின் அம்மா செல்வியை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கினார். இதைப் பார்த்த கிராமத்தினர் போலீஸுக்குத் தகவல் சொல்ல, உடனடியாக வந்த போலீஸார் செல்வியை மீட்டனர்'' என்று கூறினார்.