Published:Updated:

போக்சோ வழக்கு: விடுவிக்கப்பட்ட குற்றவாளி; 7 ஆண்டுக்குப் பின் தண்டனை அளித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

போக்சோ வழக்கில் 7 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவர், மேல்முறையீட்டு மனுவின் விசாரணையில் தற்போது குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

திருவள்ளூரைச் சேர்ந்தவர் ஜான் விக்டர். திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில், 2014-ம் ஆண்டு தன் மனைவி மற்றும் பிள்ளைகள் ஊருக்குச் சென்ற நேரத்தில், அதே தெருவில் வசித்து வந்த பள்ளிச் சிறுமியைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆசை வார்த்தைகளைக் கூறி சிறார் வதை செய்துள்ளார். மேலும், அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியிருக்கிறார். அவரது மிரட்டல்களால் பயந்துபோன சிறுமி, பெற்றோரிடம்கூட தனக்கு நேர்ந்த கொடுமைகளைத் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். சிறுமி தன்னைப் பற்றி யாரிடமும் கூறாததைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஜான் விக்டர், சிறுமியைப் பலமுறை தொடர்ந்து சிறார் வதை செய்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் சிறுமி கர்ப்பம் அடையவே, கருக்கலைப்பு செய்வதற்காக சிறுமியை ஜான் விக்டர் தன் நண்பர்களின் உதவியுடன் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால், கரு வளர்ச்சி அடைந்து விட்டதால் கலைக்க முடியாது என்று கூறி மருத்துவமனையில் மறுத்திருக்கின்றனர். இந்நிலையில், சிறுமிக்கு திடீரென ஒரு நாள் கடும் வயிற்று வலி ஏற்படவே, அவரின் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாகக் கூறியிருக்கின்றனர்.

Sexual Harassment (Representational Image)
Sexual Harassment (Representational Image)
`10 வயது சிறுமிக்கு 51 வயது நபரால் நேர்ந்த கொடுமை!' - ஒரே நாளில் பதிவான இரு போக்சோ வழக்குகள்!

அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை விசாரிக்கவே அவர் நடந்ததை விவரித்திருக்கிறார். அதையடுத்து, திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் ஜான் விக்டர் மீது புகார் அளித்தனர். அவர்களது புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட மகளிர் போலீஸார், ஜான் விக்டர் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டல் மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். அதே போல், ஜான் விக்டருக்கு உதவியதாக அவரின் நண்பர்கள் செல்வம், கிருபாகரன், ராஜேந்திரன், பியூலா உள்ளிட்டோரையும் கைது செய்தனர். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

சிறுமி சிறார் வதை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும், மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, சிறார் வதை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி 18 வயதுக்கு உட்பட்டவர் என்பதை போலீஸ் தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டதால், பாதிக்கப்பட்ட சிறுமியின் ஒப்புதலுடன்தான் பாலியல் உறவு நடந்துள்ளதாகக் கூறி குற்றம்சாட்டப்பட்ட ஜான் விக்டர் உள்ளிட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

ஆனால், நீதிமன்றத் தீர்ப்பில் தங்களுக்கு அதிருப்தி இருப்பதாகக் கூறி திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இந்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுகேந்திரன், ``இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி பிறந்தது 1998 பிப்ரவரி மாதம். அவர் குற்றம்சாட்டப்பட்ட ஜான் விக்டர் என்பவரால் சிறார் வதை செய்யப்பட்டது 2014-ம் ஆண்டு. அந்த நேரத்தில் சிறுமிக்கு 16 வயது மட்டுமே. சிறுமியின் வயது தொடர்பாக அவரது பள்ளியில் வழங்கப்பட்ட சான்றிதழ்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன" என்று வாதிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வழக்கில் முன்னதாக மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகலையும், அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களையும் படித்த நீதிபதி, ``சிறுமியின் பிறந்த தேதி தொடர்பான சான்றிதழில் அவர் 1998-ல் பிறந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், மகளிர் நீதிமன்றம் சம்பவம் நடைபெற்ற காலத்தில் சிறுமிக்கு 18 வயதுக்கு மேலாகிவிட்டதாகத் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது. அதே போல், இந்த வழக்கில் சிறுமியின் சம்மதத்துடன்தான் உறவு கொண்டதாக விக்டர் ஜான் தரப்பில் வாதிட்டதை ஏற்க முடியாது. சம்பவம் நடந்தபோது சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

Court (Representational Image)
Court (Representational Image)
Image by miami car accident lawyers from Pixabay
ஆவடி: திருமண ஆசைகாட்டி சிறுமியிடம் அத்துமீறிய உறவினர்! -போக்சோ சட்டத்தில் கைதுசெய்த மகளிர் போலீஸ்

குற்றம்சாட்டப்பட்ட ஜான் விக்டர் சிறுமியைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கியுள்ளது போதிய ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, விக்டர் ஜானை விடுதலை செய்த திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. விக்டர் ஜானுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அந்த அபராத தொகையில் 1,75,000 ரூபாயைப் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரில் வங்கியில் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும். குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் வட்டியுடன் அந்தத் தொகை வழங்கப்பட வேண்டும்.

விக்டர் ஜானுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்த மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும், இது போல் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள், விசாரணை அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்களுக்கு போக்சோ சட்டம் குறித்த பயிற்சி தரப்பட வேண்டும் என்று ஏற்கெனவே தமிழக அரசிடம் கூறியிருந்தேன். அதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்" என்றார்.

போக்சோ வழக்கில் சாட்சிகளை முறையாக விசாரிக்காமல் மாவட்ட மகளிர் நீதிமன்றம் குற்றவாளியை நிரபராதி என்று அறிவித்து விடுதலை செய்த நிலையில், சுமார் 7 வருடங்கள் கழித்து மேல்முறையீட்டு மனுவின் விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு