Published:Updated:

அதிக வட்டி ஆசை காட்டி 12,000 பேரை ஏமாற்றிய மதுரை நிதி நிறுவனம்; பின்னணியில் ரவுடி கும்பல்?

``வட்டியும் தராமல், முதலீட்டையும் தராமல் மதுரை அலுவலகத்தை மூடிவிட்டார்கள். அவர்களுக்கு போன் செய்து பணத்தைக் கேட்டால், எங்களையே மிரட்ட ஆரம்பித்தார்கள்."

``முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக விளம்பரம் செய்து எங்களிடம் பணம் வசூலித்து, வட்டியும் தராமல், கட்டிய பணத்தையும் தராமல் எங்களை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுக் கொடுங்கள்" என்று பல மாவட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் மதுரை கலெக்டரிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி மக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த நிறுவனங்களைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாலும், புதிது புதிதாக மோசடி நிறுவனங்களும், ஏமாறும் மக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள்
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள்
`ஆன்லைன் டிரேடிங்' என ரூ.6.45 லட்சம் மோசடி; `கவனமாக இருங்கள்' என காவல்துறை அறிவுறுத்தல்!

அதிலும் கடந்த காலங்களில் மதுரையை மையமாக வைத்து பல்வேறு பெயர்களில் தொடங்கப்பட்ட மோசடி நிதி நிறுவனத்தினர் மக்களை ஏமாற்றி பல்லாயிரம் கோடி பணத்தை சுருட்டியுள்ளனர். இவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் மெதுவாக நகர்ந்துகொண்டிருக்க, அவர்கள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்க, பாதிக்கப்பட்ட மக்களோ, பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது `க்ரீன் டெக் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது.

மதுரை கலெக்டரிடம் புகார் அளித்தவர்களிடம் பேசினோம். ``மதுரையைச் சேர்ந்த அனீஸ் முகமது என்பவர் தொடங்கிய இந்த நிறுவனம், ஹாங்காங், மலேசியா, துபாய், பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் கிளைகள் உள்ளதாகவும், டிரேடிங் பிசினஸ் செய்யும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால், ரூ.1 லட்சத்துக்கு மாதம் ரூ.10,000 வட்டி தருவதாகவும், ஒரு வருட முடிவில் அசலைத் திருப்பித் தருவதாக இரண்டு வருடங்களுக்கு முன் இந்த நிறுவனத்தின் ஆள்கள் எங்களிடம் ஆசை வார்த்தை காட்டினார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள்
பாதிக்கப்பட்டவர்கள்

நாங்களும் அதை அப்படியே நம்பி பணம் முதலீடு செய்தோம். ஆரம்பத்தில் சில மாதங்கள் வட்டி கொடுத்தார்கள். அதை நம்பி இன்னும் அதிகமாக முதலீடு செய்தோம். இதில் எங்களில் சிலரை ஃபிரான்சைஸீயாக நியமித்தார்கள். அதன்மூலம் உறவினர், நண்பர்கள் எனப் பலரையும் முதலீடு செய்ய வைத்தோம்.

இதில் `ஜிகேர்' என்ற இன்னொரு நிறுவனத்தையும் தொடங்கி அதிலும் முதலீடு செய்ய வைத்தார்கள். இதுவரை 12,000 பேர்களிடமிருந்து 500 கோடி ரூபாய்க்குமேல் பணம் பெற்றுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், கடந்த வருடம் வட்டியும் தராமல், முதலீட்டையும் தராமல் மதுரை அலுவலகத்தை மூடிவிட்டார்கள். அவர்களுக்கு போன் செய்து பணத்தைக் கேட்டால், எங்களையே மிரட்ட ஆரம்பித்தார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொருளாதாரக் குற்றப்பிரிவில் கீதா என்பவர் புகார் செய்ததில் அனீஷ் முகமது மீதும் கூட்டாளிகளான சுப்பிரமணி, சுந்தரேசன் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அதில் இன்னொரு கூட்டாளியான இப்ராஹிம் என்ற ஈஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்யவில்லை.

ஆனால், இதுநாள் வரை பொருளாதாரக் குற்றப்பிரிவினர் அவர்களிடம் முறையாக விசாரித்து, அவர்கள் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்களைக் கைப்பாற்றாமல், பாஸ்போர்ட்டை முடக்காமல் எங்களுக்குப் பணம் திரும்பக் கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள்
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள்
எல்ஃபின் மோசடி: ``பணத்தை தருவோம்னு ஆடியோ மட்டும்தான் அனுப்புறாங்க!''- கொந்தளிக்கும் மக்கள்

அரசியல் செல்வாக்குடன் உள்ள அனீஷ் முகமது தற்போது ரவுடி கும்பலை வைத்துக்கொண்டு பணம் கேட்கும் எங்களை மிரட்டுகிறார்கள். புகார் கொடுத்த பெண் முதலீட்டாளர்களிடம் ஆபாசமாகப் பேசுவது, வாட்ஸ் அப் காலில் வந்து கொலை மிரட்டல் விடுவது என கிரிமினல் வேலைகளைச் செய்துவருகிறார்கள். வெளிநாடுகளில் கிளை உள்ளதாகச் சொல்லும் இந்த நிறுவனம் மீது சிபிஐ விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும். எங்களை ஏமாற்றிய அனீஷ் முகமது வெளிநாடு தப்பிச் செல்லாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இந்தப் புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு