Published:Updated:

``ஏற்கெனவே 2 பொம்பளைப் புள்ளைங்க... அதனால கொன்னுட்டோம்!" - பெண் சிசுக்கொலையில் பெற்றோர் கைது

பெண் சிசுக்கொலையில் பெற்றோர் கைது
News
பெண் சிசுக்கொலையில் பெற்றோர் கைது

மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்துவிட்டதால், அந்தக் குழந்தையைச் சரியாக வளர்க்க முடியாது என்பதால் குழந்தையின் தலையைச் சுவரில் மோதவைத்துக் கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பிறந்து சில நாள்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், அந்தக் குழந்தையின் பெற்றோர் கைதுசெய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முத்துப்பாண்டி-கௌசல்யா
முத்துப்பாண்டி-கௌசல்யா

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள பெரியகட்டளையைச் சேர்ந்த முத்துப்பாண்டி-கௌசல்யா தம்பதிக்கு, ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அண்மையில் மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால் இந்தத் தம்பதி, குழந்தை பிறந்து ஆறு நாள்களிலேயே இறந்துவிட்டதாகக் கூறி யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்திருக்கின்றனர். இது சம்பந்தமாக வி.ஏ.ஓ விசாரித்தபோது சரியான பதிலைக் கூறவில்லை. அதைத் தொடர்ந்து சேடபட்டி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். அதற்குள் முத்துபாண்டி-கௌசல்யா தம்பதி ஊரைவிட்டு வெளியேறினர்.

பெரிய கட்டளை கிராமம்
பெரிய கட்டளை கிராமம்

இந்த நிலையில், குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் உடலைத் தோண்டி எடுத்து உடற்கூறாய்வுக்கு உட்படுத்தி விசாரணை மேற்கொள்ள மதுரை எஸ்.பி பாஸ்கரன் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனை தடய அறிவியல் மருத்துவத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து உடற்கூராய்வு செய்ததில், குழந்தை தலையில் ஏற்பட்ட காயத்தால் இறந்தது தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதையடுத்து, முத்துப்பாண்டி- கௌசல்யாவை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்ததில், தங்களுக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால் மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்துவிட்டதால், அந்தக் குழந்தையை சரியாக வளர்க்க முடியாது என்பதால் குழந்தையின் தலையை சுவரில் மோதவைத்துக் கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.

சம்பந்தப்பட்ட வீடு
சம்பந்தப்பட்ட வீடு

அதையடுத்து இருவரையும் கைதுசெய்த போலீஸார், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

இது சம்பந்தமாக மதுரை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், ``இனி இது போன்று பெண் சிசுக்கொலை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தைகளை வளர்க்க முடியாத பெற்றோர்கள், பிள்ளைகளை அரசக் காப்பகத்தில் ஒப்படைக்கலாம். பெண் சிசுவதை ஒரு கொடூரச் செயல், பெண் சிசுவைப் பாதுகாப்பது நம் கடமை, இது போன்று இனி ஒரு சம்பவம் மதுரை மாவட்டத்தில் நிகழ வேண்டாம். குழந்தையை வளர்க்க முடியாத நிலையில் யாரேனும் இருந்தால் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம்" என்றார்.

இந்தச் சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜாவிடம் இது குறித்துக் கேட்டபோது, ``மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து விழிப்பு உணர்வு கூட்டங்கள், பிரசாரங்கள் செய்துவருகிறோம். அதன் மூலம் வளர்க்க முடியாத குழந்தைகளை அரசுக் காப்பகங்களில் ஒப்படைப்பது கடந்த வருடங்களில் அதிகரித்துவருகிறது. அப்படியிருந்தும் இது போன்று நடக்கும் ஒருசில சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. யாரிடமும் ஆலோசனை கேட்காமல் அறியாமையால் இது போன்ற கொடூரச் செயலைச் செய்யும் பெற்றோர்களைக் கண்காணிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

பாண்டியராஜன்
பாண்டியராஜன்

இப்போது அவர்கள் சிறைக்குச் சென்றுவிட்ட நிலையில், அவர்களின் இரண்டு குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உறவினர்கள் பராமரிக்க முன்வரவில்லை என்றால் அந்தக் குழந்தைகளை அரசு பராமரிக்கும். மொத்தத்தில் விழிப்பு உணர்வு இல்லாமல் இப்படிச் சில பெற்றோர் செய்வது அனைவரையும் பாதிக்கிறது. சிசுக்கொலை முழுவதும் ஒழிக்கப்பட்ட மதுரை மாவட்டத்தில் இது போன்ற ஒருசில சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. வருகின்ற நாள்களில் கிராமம்தோறும் அனைவரும் பங்கு பெறும் வகையில் குழு அமைத்து சிசுக்கொலை மட்டுமல்ல, குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அனைத்துக் குற்றங்களுக்கு எதிராகவும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்" என்றார்.