Published:Updated:

திருமங்கலம்: `ஊரடங்கால் வருமானமில்லை; தாயை கவனிக்க முடியலை!’ - கொலை செய்து எரித்த மகள்

மூதாட்டி கொலை
மூதாட்டி கொலை ( Representational Image )

`` `படுத்த படுக்கையாக இருக்கும் என் தாயைக் கொண்டு சென்றால் வீடு கிடைக்காது’ என்று நினைத்தேன். அவரை திருமங்கலத்திலேயே விட்டுச் செல்லவும் மனமில்லை. அதனால் கொன்றுவிட முடிவு செய்தோம்.’’

கொரோனா காலத்தில் பாரமாக நினைத்து, மகளே பெற்ற தாயைக் கொலை செய்து எரித்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கால் வருமானமில்லாமல் வறுமை வாட்டியதால், இந்தக் கொடுமையைச் செய்ததாக அவர் போலீஸாரிடம் கூறியிருக்கிறார்.

மகள் பழனியம்மாள்
மகள் பழனியம்மாள்
ஈ.ஜெ.நந்தகுமார்

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே குண்டாறு கால்வாயில் ஒரு மூதாட்டியின் உடல் எரிந்தும் எரியாமலும் கிடப்பதாகச் சில நாள்களுக்கு முன்னர் திருமங்கலம் காவல்துறைக்குத் தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணையைத் தொடங்கினார்கள் போலீஸார்.

அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், தள்ளுவண்டியில் மூதாட்டியின் உடலை வைத்து மூன்று பேர் தள்ளி செல்வது தெரிந்திருக்கிறது. தொடர் விசாரணையில், அந்த மூதாட்டி திருமங்கலம், பசும்பொன் நகரில் வசித்துவந்த கருப்பாயி என்பதைக் காவல்துறையினர் உறுதி செய்தனர். இதையடுத்து, அவர் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியதில் அவரைக் கொலை செய்து எரித்தது அவர் மகளும், உறவினர்களும் என்பதைக் கண்டுபிடித்தனர்.

காளிதாஸ்
காளிதாஸ்
ஈ.ஜெ.நந்தகுமார்

இது தொடர்பாக மூதாட்டி கருப்பாயியின் மகள் பழனியம்மாள், பேரன் காளிதாஸ், பேத்தி காளீஸ்வரி, மருமகன் வசந்தகுமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். எதற்காகக் கொலை செய்தார்கள் என்பது குறித்து வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் மகள் பழனியம்மாள்.``என் தாய், தந்தையோடு தேனி மாவட்டம் உப்புக்கோட்டையில் வசித்துவந்தோம். சில ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை மரணமடைந்ததால், திருமங்கலத்தில் குடியேறினோம்.

கூலி வேலை பார்த்துவந்த எங்களுக்கு கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் போனது. வருமானம் இல்லாததால், வறுமையில் இருந்துவந்தோம். வாடகை கொடுக்க முடியாததால், வீட்டை காலி செய்யச் சொன்னார்கள். வீட்டில் உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கும் என் தாயை கவனிக்க முடியவில்லை. மதுரை, திருநகரில் வீடு பார்த்தோம். அங்கே `படுத்த படுக்கையாக இருக்கும் என் தாயைக் கொண்டு சென்றால் வீடு கிடைக்காது’ என்று நினைத்தேன். அவரை திருமங்கலத்திலேயே விட்டுச் செல்லவும் மனமில்லை. அதனால் கொன்றுவிட முடிவு செய்தோம்.

காளீஸ்வரி
காளீஸ்வரி
ஈ.ஜெ.நந்தகுமார்

அவர் முகத்தைத் தலையணையால் அமுக்கிக் கொலை செய்து, யாருக்கும் தெரியாமல் தள்ளுவண்டியில் கொண்டு சென்று குண்டாறு பகுதியில் எரித்தோம். அதன் பிறகு யாருக்கும் தெரியாமல் அங்குள்ள வீட்டை காலி செய்துவிட்டு மதுரை, திருநகருக்கு வந்துவிட்டோம். கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட வறுமையால் தாயை கவனிக்க முடியாமல்தான் இப்படிச் செய்தோம்’’ என்று கூறியிருக்கிறார்.

தாயைக் கொன்று, அவரை யாருக்கும் தெரியாமல் எரித்துவிட்டு வந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு