Published:Updated:

`ரூ.2,000 நோட்டுகளை மாற்றித்தருகிறேன்!' - ரூ.76 லட்சத்தைப் பறிகொடுத்த மதுரை இளைஞர்கள்

``ரூ.2,000 நோட்டுகள் விரைவில் தடைசெய்யப் போகிறார்கள். எனவே, அந்தப் பணம் செல்லாதவையாகி விடும். அந்தப் பணத்தை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்ற வேண்டும் என்று சுரேஷ் சொல்லியிருக்கிறார்.

பெரம்பலூர் காவல் நிலையம்
பெரம்பலூர் காவல் நிலையம்

``ரூ.500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதததுபோல் இன்னும் இரண்டு மாதங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளும் செல்லாமல் போகப்போகிறது. கையில் இருக்கும் பணத்தை விரைவில் மாற்றுங்கள்'' என்று 76 லட்ச ரூபாய் பணத்தை கும்பல் ஒன்று நூதன முறையில் மோசடி செய்த சம்பவம் பெரம்பலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரில் வந்த கந்துவட்டி கும்பல்
காரில் வந்த கந்துவட்டி கும்பல்

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்தி, மும்மூர்த்தி, செளந்தரராஜன். இவர்கள் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்துவருகிறார்கள். இவர்களைப் பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அணுகினார். `என் நண்பர் லாரி வாங்க இருக்கிறார். அவருக்கு ரூ.78 லட்சம் பணம் தேவைப்படுகிறது. வட்டி மாதாமாதம் சரியாகக் கொடுத்துவிடுவார்' என்று சுரேஷ் சொல்லியிருக்கிறார். இவர்களும் சுரேஷின் பேச்சைக் கேட்டுக்கொண்டு பணத்தை காரில் எடுத்துவந்துள்ளனர். அதன்படி நேற்று இரவு ரூ.78 லட்சம் பணத்துடன் வாகனத்தில் 5 பேர் வந்துள்ளனர். பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் அவர்கள் சுரேஷை சந்தித்துப் பேசினர்.

 `பணத்தை ரெடி பண்ணுங்க, 10 நாளில் அரசு வேலை'‍-மோசடி கும்பலிடம் 10 லட்சத்தை இழந்த தேனி இளைஞர் கண்ணீர்

அப்போது அவர்கள் கொண்டுவந்த பணத்தை சுரேஷிடம் காட்டியிருக்கின்றனர். அந்தப் பைக்குள் வெறும் 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதைப் பார்த்த சுரேஷ், ``2,000 ரூபாய் நோட்டுகள் விரைவில் தடை செய்யப்பட உள்ளன. எனவே, அந்தப் பணம் செல்லாதவையாகி விடும். அந்தப் பணத்தை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்ற வேண்டும்'' என்று சொல்லியிருக்கிறார். மேலும், ``எனக்குத் தெரிந்த பேங்க் மேனேஜர் சொன்னார்.

பெரம்பலூர் காவல் நிலையம்
பெரம்பலூர் காவல் நிலையம்

அவர்களிடமே இந்தப் பணத்தை மாற்றித்தருகிறேன். அது வரையிலும் நீங்கள் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் தங்கியிருங்கள். பணத்தோடு வருகிறேன்'' என்று சொல்லியிருக்கிறார். இதை நம்பிய ஐந்து பேரும் ரூ.76 லட்சத்தை சுரேஷிடம் கொடுத்துவிட்டு ரூம் போட்டு மது அருந்திருக்கிறார்கள். கொஞ்சம் நேரம் கழித்து சுரேஷுக்கு போன் செய்து பார்த்திருக்கிறார்கள். ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது. பதறிப் போனவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். பின்னர் பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் அழகேசனிடம் பேசினோம். ``மதுரையைச் சேர்ந்த 5 பேர் பணத்தைக் கொடுப்பதற்காகப் பெரம்பலூர் வந்துள்ளனர். அந்தப் பணத்தை அவர்களிடமிருந்து அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக, 2000 ரூபாய் நோட்டுகள் இரண்டு மாதங்களில் செல்லாது என்றும் இந்த நோட்டுகளை இப்போதே மாற்றிக்கொண்டால் கூடுதலாக 10 சதவிகிதம் வட்டி கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியிருக்கிறார்.

 சுரேஷ்
சுரேஷ்

அவர்களும் நம்பி பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். பணத்தை வாங்கிச்சென்ற பின் போனை ஸ்விட்ச் ஆப் செய்திருக்கிறார். பணத்தைப் பறிகொடுத்த பின்பு மாவட்டத்தில் பல இடங்களில் அவர்களைத் தேடிப்பார்த்திருக்கிறார்கள். முடியாத பட்சத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். சுரேஷ் சாதாரண மனிதர் அல்ல. அவர் மீது ஏகப்பட்ட கொள்ளை மற்றும் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு மோசடி சம்பவத்தில் சுரேஷ் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையிலிருந்து தற்பொழுதுதான் வெளியில் வந்துள்ளார்" என்றார்.