Published:Updated:

`எங்க அம்மாவை அப்பா வெட்டுறாங்க; காப்பாத்துங்க!'- கதறிய பிள்ளைகள் கண்முன்னே கொல்லப்பட்ட தாய்

எங்க அப்பா, எங்க அம்மாவை அரிவாளால் வெட்டுகிறார். யாராவது ஓடிவந்து எங்க அம்மாவை காப்பாற்றுங்கள்" என்று பிள்ளைகள் கதறியதோடு, அவர்கள் கண்முன்னே தாய் கொல்லப்பட்ட சம்பவம் அரியலூர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அரியலூர் கலெக்டர் ஆபீஸ்
அரியலூர் கலெக்டர் ஆபீஸ்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாகல் குழி கிராமத்தைச் சேர்ந்த பாக்கிய ராஜ்-அம்பிகா தம்பதிக்குக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அனுஷ்யா, சபரி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த மூன்று வருடங்களாக பாக்கிய ராஜ் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். ஒன்றரை மாதத்திற்கு முன்னர் விடுமுறையில் ஊருக்கு வந்த பாக்கியராஜிக்கும் அவரது மனைவி அம்பிகாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதோடு அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இறைச்சி எடுத்துச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டு, குழந்தைகளை விளையாடச் செல்லுமாறு அனுப்பி வைத்த பாக்கிய ராஜ், கதவை உட்புறமாக தாழிட்டுவிட்டு, மனைவியை அழைத்துள்ளார். மனைவியிடம் நைசாக பேசிக்கொண்டிருந்தவர், திடீரென வீட்டின் கொடியில் கிடந்த துணியை எடுத்து அம்பிகாவின் வாயில் வைத்துக் கத்தாதவாறு திணித்துள்ளார். அம்பிகா திமிறியுள்ளார். அதற்குள் பாக்கிய ராஜ் தான் வைத்திருந்த கயிற்றினால் கைகளைப் பின்புறமாகக் கட்டி படுக்கையில் கிடத்தி மேலே ஏறி உட்கார்ந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தனது மனைவி அம்பிகாவின் தலையில் வெட்டியுள்ளார். அப்போது, கைகளாலும் அவர் தடுத்துள்ளார். இரண்டு கைகளிலும் பலத்த வெட்டிவிழுந்தது.

இரும்புலிக்குறிச்சி காவல்நிலையம்
இரும்புலிக்குறிச்சி காவல்நிலையம்

இதனைக் கதவின் இடுக்கு வழியே கண்ட பாக்கியராஜின் மகன் சபரி அதிர்ச்சியடைந்து அம்மாவை, அப்பா அரிவாளால் வெட்டுவதாகச் சத்தம் போட்டுள்ளார். அப்போது அரிவாள் வெட்டில் காயமடைந்த அம்பிகாவின் அலறல் சத்தமும் கேட்டுள்ளது. இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, கதவை உடைத்து, அம்பிகாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்து அனுப்பி வைத்தனர்.

அரியலூர்
அரியலூர்

செல்லும் வழியில் அம்பிகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த இரும்புலிக்குறிச்சி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாக்கிய ராஜைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என்ன நடந்து. ஏன் கொலை செய்யும் அளவுக்குக் கணவர் போனார் என்று வழக்கை விசாரித்து வரும் காவலர்களிடம் பேசினோம். "எங்களுடைய முதற்கட்ட விசாரணையில் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அரிவாளால் வெட்டியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து அம்பிகாவின் செல்போன் அழைப்புகளை ஆராய்ந்து பார்த்ததில் மூன்று பேர்களுடன் தொடர்பிலிருந்ததாக தெரியவந்தது. அத்தோடு அவர்களது உறவினர்கள் உள்ளிட்ட ஊர் பொது மக்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.