Published:Updated:

`சாதியைக் காரணம் காட்டி பிரிந்து சென்றார்!' - 2 குழந்தைகளுடன் கணவரைத் தேடும் மதுரைப் பெண்

பபிதா மற்றும் அவரின் குழந்தைகள்
பபிதா மற்றும் அவரின் குழந்தைகள்

`அவருக்கு குடும்பத்தின் மீது பற்றும் புரிதலும் இல்லாததால் விட்டுச் சென்றுவிட்டார். அவரின் வீட்டில் சாதியையும் பொருளாதாரத்தையும் காரணம் காட்டி என்னை ஒதுக்குகிறார்கள்' என்று பபிதா கண்ணீருடன் கூறியுள்ளார்.

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தன் 2 குழந்தைகளுடன், தன்னை விட்டுச் சென்ற கணவரைக் கண்டுபிடித்து தருமாறு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார். தன் கைக்குழந்தையை தூக்கிக்கொண்டும் இன்னொரு மகன் ரோட்டில் தொலைந்து விடாமல் இருக்க  கயிற்றால் கட்டிக்கொண்டும் வீதிகளில் கணவரைத் தேடி வருகிறார் பபிதா.

பபிதா மற்றும் அவரின் குழந்தைகள்
பபிதா மற்றும் அவரின் குழந்தைகள்

பபிதாவிடம் பேசினோம். ``எனது சொந்த ஊர் திருநெல்வேலி. என் கணவர் மதுரைதான். நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். திருமணமான கொஞ்சநாள் நல்லாதான் இருந்தாரு. அவங்க வீட்டிலேயும் என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்க. சில மாதங்கள் கடந்த நிலையில், `நான் வேற்று சாதிப் பெண் என்றும் அவங்க குடும்பத்துக்கு தகுதியான பெண் நான் இல்லை' என்றும் குறை கூறத் தொடங்கினார்கள். என் சாதி என்னவென்று தெரிந்துதான் அவர் என்னை திருமணம் செய்துகொண்டார். இரண்டு மாத கர்ப்பிணியாக நான் இருந்தபோது என் கணவர், `நீ வேற சாதிப் பொண்ணு, எங்க குடும்பத்துக்கு நீ சரிப்பட்டு வர மாட்ட'ன்னு சொல்லி என்னை விட்டுச் சென்றுவிட்டார்.

காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அவரைத் தேடிக் கண்டுபிடித்து என்னோடு சேர்த்து வைத்தார்கள். இதேபோல் பலமுறை நடந்துள்ளது. ஒருமுறை காவல் நிலையத்தில் கணவனை தேடித் தருமாறு புகார் கொடுக்கச் சென்றபோது, போலீஸ் ஒருவர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அந்தச் சம்பவத்தில் இருந்து காவல்நிலையத்துக்குச் செல்லவும் பயமாக இருந்தது. என் இரண்டு குழந்தைகளுக்கும் அப்பாவின் பாசம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் மதுரை முழுவதும் என் கணவனைத் தேடி வருகிறேன். ரோட்டில் மூத்த மகன் தொலைந்து விடாமல் இருக்க கயிற்றால் அவனைக் கட்டிக்கொண்டு மூவருமாக என் கணவனைத் தேடி வருகிறோம்.

பபிதா மற்றும் அவரின் குழந்தைகள்
பபிதா மற்றும் அவரின் குழந்தைகள்

அவருக்கு குடும்பத்தின் மீது பற்றும் புரிதலும் இல்லாததால் விட்டுச் சென்றுவிட்டார். அவரின் வீட்டில் சாதியையும் பொருளாதாரத்தையும் காரணம் காட்டி என்னை ஒதுக்குகிறார்கள். என் கணவன் குழந்தைகளுடன் நான் வாழ வேண்டும். சாதியைக் காரணம்காட்டி குழந்தைகளையும் என்னையும் தவிக்க விட்டுச் சென்ற என் கணவனை கண்டுபிடித்து தருமாறு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளேன்” என்று கண்ணீர் வடித்தார்.  

`பலமுறை சாதியைக் காரணம்காட்டி என்னை விட்டுச் சென்றாலும் என் கணவனுடன் எப்படியாவது சேர்த்து வையுங்கள், என் பிள்ளைகளுக்கு அப்பாவின் பாசம் கிடைக்க வேண்டும்' என்ற பபிதாவின் வேண்டுகோள் அனைவரின் கண்களையும் ஈரமாக்கியது.

``பொணத்துக்குக்கூட சாதி இருக்கா?''- கணவனின் சடலத்தோடு இரண்டு நாள்களாக அல்லாடும் இருளர் பெண்
அடுத்த கட்டுரைக்கு