Published:Updated:

`உங்க அப்பா இறந்துட்டாங்க!'-பள்ளியில் கத்திமுனையில் மாணவியைக் கடத்த முயன்ற வாலிபர்

சிந்து ஆர்

பள்ளிக்குச் சென்று, மாணவியின் தந்தை இறந்துவிட்டதால் தன்னுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி கூறியிருக்கிறார் அவர். சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள், மாணவியை அனுப்ப மறுத்ததால், மறைத்துவைத்த கத்தியை ஆசிரியர் கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளார்.

ஜெயராம்
ஜெயராம்

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் பகுதியைச் சேர்ந்த மாணவி, அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவந்தார். கடந்த ஜூன் மாதம் 21-ம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி, திடீரென மாயமானார். பெற்றோர் புகார் அளித்ததன் பேரில், கருங்கல் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், மாணவியின் மொபைல் எண்ணுக்கு கர்நாடகா மாநிலம் குடகு பகுதியைச் சேர்ந்த ஒரு எண்ணில் இருந்து அதிக அழைப்புகள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜெயராமின் பைக், கத்தி
ஜெயராமின் பைக், கத்தி

அந்த மொபைல் சிக்னலைப் பின் தொடர்ந்து சென்ற போலீஸார், குடகு பகுதியில் இருந்து மாணவியை மீட்டனர். மாணவியை கடத்திச் சென்றதாக ஜெயராம் (24) என்ற வாலிபரைக் கைது செய்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த மாணவிக்கு ஃபேஸ்புக் மூலம் ஜெயராம் காதல் வலை வீசியது தெரியவந்தது. ராஜபாளையம் இந்திரா காலனி பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெயராமின் பெற்றோர், கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் எஸ்டேட் ஒன்றில் தங்கி பணிபுரிந்துவருகின்றனர்.

ஜெயராம்
ஜெயராம்

இதனால் குடகு பகுதியில் இருந்து ஜெயராம் செல்போன் மூலம் பேசி, மாணவியை மயக்கியதாகவும் குருந்தன்கோட்டில் உள்ள தனது உறவினர்கள் உதவியுடன் பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவியை ஏற்கெனவே ஒருமுறை கடத்திச் சென்றதாகவும் ஜெயராம் வாக்குமூலம் அளித்திருந்தார். மாணவியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸார், ஜெயராமை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்த ஜெயராம், நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த நிலையில், ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் குருந்தன்கோட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, தினமும் காலையில் கருங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவந்தார். பாதிக்கப்பட்ட மாணவி, இரணியல் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்துவருவதாக அறிந்த ஜெயராம், நேற்று தனது உறவினர் இருவரை அழைத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி ஆசிரியரிடம் மாணவியின் பெயரைச் சொல்லி, அவரது தந்தை இறந்து விட்டதாகவும் மாணவியை உடனே தன்னுடன் அனுப்புமாறும் கூறியுள்ளார்.

ஜெயராம்
ஜெயராம்

ஜெயராம் மீது சந்தேகமடைந்த ஆசிரியர், அவரைப் பற்றி விசாரணையில் இறங்கினார். அவர், 'நான் அந்த மாணவியின் அண்ணன்' என்றும் தன்னுடன் வந்த உறவினரைக் காட்டி, அவர் மாணவியின் சித்தப்பா எனவும் கூறியுள்ளார். சந்தேகம் வலுத்ததால் மாணவியை நாங்கள் ஆசிரியர்கள் உதவியுடன் அனுப்பிவைக்கிறோம் எனக் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயராம், மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியர் கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளார். ஆசிரியர் சத்தம் போடவே, சக ஊழியர்கள் அங்கு ஓடி வந்தனர். அதைக் கண்ட ஜெயராம் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

பள்ளிக்கு வெளியே நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் ஜெயராமை மடக்கிப் பிடித்து, தர்ம அடி கொடுத்து விசாரித்தனர். விசாரணையில், மாணவியை கடத்திச்செல்ல வந்ததாகவும், ஏற்கெனவே மாணவியைக் கடத்தி சிறை சென்ற கதையையும் கூறினார். இதையடுத்து, ஜெயராமையும் அவர் வந்த பைக், கத்தி ஆகியவற்றையும் இரணியல் போலீஸில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில், பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜெயராம் மீது வழக்குப்பதிவு செய்த இரணியல் போலீஸார், மீண்டும் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.