Published:Updated:

யானை பலம்... அதீத செக்ஸ் ஆர்வம்... 20 மணி நேர போதை!

கைது செய்யப்பட்டவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
கைது செய்யப்பட்டவர்கள்

பர்மாவிலிருந்துதான் இந்த போதைப்பொருள் அதிக அளவில் தமிழகத்துக்குக் கடத்தப்பட்டு வருகிறது.

யானை பலம்... அதீத செக்ஸ் ஆர்வம்... 20 மணி நேர போதை!

பர்மாவிலிருந்துதான் இந்த போதைப்பொருள் அதிக அளவில் தமிழகத்துக்குக் கடத்தப்பட்டு வருகிறது.

Published:Updated:
கைது செய்யப்பட்டவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
கைது செய்யப்பட்டவர்கள்

போதை ஊசி போட்டுக்கொள்ளும் கோவை இளைஞர்களின் வீடியோ வெளியாகி, கடந்த வாரத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நடந்த வாகன சோதனையின்போது சிக்கிய இளைஞர் மூலம், ‘எம்.எஃப்’ எனும் போதைப்பொருளை சப்ளை செய்யும் கும்பல் குறித்த அதிர்ச்சிப் பின்னணி வெளியாகி, போலீஸாரை அதிரவைத்திருக்கிறது!

‘மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்ய, மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் ஒருவகை மருந்தை’ போதைப்பொருளாக இவர்கள் பயன்படுத்துகிறார்கள். அது என்ன எம்.எஃப் என்று கேட்டால், ‘Most Fun’ என்பதின் சுருக்கம் என்கிறார்கள். அந்த போதைப்பொருள் நெட்வொர்க்கைப் பிடித்த வேளச்சேரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருணிடம் பேசினோம். ‘‘ஜூலை 9-ம் தேதி இரவு, வேளச்சேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தோம். அப்போது அந்த வழியாகச் சென்ற இளைஞன் ஒருவனை, சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தோம். அவனின் கையை யதேச்சையாகப் பார்த்தபோது, ஊசி குத்திய தழும்புகள் இருந்தன. அது குறித்து விசாரித்தபோதுதான், அந்த இளைஞன் எம்.எஃப் என்ற போதைப்பொருளுக்கு அடிமையானதோடு, கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியிலுள்ள சிலருக்கு சப்ளை செய்துவந்ததும் தெரிந்தது. அந்த இளைஞனின் பெயர் அஜ்மல்கான். சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவன். கொரோனா ஊரடங்குக்கு முன்புவரை, சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் சீனா மாடல் மொபைல்போன்களை வாங்கி, விற்பனை செய்துவந்திருக்கிறான். ஊரடங்கில் வருமானம் இல்லாமல் சாப்பிடக்கூட வழியில்லாமல் தவித்திருக்கிறான் அஜ்மல்கான். அவனுடைய நண்பன் ஒருவன் மூலம் இந்த போதைப்பொருள் அறிமுகமாக, அதைப் பயன்படுத்தியதோடு பலருக்கும் விற்றும் வந்திருக்கிறான். அஜ்மல்கான் அளித்த தகவலின்படி, ராயபுரத்தைச் சேர்ந்த பஷீர்அகமது, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சேட்டு முகமது, பெரம்பூரைச் சேர்ந்த அப்துல் கலீக் ஆகியோரைக் கைதுசெய்து அவர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, ஒரு கிலோ 360 கிராம் எடையுள்ள எம்.எஃப் மருந்து, 1,22,000 ரூபாய், ஏழு செல்போன்கள், இரண்டு கார்கள், ஒரு பைக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்திருக்கிறோம்.

யானை பலம்... அதீத செக்ஸ் ஆர்வம்... 20 மணி நேர போதை!

`குருவி’ பஷீர் அகமது

பஷீர் அகமது என்பவர் வெளிநாடுகளிலிருந்து இந்த போதைப்பொருளைக் கடத்திவந்து, இடைத்தரகர்களான சேட்டு முகமது, அப்துல் கலீக் ஆகியோரிடம் கமிஷன் அடிப்படையில் கொடுத்திருக்கிறார். அதை அவர்கள் அஜ்மல்கான் போன்ற இளைஞர்கள் மூலம் சென்னை முழுவதும் விற்றுவந்திருக்கிறார்கள். அரை கிராம் எம்.எஃப்பை நல்ல தண்ணீரில் கலந்தால், அதை 10 பேர் வரை பயன்படுத்த முடியுமாம். ஊசி மூலம் உடலில் ஏற்றினால், நான்கு மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை போதையில் இருக்கலாம் என்கிறார்கள். ஒரு கிராம் எம்.எஃபை 5,000 முதல் 10,000 ரூபாய் வரை விற்றுவந்திருக்கிறார்கள்.

இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான பஷீர் அகமது, கடந்த 2010-ம் ஆண்டு சட்ட விரோதமாக எலெக்ட்ரானிக் பொருள்களைக் கடத்திவந்த குற்றத்துக்காக சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டவர். வெளிநாட்டிலிருந்து சட்ட விரோதமாகப் பொருளைக் கடத்திவரும் குருவியாகவும் அவர் செயல்பட்டுவந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. கைதானவர்களின் பின்னணியில் மிகப்பெரிய நெட்வொர்க் இருக்கிறது’’ என்றார்.

ரகசியத் தொழிற்சாலை!

இந்த எம்.எஃப் எங்கிருந்து சென்னைக்குக் கடத்திவரப்படுகிறது? ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ‘‘பர்மாவிலிருந்துதான் இந்த போதைப்பொருள் அதிக அளவில் தமிழகத்துக்குக் கடத்தப்பட்டு வருகிறது. குருவிகளாக அந்த நாடுகளுக்குச் செல்பவர்கள் மூலமாக, விமானத்தில் இந்த போதைப்பொருள் கொண்டுவரப்படுகிறது. மருந்து என்ற பெயரில் அந்த நாட்டிலிருந்து தபால் மூலமும் கொண்டுவருகிறார்கள்.

மூலப்பொருள்கள் அங்கிருந்து கொண்டு வரப்பட்டு, சென்னை புறநகர் பகுதியொன்றில் செயல்படும் ரகசியத் தொழிற்சாலையில் இது தயாரிக்கப்படுவதும் நடக்கிறது. இதன் பின்னணியில், அரசியல்வாதிகள் முதல் பிசினஸ்மேன்கள் வரை இன்டர்நேஷனல் லெவல் போதை மாஃபியா கும்பல் இருக்கிறது. டெல்லி மேலிடம் வரை செல்வாக்கு இருப்பதால், அவர்கள்மீது அவ்வளவு எளிதில் நடவடிக்கை எடுக்க முடியாது.

யானை பலம்... அதீத செக்ஸ் ஆர்வம்... 20 மணி நேர போதை!

அடிமையாகும் இளைஞர்கள்!

எம்.எஃபை ஒரு தடவை ஒருவர் பயன்படுத்திவிட்டால், அடுத்த தடவை அதைப் பயன்படுத்த ஆர்வம் அதிகரிக்கும். அதன் பிறகு, அதற்கு அவர் அடிமையாகிவிடுவார். ஆரம்பகட்டத்தில் இந்த போதைப்பொருளைப் பயன்படுத்தும்போது, யானை பலம் கிடைத்ததுபோல உணர்வார்கள். மேலும், இந்த போதைப்பொருள் உள்ளே சென்றதும் செக்ஸ் உணர்வு இரு மடங்காக அதிகரிக்கும். இந்த போதைப்பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்கள், சிறுவர்கள் அதீத செக்ஸ் உணர்வால் ஓரினச் சேர்க்கையாளராக மாறிவிடுவார்கள். அதை, இந்த போதை மாஃபியா கும்பல் வீடியோவாக எடுத்து, எம்.எஃப் விற்றுவருமாறு மிரட்டியே அடிபணிய வைப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த போதைப்பொருளுக்குச் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் அடிமையாகியிருக்கிறார்கள். இந்த நெட்வொர்க் குறித்த முழு விவரங்களைச் சேகரித்துவிட்டோம். உயரதிகாரிகளின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்’’ என்றார்.

போதைப்பொருள் கும்பலின் ஆணிவேர் வரை ஆராய்ந்து முற்றிலும் ஒழிக்க வேண்டும். அதுவே, ஆபத்தான வகையில் வாழ்வை இழந்து நிற்கும் இளைஞர்களை மீட்பதற்கான வழி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism