Published:Updated:

வேலூர்: சிறுமியை வாழைத் தோட்டத்துக்குள் தூக்கிச் சென்று வன்கொடுமை- பேக்கரி மாஸ்டர் போக்சோவில் கைது

சரத்குமார்

வேலூர் அருகே குடும்பக் கஷ்டத்துக்காக வேலைக்குச் சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர்: சிறுமியை வாழைத் தோட்டத்துக்குள் தூக்கிச் சென்று வன்கொடுமை- பேக்கரி மாஸ்டர் போக்சோவில் கைது

வேலூர் அருகே குடும்பக் கஷ்டத்துக்காக வேலைக்குச் சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
சரத்குமார்

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகிலிருக்கும் கத்தாரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார், வயது 25. இவர், அணைக்கட்டு அருகேயுள்ள தார்வழிப் பகுதியிலிருக்கும் பேக்கரிக் கடை ஒன்றில் மாஸ்டராக வேலை செய்துவந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதாகும் சிறுமி ஒருவர், குடும்பச் சூழல் காரணமாக தனியார் ஜவுளிக்கடையில் வேலை பார்த்துவருகிறார். தினமும் இரவில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் அந்தச் சிறுமியை, அவரின் தந்தை வந்து அழைத்துச் செல்வார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் சிறுமியை அழைத்துச்செல்ல அவரின் தந்தை வரவில்லை. இதனால், கத்தாரிக்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக அந்தச் சிறுமி காத்திருந்தார். அருகில் யாரும் இல்லை. அந்தச் சமயம், வேலையை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிய சரத்குமார், சிறுமியை நோட்டமிட்டு தன்னுடன் வருமாறு அழைத்திருக்கிறார்.

சரத்குமார்
சரத்குமார்

சிறுமி அவருடன் செல்ல மறுத்ததால், உடனே பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு வந்த சரத்குமார், அவரை குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு அருகிலுள்ள வாழைத் தோட்டத்துக்குள் புகுந்தார். பின்னர் கை, வாயை துணியால் கட்டிவிட்டு பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. ‘இதுபற்றி வெளியில் சொல்லக் கூடாது‘ என மிரட்டிவிட்டு, அங்கிருந்து சரத்குமார் தப்பிச் சென்றிருக்கிறார். இரவு 10 மணியளவில் வீட்டுக்குச் சென்ற அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து வேப்பங்குப்பம் காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்தனர். விசாரணைக்குப் பின்னர் போக்சோ சட்டப் பிரிவின்கீழ் வழக்குப் பதிவுசெய்த போலீஸார், சரத்குமாரைக் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட சரத்குமாருக்குத் திருமணமாகி மனைவி இருக்கிறார். கடந்த வாரம்தான் அவருக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.