Published:Updated:

`காணாமல்போன சிறுமி; 4 நாள்களுக்குப் பின் கல்குவாரியில் கிடைத்த சடலம்!'- அதிர்ச்சியில் வேலூர்

சிறுமி
சிறுமி

சி.எம்.சி மருத்துவமனைக்கு வேலைக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வந்த சிறுமி நான்கு நாள்களுக்குப் பிறகு புதுவசூர் கல்குவாரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த புதுவசூர் மலையில், தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் திருக்கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலுக்கு அருகில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டுவருகின்றன. `குவாரியில் வெடி வைப்பதால் மலைக்குக்கீழ் வசிக்கும் வீடுகளில் அதிர்வுகள் உண்டாகின்றன. சுவர்கள் பிளவுபட்டு வீடுகள் இடிந்து விழும் அபாயகரமான நிலையிலும் இருக்கின்றன. கல்குவாரிகளை மூடக்கோரி பலமுறை போராட்டம் நடத்திவிட்டோம். மாவட்ட கலெக்டரிடமும் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று கொந்தளிக்கிறார்கள் கிராம மக்கள்.

கல்குவாரி
கல்குவாரி

அதைத்தவிர, `கோயிலுக்கு வரும் காதல் ஜோடியிடம் மர்ம நபர்கள் அத்துமீறி நடந்துகொண்டு பணம் பறிக்கிறார்கள். காதலர்கள் என்ற போர்வையில் வருபவர்கள் முகம் சுளிக்கும் வகையில் மலை முகடுகளிலும் புதர் மறைவிலும் அமர்ந்துகொண்டு தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள்’ என்றும் புகார் சொல்கிறார்கள்.

இந்த நிலையில், கல்குவாரிக்குள் கொலை செய்யப்பட்ட நிலையில் ஓர் இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக இன்று காலை தகவல் பரவியது. சம்பவ இடத்துக்கு காலை 8 மணிக்கே செய்தியாளர்களும் பொதுமக்களும் வந்தனர். காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்து காலை 11 மணியாகியும் அவர்கள் வரவில்லை.

அதன் பிறகே, சத்துவாச்சாரி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அழகுராணி மற்றும் போலீஸார் அங்கு வந்தனர். `சடலமாகக் கிடந்த பெண் யார்... எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியாமல் இருந்தது. சடலம் அழுகிய நிலையில் இருந்ததால், சம்பவம் நடந்தது பல நாள்கள் ஆகி இருப்பதைப்போன்று தெரிந்தது. ஆண் நண்பருடன் வந்தபோது தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது மர்ம நபர்கள் யாரேனும் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுக் கொலைசெய்து சடலத்தை வீசியிருக்கலாம்’ என்று காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.

சிறுமி சடலம்
சிறுமி சடலம்

மாயமான பெண்களின் பட்டியலைவைத்து இறந்தவரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில், வேலூரை அடுத்த அரியூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் 17 வயது மகள் என்பது தெரியவந்துள்ளது. ப்ளஸ் டூ முடித்துவிட்டு வீட்டிலிருந்த அந்தச் சிறுமி சில மாதங்களாக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் உள்ள கேன்டீனில் வேலை செய்துவந்துள்ளார். கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்து வழக்கம்போல் வேலைக்குச் சென்றார். மதியம் 2 மணியளவில் வீட்டுக்குச் செல்வதாக கூறி மருத்துவமனையிலிருந்து வெளியே வந்துள்ளார். அங்கிருந்து ஏற்கெனவே பழக்கமான ஆட்டோ ஓட்டுநருடன் ஆட்டோவில் ஏறி புதுவசூர் மலைக்கு வந்துள்ளார். அதன் பிறகே, சம்பவம் நடைபெற்றதாகத் தெரியவந்திருக்கிறது.

அதன்பிறகு, அவர் வீடு திரும்பவில்லை. மகளைக் காணவில்லை என்று வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். பெற்றோரை வரவழைத்துப் பார்த்த பிறகு காவல்துறையினரும் உறுதிசெய்தனர். தலை உடைந்து முகம் சிதைந்த நிலையில் மகள் பிணமாக கிடந்ததால் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து கதறி அழுதனர்.

சம்பவ இடத்துக்கு மாவட்ட எஸ்.பி பிரவேஷ்குமார் நேரில் வந்து விசாரணை நடத்தினார். அதையடுத்து, சிறுமியின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்கு பதிவுசெய்து சிறுமியின் செல்போன் எண்ணில் கடைசியாக பேசிய நபர்களையும் அந்த ஆட்டோ ஓட்டுநரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

சிறுமி
சிறுமி

மலைக்குக்கீழ் வசிக்கும் பெருமுகை மற்றும் புதுவசூர் கிராம மக்கள் கூறுகையில், `ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற சிலர் கல்குவாரிக்குள் கிடந்த சிறுமியின் சடலத்தை நேற்றே பார்த்துள்ளனர். ஆனால், போலீஸார் விசாரணைக்கு அழைப்பார்கள் என்று பயந்துகொண்டு போலீஸுக்கு தகவல் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டனர் எனக் கூறப்படுகிறது. இன்னும் மோசமான சம்பவங்கள் எல்லாம் இந்த மலையில் அரங்கேறுகிறது. காவல்துறையினருக்குப் பலமுறை சொல்லிவிட்டோம். அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. இனியாவது, தவறு நடக்காமல் இருக்கக் காவல்துறை மலைப் பகுதியில் தினமும் காலை, இரவு நேரங்களில் ரோந்து வர வேண்டும்’ என்றனர் அதிர்ச்சியோடு.

அடுத்த கட்டுரைக்கு