Published:Updated:

`மதுபோதையில் அத்துமீறிய மகன்!' -தேனி படுகொலை விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

செல்வி மற்றும் விஜய் பாரத்
செல்வி மற்றும் விஜய் பாரத்

தங்களை போலீஸார் பிடித்துவிடக் கூடாது என்பதற்காக, உடல் பாகங்களைத் தனித்தனியாக சாக்கு மூட்டையில் கட்டி, கம்பத்தைச் சுற்றியுள்ள வெவ்வேறு பகுதிகளில் வீசியுள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டிச் சாலையில் தொண்டைமாந்துறை அருகே முல்லைப்பெரியாறு ஆற்றங்கரையில், நேற்று முன்தினம் இரவு, கைகள், கால்கள், தலை துண்டிக்கப்பட்டு, உடல் மட்டும் சாக்கு மூட்டையில் கட்டி சடலம் ஒன்று வீசப்பட்ட சம்பவம் தேனி முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விக்னேஷ்வரன்
விக்னேஷ்வரன்

அப்போது ஆற்றங்கரையில் மீன்பிடித்துக்கொண்டிருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், உடலைக் கைப்பற்றிய கம்பம் தெற்கு காவல்நிலைய போலீஸார், விசாரணையை தீவிரப்படுத்தினர். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.

கம்பம் நகர் முழுவதிலும் உள்ள சிசிடிவி காட்சிகள் இரவோடு இரவாக ஆய்வு செய்யப்பட்டன. மேலும், தேனியிலிருந்து மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டது. சடலம் கிடந்த இடத்திலிருந்து நாராயணதேவன்பட்டி செல்லும் சாலையில் உள்ள சின்னவாய்க்கால் வரை நாய் ஓடியது. உடனடியாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளைத் தீவிரமாக தேடியது காவல்துறை.

`கணவருக்கு ஆயுள்; மூவருக்கு தலா 10 ஆண்டுகள்!' - மனைவி தற்கொலை வழக்கில் தேனி நீதிமன்றம் அதிரடி

இந்த நிலையில், நேற்று காலை, கம்பம் நந்தகோபாலன் கோயில் தெற்கு வாசல் தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி செல்வி (வயது 49) மற்றும் அவரின் மகன் விஜய் பாரத் (வயது 25) ஆகியோர் கம்பம் தெற்கு காவல்நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

விசாரணையில், கைகள், கால்கள், தலை துண்டாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டது செல்வியின் மூத்த மகன் விக்னேஷ்வரன் (வயது 30) என்பது தெரியவந்தது. தீவிர விசாரணையில், வீரநாயக்கன்குளம் என்ற பகுதியில் உள்ள வயல் ஒன்றின் கிணற்றிலிருந்து விக்னேஷ்வரனின் தலை கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று கூடலூர் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள கிணற்றில், விக்னேஷ்வரனின் கைகள் மற்றும் கால்கள் மீட்கப்பட்டன.

`மதுபோதையில் போலீஸைத் தாக்கிவிட்டேன்!' - ராமநாதபுரம் எஸ்.ஐ தாக்குதலில் கைதானவர் கதறல்

இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். விக்னேஷ்வரன், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்துள்ளார். மது, கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான விக்னேஷ்வரன், கடந்த வாரம் சொந்த ஊரான கம்பத்துக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், மது போதையில், தன் தாய் செல்வியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த செல்வி மற்றும் விஜய் பாரத் இருவரும், விக்னேஷ்வரனை அடித்துக் கொலை செய்தனர். பின்னர், கறிக்கடைகளில் பயன்படுத்தப்படும் பெரிய கத்தியை வாங்கிவந்து, விக்னேஷ்வரனின் உடலை வீட்டில் வைத்து துண்டு துண்டாக வெட்டியதாகவும், தலையைத் தனியாக வெட்டிய அவர்கள், அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக, முகத்தை சிதைத்தாகவும் தெரிவித்துள்ளனர்.

போலீஸாரிடம் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, உடல் பாகங்களைத் தனித்தனியாக சாக்கு மூட்டையில் கட்டி, கம்பத்தைச் சுற்றியுள்ள வெவ்வேறு பகுதிகளில் போட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

அடுத்த கட்டுரைக்கு