Published:Updated:

92 வீடியோக்கள்... 40 பெண்கள்... சிக்கும் அரசியல்வாதிகள்..!- ம.பி.யை பதறவைக்கும் பாலியல் வழக்கு

arrested women
arrested women

மத்தியப் பிரதேச மாநிலத்தை உலுக்கி வரும் பாலியல் வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சிகர தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த கார்ப்பரேஷன் அதிகாரி ஹர்பஜன் சிங் என்பவர் பலசியா காவல்நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை புகார் ஒன்றை அளித்தார். அதில், ``ஷிவானி மற்றும் ப்ரீத்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்கள் என்னுடன் உறவு வைத்துக்கொண்டனர். அதை வீடியோவாக எடுத்து என்னை மிரட்டி வருகின்றனர். பல முறை அவர்களுக்கு பணம் கொடுத்துவிட்டேன். இப்போது 3 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்'' எனப் புகார் கொடுத்தார். இந்தப் புகார் புலிவாலாக மாறும் என யாரும் நினைக்கவில்லை. சம்பந்தப்பட்ட இருபெண்களையும் சுற்றிவளைத்து கைது செய்து போலீஸார் நடத்திய விசாரணையில் போபால், இந்தூரைச் சேர்ந்த மேலும் மூன்று பெண்களையும் கைது செய்தனர் போலீஸார்.

arrested women
arrested women

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாநிலத்தையே உலுக்கும் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. வித்யா, சோனியா, நிஷா, ஷிவானி, ப்ரீத்தி (அனைவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) என சிக்கிய 5 பேரும் தோழிகள். இவர்களின் வேலை அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை அனுப்பி வைப்பதுதான். அப்படி அனுப்பி வைக்கும்போது அவர்களுக்குத் தெரியாமலேயே அங்கு நடப்பதை வீடியோவாக செல்போனில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். பின்னர், அதைவைத்து அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை பலரையும் மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவந்துள்ளனர்.

`அமைச்சர்கள் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை..!' - மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய 5 பெண்கள்

சொகுசு வாழ்க்கை!

முதலில் இந்த வேலையை வித்யா, சோனியா, நிஷா ஆகிய மூன்று பேர் மட்டும்தான் செய்துவந்துள்ளனர். இந்தச் சமயத்தில் கணவரைவிட்டுப் பிரிந்திருந்த ஷிவானிக்கும், வித்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வித்யா மூலமாக சோனியா, நிஷாவுடன் பழகியுள்ளார் ஷிவானி. இவர்கள் மூன்று பேரும் சொகுசான வாழ்க்கை வாழ்வதைப் பார்த்த ஷிவானியும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர்களுடன் சேர்ந்து இந்தத் தொழிலை செய்துவந்துள்ளார். இதற்கிடையேதான் ஷிவானிக்கும் ப்ரீத்திக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்த ப்ரீத்திக்கு 19 வயது மட்டுமே. குடும்பத்தின் வறுமை காரணமாக வேலை தேடி போபால் வந்தபோதுதான் ஃபேஸ்புக் மூலம் ஷிவானியைச் சந்தித்துள்ளார் ப்ரீத்தி. தனக்கு வேலை வாங்கித் தரும்படி கேட்டபோதுதான் அவரையும் தன்னுடன் கூட்டுச் சேர்த்துக்கொண்டு இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார்.

arrested women
arrested women

``ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஷிவானி உடன் நட்பானேன். குடும்ப வறுமையின் காரணமாக எனது சூழ்நிலையைச் சொல்லி வேலைக்கு உதவி கேட்டேன். அவர் ஒரு அரசு கான்ட்ராக்டர் எனக் கூறியதால்தான் இந்த உதவியைக் கேட்டேன். `பெரிய நபர்களை அறிமுகப்படுத்துகிறேன்' எனக் கூறி இந்த வேலைகளை என்னை செய்ய வைத்தார். ஆனால், அவர் இப்படி வீடியோ எடுத்து மிரட்டுவார் என எனக்குத் தெரியாது. அரசு அதிகாரி ஆக வேண்டும் என்பதே ஆசை. அதற்காகவே இந்தச் செயல்களில் ஈடுபட்டேன். நான்கு நாள்கள் முன்புகூட, `உனது வேலைக்கான ஆர்டர் ரெடியாகிவிட்டது' என்று கூறி என்னை போபால் வரவழைத்தார். ஆனால், இங்கு வந்து பார்த்தபோதுதான் போலீஸ் எங்களைக் கைது செய்தது. அப்போது எனது வீடியோவை வைத்து அவர் பணம் பறிக்க முயன்றுள்ளார் என்பது எனக்கு தெரியவந்தது" எனக் கூறி போலீஸிடம் கதறியுள்ளார் இளம்பெண் ப்ரீத்தி.

2 ஆண்டுகளாகப் பாலியல் துன்புறுத்தல்; தந்தை உட்பட 2 பேர் கைது! - கேரளச் சிறுமி அதிர்ச்சி வாக்குமூலம்

அதிர்ச்சித் தகவல்கள்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பூதாகரமாக வெடித்துள்ள இந்த விவகாரத்தை தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஐந்து பெண்களையும் தனித்தனியாக இந்த தனிப்படை விசாரித்து வருகின்றது. வித்யா, சோனியா, நிஷா ஆகியோரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்களின் எண்ணிக்கை மட்டும் 92. அனைத்தும் ஹை குவாலிட்டி வீடியோக்கள். இதில் 20-க்கும் மேற்பட்ட வீடியோக்களில் முன்னாள் அமைச்சர், கலெக்டர்கள், எம்.பி, எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் சிக்கியுள்ளனர் எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், வீடியோ வைத்து மிரட்டி இதுவரை இவர்கள் ரூ.15 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளனர் எனக் கூறியுள்ள போலீஸார் முதல்கட்டமாக அவர்களிடமிருந்து மூன்று கோடி ரூபாய் அளவில் பணத்தைக் கைப்பற்றியுள்ளனர். மேலும், இரண்டு லேப்டாப், 8 சிம் கார்டுகள் மற்றும் சொகுசு கார்கள் இரண்டையும் கைப்பற்றியுள்ளனர்.

arrested women
arrested women

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஐ.ஏ.என்.எஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ``இந்த ஐந்து பெண்கள் அரசியல்வாதிகளுக்கு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை அனுப்பி வந்துள்ளனர். முன்னாள் முதல்வர், ஆளுநர், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் இந்த மிரட்டலில் சிக்கியுள்ளனர். போபால் மற்றும் இந்தூரை தலைமையிடமாக வைத்து இந்த வேலையை பிடிபட்ட பெண்கள் செய்துள்ளனர். இதில் மொத்தம் 40 பெண்கள்வரை ஈடுபட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், 5 பெண்களில் ஒருவர் பா.ஜ.க-வின் யுவ மோர்ச்சாவில் உறுப்பினராக இருக்கிறார்" என்று கூறியுள்ளது.

ஆனால், பா.ஜ.க தரப்பில் இந்தக் குற்றச்சாட்டு மறுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த வழக்கை விசாரித்து சிறப்புப் பிரிவு அதிகாரி சஞ்சீவ் சாமி, ``இந்த வழக்கில் அரசியல்வாதிகள் முதல் சாதாரண நபர்கள் வரை சிக்கியுள்ளனர். பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடக்கும். வீடியோக்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளோம். முடிவு கிடைத்தவுடன் முழு விவரம் தெரிவிக்கப்படும். பிடிபட்ட பெண்களிடம் நடத்திய விசாரணையில் சாதாரண பெண்கள் முதல் நடிகைகள் வரை விலை மாதர்களாக அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்" எனக் கூறியுள்ளார்.

`43 வீடியோக்கள், 20 பக்க புகார், கொலை மிரட்டல்..!’ - பாலியல் வழக்கில் கைதான சுவாமி சின்மயானந்த்

பா.ஜ.க - காங்கிரஸ் சர்ச்சை!

இந்தப் பெண்கள் அனைவரும் மாநிலத்தின் பெரிய கட்சிகளான பா.ஜ.க - காங்கிரஸின் பல செல்வாக்கு மிக்க தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் தலைவர்களின் அலுவலகங்களுக்கு எந்தவித அனுமதியும் இல்லாமல் சென்று வந்துள்ளார்கள் என அம்மாநிலப் பத்திரிகைகள் கூறிவருகின்றனர். இதற்கிடையே இந்த ஐந்து பெண்களில் ஒருவர் பன்னாவில் உள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ பங்களாவில் சில காலம் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசியுள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ, ``நான் அந்த பங்களாவை புரோக்கர் மூலம் வாடகைக்குத்தான் விட்டிருந்தேன். அதுவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் அது. அவர் தற்போது காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டார்'' எனக் கூறியுள்ளார்.

Seized luxury cars
Seized luxury cars

காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் மிஸ்ரா பேசுகையில், ``இது பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருந்தது எனத் தெரியவந்துள்ளது. எனவே, அச்சுறுத்தலில் ஈடுபட்ட அரசியல்வாதிகளில் 80 சதவிகிதம் பேர் பா.ஜ.க, காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்" எனக் கூறியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசு சக்கரத்தையும் அதிரவைத்துள்ள இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள ஐந்து பெண்களும் தற்போது போலீஸ் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

news and photo credit - bhaskar.com

`தனிப்படை காவலர் மொபைலுக்கே வந்த எஸ்.எம்.எஸ்’ - மதுரையில் சிக்கிய பாலியல் கும்பல்!
அடுத்த கட்டுரைக்கு