Published:Updated:

வீட்டிலேயே இயற்கைப் பிரசவம்... எச்சரித்த சுகாதாரத்துறை; ஏற்காத தம்பதி-பெரம்பலூரில் பறிபோன 2 உயிர்கள்

பெரம்பலூர்
பெரம்பலூர்

குழந்தையைப் பாதியளவு பிரசவித்த அழகம்மாளுக்கு ரத்தப்போக்கு அதிகமானது. அதைத் தொடர்ந்து கொஞ்ச நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்குப் போராடியிருக்கிறார்.

வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவிக்க முயன்ற தாயும், பச்சிளங்குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரம்பலூரில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்
பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி கிராமத்தில் வசிப்பவர் விஜயவர்மன். இவருக்கும் அழகம்மாள் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில், கடந்த ஏப்ரல் மாதம் கருவுற்ற அழகம்மாள், கடந்த 17-06-2020 அன்று பிறப்புச் சான்றிதழுக்காக சுகாதாரத்துறையில் தான் கருவுற்றிருப்பதாகப் பதிவு செய்திருக்கிறார். அந்தப் பதிவை ஏற்றுக்கொண்ட சுகாதாரத்துறையினர் மாதந்தோறும் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக அழகம்மாளைப் பலமுறை நேரில் வந்து பரிசோதித்துக்கொள்ளுமாறு அழைத்திருக்கிறார்கள்.

விஜயவர்மன் அக்குபஞ்சர் சிகிச்சை முறையை மேற்கொண்டு வருவதால், வீட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொள்ளலாம் என குடும்பத்தாரிடம் தெரிவித்ததன் பேரில் பி.எஸ்சி நர்ஸிங் படித்திருக்கும் அழகம்மாளும் அதற்குச் சம்மதம் தெரிவித்து, மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துவந்திருக்கிறார்.

பெரம்பலூர்  போலீஸார்
பெரம்பலூர் போலீஸார்

இந்தநிலையில் அழகம்மாள் சிகிச்சைக்கு வர மறுப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்கள். புகாரின்பேரில் நடைபெற்ற விசாரணையின் முடிவில், `நாங்கள் இயற்கை முறையில் பிரசவித்துக்கொள்கிறோம். அதில் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அரசு மருத்துவர்களோ, சுகாதாரத்துறையினரோ எந்தவிதத்திலும் பொறுப்பல்ல’ என எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.

இந்தநிலையில், நேற்று இரவு அழகம்மாளுக்கு திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சுகாதாரத்துறையினர் நேரில் சென்று பார்த்தபோது, குழந்தையைப் பாதியளவு பிரசவித்த அழகம்மாள் ரத்தப்போக்கு அதிகமான நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்குப் போராடியிருக்கிறார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அழகம்மாளை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து, சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள்.

பெரம்பலூர் காவல் நிலையம்
பெரம்பலூர் காவல் நிலையம்

அழகம்மாளுக்கு ஐந்து பேர்கொண்ட மருத்துவக்குழுவினரால் அளிக்கப்பட்ட சிகிச்சையின்போது, வீட்டிலேயே செய்யப்பட்ட மருத்துவத்தால் ஏற்பட்ட விபரீதம் காரணமாக குழந்தையின் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையில் முன்னேற்றமில்லாமல் கவலைக்கிடமான நிலையில் அழகம்மாள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு