Published:Updated:

`தங்கச்சி பாப்பா அழுதுட்டே இருந்தா; வாயில துணியை அடைச்சாங்க!’ -சிறுமியால் சிக்கிய தாய்

வாலாஜாபேட்டையில், ஒன்றரை வயது பெண் குழந்தையைப் புடவையால் வாயைப் பொத்தி, கொலை செய்த கொடூரத் தாயை போலீஸார் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட பவித்ரா
கைதுசெய்யப்பட்ட பவித்ரா

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையை அடுத்த வன்னிவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கௌரிசங்கர். முடிதிருத்தும் சவரத் தொழிலாளி. இவரும், அதேபகுதியைச் சேர்ந்த பவித்ரா (23) என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 8 வயதில் ரம்யா, ஒன்றரை வயதில் மௌலிக்கா என்று இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில், ஓராண்டுக்கு முன்பு கௌரிசங்கருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. 

பெண் குழந்தையின் சடலம்
பெண் குழந்தையின் சடலம்

மனைவி, குழந்தைகளைவிட்டு, கௌரிசங்கர் திடீரென ஒரு நாள் அந்தப் பெண்ணுடன் வெளியூர் சென்றுவிட்டார். குழந்தைகளுடன் ஆதரவின்றி தவித்த பவித்ரா, கணவனின் ஊரில் இருக்கப் பிடிக்காமல், வாலாஜாபேட்டை திரௌபதி அம்மன் கோயில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினார். மூத்த மகளை, அங்குள்ள அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு சேர்த்துள்ளார். வேலைக்குச் செல்லும்போது, தன் கைக்குழந்தையை பக்கத்து வீட்டில் கொடுத்துவிடுவார். 

இரவு வீடு திரும்பிய பிறகு குழந்தையை வாங்கிக்கொள்வார். கணவரை இழந்த பெண் என்பதால், பக்கத்து வீட்டாரும் உதவியாக இருந்தனர். இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக பவித்ரா வேலைக்குச் செல்லவில்லை. பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். நேற்றிரவு திடீரென பவித்ரா சத்தம்போட்டு கதறி அழுதார். பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து பார்த்தபோது, ஒன்றரை வயதுக் குழந்தை மௌலிக்கா சுயநினைவின்றி கிடந்தது. 

பெண் குழந்தையின் சடலம்
பெண் குழந்தையின் சடலம்

உடனே, வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனைக்குக் குழந்தையை தூக்கிச் சென்றனர். மருத்துவ பரிசோதனையில், சில மணி நேரத்துக்கு முன்பே குழந்தை இறந்தது தெரியவந்தது. சந்தேகமடைந்த மருத்துவர்கள், வாலாஜாபேட்டை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்துவந்து, பவித்ராவையும் அவரின் 8 வயது மகள் ரம்யாவையும் விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். ``நேற்றிரவு நீண்ட நேரமாகக் குழந்தை தேம்பித் தேம்பி அழுதுகொண்டே இருந்தது.

திடீரென அழுகை நின்றுவிட்டது. நான் பார்க்கும்போது, குழந்தை சுயநினைவில்லாமல்தான் கிடந்தது’’ என்றுகூறி தாய் பவித்ரா அழுதுபுரண்டார்.

சிறுமி ரம்யாவிடம் போலீஸார் கேட்டபோது, ``தங்கச்சி பாப்பா அழுதுட்டே இருந்தா; அம்மா, வாயில் துணியை அழுத்துனாங்க. அப்புறம் பாப்பா அழவே இல்லை’’ என்றாள். தாய் பவித்ரா மீதான சந்தேகம் உறுதியானதால், போலீஸார் கிடுக்கிப்பிடியாக விசாரிக்கத் தொடங்கினர். அதன்பிறகே, குழந்தையைக் கொன்றதை பவித்ரா ஒப்புக்கொண்டார். 

கைதுசெய்யப்பட்ட தாய் பவித்ரா
கைதுசெய்யப்பட்ட தாய் பவித்ரா

``நான் மன அழுத்தத்தில் இருந்தேன். குழந்தை அழுதுகிட்டே இருந்ததால் எரிச்சலானேன். கோபத்தில் முந்தானையால் வாயை அழுத்திப் பிடித்தேன். மூச்சுத் திணறி பாப்பா இறந்து போயிட்டாள். நான் அழுகையை நிறுத்த முயன்றேனே தவிர, கொலை செய்யும் நோக்கத்தில் செய்யவில்லை’’ என்று வாக்குமூலம் கொடுத்ததாக காவல்துறையினர் கூறுகிறார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, வாலாஜாபேட்டை கிராம நிர்வாக அலுவலர் அதியமான் கொடுத்த புகாரின் பேரில், கொலை வழக்கு பதிவுசெய்த போலீஸார் தாய் பவித்ராவை கைதுசெய்தனர்.