விருதுநகர், அல்லம்பட்டி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ். அந்தப் பகுதியிலுள்ள மில் ஒன்றில் கூலித்தொழிலாளியாக வேலை செய்துவருகிறார். இவருடைய மனைவி ஜான்சி ராணி. இந்தத் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, வழக்கம்போல அந்தோணி ராஜுக்கும், ஜான்சி ராணிக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, தந்தைக்கு ஆதரவாக மூத்த மகள் பேசியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், கணவன், மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னையைப் பேசி விலக்கிவைத்தனர். ஆனாலும் அவர்களுக்குள் தொடர்ந்து சண்டை நடந்திருக்கிறது. இந்த நிலையில், இரவு வேலைக்காக அந்தோணி ராஜ் நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்ற பிறகு, ஜான்சி ராணி தன் மகள்களைக் கொலைசெய்துவிட்டு, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதற்காக ஜான்சி ராணி, தன்னுடைய மூத்த மகளைச் சுத்தியலால் தாக்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, சமையல் கத்தியால் அவளின் கழுத்து, தலைப்பகுதியில் அறுத்திருக்கிறார். அதோடு அவளை வீட்டுக்குள்விட்டு, கதவுகளைப் பூட்டிவிட்டு, தன் இளைய மகளுடன் தற்கொலை செய்துகொள்ளப் புறப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அல்லம்பட்டி ரயில்வே மேம்பாலத்திலிருந்து முதலில் இளைய மகளைத் தள்ளிவிட்ட பிறகு, தானும் மேலிருந்து கீழே குதித்திருக்கிறார். இதற்கிடையே அல்லம்பட்டி வீட்டுக்குள் மூத்த மகளின் கதறல் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு மீட்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படை வீரர்கள் வீட்டுக்கதவை உடைத்து மூத்த மகளை மீட்டனர்.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், அல்லம்பட்டி ரயில்வே மேம்பாலத்துக்குச் சென்ற போலீஸார், அங்கு படுகாயங்களுடன் கிடந்த ஜான் சிராணி, ரித்திக்காவை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு, தாய், மகள்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் குழந்தைகளின் தாய் ஜான்சி ராணிமீது, விருதுநகர் கிழக்கு காவல் நிலையப் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.