Published:Updated:

”பல பொய் வழக்குபோல இது ஒரு வழக்கு!” - முகிலன் பேட்டி

முகிலன்
முகிலன் ( படங்கள்: ஐஷ்வர்யா )

"என் மேல எத்தனையோ பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கு. என்னை திட்டமிட்டு அவமதிக்கவே அதெல்லாம் செஞ்சாங்க. இந்தப் பாலியல் வழக்கும் அப்படித்தான்".

140 நாள்களுக்கும் மேலாக மாயமாகிப்போயிருந்த முகிலன், ஆந்திர மாநிலம் திருப்பதியில் கிடைத்தார். அங்கிருந்து சென்னை சிபிசிஐடி அலுவலகம் கொண்டுவரப்பட்டார். ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில், சென்னைக்குக் கொண்டுவரப்பட்டவர்மீது ஐ.பி.சி 376 மற்றும் ஐ.பி.சி 417-ன் கீழ் பாலியல் மற்றும் ஏமாற்றுதல் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒன்பது மணிக்கே சிபிசிஐடி அலுவலகத்திலிருந்து அவர் அழைத்துச்செல்லப்பட்டாலும் இடையில் உடல்நிலை சரியில்லை எனக் கூறியதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இரவு ஒருமணிக்கு ராயபுரத்தில் உள்ள எழும்பூர் மாஜிஸ்திரேட் வீட்டுக்கு அழைத்துவரப்பட்டார். மாஜிஸ்திரேட்டுக்காக காத்திருந்த வேளையில், அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட சில கேள்விகளும் அதற்கு அவரின் பதில்களும்...

ஆந்திராவுக்கு எப்படிப் போனீங்க?

அதைப் பற்றியெல்லாம் அவங்ககிட்ட (எழும்பூர் மாஜிஸ்திரேட்) சொல்லப்போறேன். அதுக்காக இப்படி நடுராத்திரில கூட்டிட்டு வரணுமா?

உங்க உடல்நிலை எப்படி இருக்கு?

உடல்நிலை கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. மனநிலை கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. இவங்க எதையுமே அனுமதிக்க மறுக்கிறாங்க. நீதிபதி அதுபத்திலாம் கேட்கணும். அந்தப் பொறுப்பு அவங்களுக்கு இருக்கு. ஆட்கொணர்வு மனு போட்டிருக்காங்க. ஆனா, அதுபத்தி முறையான வகையில் விசாரிக்காம இதெல்லாம் செய்றாங்க. என் மேல வேற பல வழக்குகள் போட்டிருக்கிறதா சொல்றாங்க.

உங்க மேல பாலியல் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கே?

முகிலன்
முகிலன்
ஐஷ்வர்யா

என் மேல எத்தனையோ பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கு. என்னை திட்டமிட்டு அவமதிக்கவே அதெல்லாம் செஞ்சாங்க.

உங்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதாகச் சொன்னாங்களே?

மருத்துவப் பரிசோதனை முழுமையாக முடியவில்லை. எனது மனநலப் பிரச்னையைச் சொன்னேன். ஆனால், அதற்கான மருத்துவர்கள் அங்கே இல்லை.

உங்களுக்கு நெஞ்சுவலி எனத் தகவல் வந்ததே, உண்மையா?

நெஞ்சுவலி, ஏற்கெனவே இருந்தது அதைச் சொன்னேன்.

நாய் கடித்து சிகிச்சை என்றெல்லாம் சொல்கிறார்களே?

நாய்...ஒரு 15 நாள்களுக்கு முன்பு கடித்தது உண்மைதான். சென்னை வருவதற்கு முன்பு வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் மூன்று ஊசி போட்டார்கள்.

சிபிசிஐடி காவல் எப்படி இருக்கு?

முகிலன்
முகிலன்
ஐஷ்வர்யா

சிபிசிஐடி அலுவலகத்தில்தான் வைத்திருந்தார்கள். வேளைக்கு சோறு கொடுத்தார்கள். ஆனால், எனக்கு பிரச்னை என்று சொன்னதும் ஐஜி சைலேஷ் குமாரிடம்தான் விசாரித்திருக்க வேண்டும் ஆனால், ஜி. சங்கர் என்னைத்தான் விசாரித்தார்.

நீங்கள் காணாமல் போனதில் வேறு யாருக்கேனும் பங்கு இருக்கிறதா?

என்னை கடத்திக்கொண்டுபோய் வைத்திருந்தவர்கள், கண்ணைக் கட்டிதான் வைத்திருந்தார்கள். ஒருத்தர் மட்டும்தான் வந்து பேசினார். இதில், காவல்துறையின் பங்கு கட்டாயம் இருக்கிறது. நான், தொடர்வண்டியில் போகும்போது கடத்தப்பட்டதில், காவல்துறையின் பங்கு, முழுக்க முழுக்க இருக்கு. இதை திசைதிருப்ப அத்தனையும் செய்கிறார்கள். இந்த நாட்டில் பட்டப்பகலில் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் (தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு). ஆனால், அதைப் பற்றி விவாதம் இத்தனை மாதத்தில் வந்ததா? இவர்கள் திசைதிருப்பப் பார்க்கிறார்கள்.

உங்களை எத்தனை நாள் கடத்தி வைத்திருந்தார்கள்... எப்போது விட்டார்கள் என்பது நினைவிருக்கிறதா?

நாள்கணக்கெல்லாம் தெரியாதுங்க, குறிப்பிட்ட நாள்கள் வெச்சிருந்தாங்க. அப்புறம் விட்டாங்க. உடல்ரீதியா, மனரீதியா நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தினாங்க.

கடத்தினவங்க உங்களிடம் என்ன பேசினாங்க?

ஒரே ஒருத்தர் மட்டும் வந்து பேசினாங்க. உங்களுக்கு வேணும்கிறதை செட்டில் செய்து கொடுத்துடுறோம். நீங்க சொன்னா கேட்க மாட்டீங்க, வெளிநாடு எங்கையாச்சும் போய் செட்டில் ஆகிடுங்கன்னு மிரட்டினாங்க. நான் பயங்கரமா சண்டைக்குப் போயிட்டேன். உடனே, ‘நீங்க ஒப்புக்கிட்டா நல்லது ஒப்புக்கிடலையா, உங்களை மிகப்பெரிய அளவுல அவமானப்படுத்துவோம். உங்க குடும்பத்தை ஒண்ணுமில்லாம செய்வோம்னு அச்சுறுத்தினாங்க. இன்னிக்கு வெளிய வந்து பார்த்தா, எங்க குழுவோட டாக்டர் ரமேசுடைய மனைவி, விபத்து என்கிற பெயரில் கொல்லப்பட்டிருக்கிறார். என்னுடைய மனைவியும் மகனும் இறந்துட்டதா செய்தித்தாள் பேப்பர் கட்டிங்க்ஸ் எடுத்துட்டு வந்து காட்டினாங்க. நேத்து இரவு வரைக்கும் (6/7/2019) அவங்க இறந்துட்டதாகவே கருதிட்டு இருந்தேன். மனதளவுல சித்ரவதை செஞ்சாங்க.

உங்களை எதுக்காக ஒப்புக்கொள்ளச் சொன்னாங்க?

முகிலன்
முகிலன்
கண்ணன்

“நீங்க ஸ்டெர்லைட் தொடர்பா வாயத் தொறக்கக் கூடாது. மத்த போராட்டம் வேண்டுமானா செய்துக்கங்க அப்படின்னு மிரட்டினாங்க.

ஸ்டெர்லைட்தான் இதுக்குப் பின்னாடி இருக்குனு சொல்றாங்களா?

முழுக்க முழுக்க... ஸ்டெர்லைட் நிர்வாகமும் காவல்துறையும்தான் இருக்கு.

ஆந்திர காவல்துறை உங்களை ஏதும் துன்புறுத்தினார்களா?

அவர்கள் எதுவும் செய்யலை. எந்தவிதமான சங்கடங்களையும் அவங்க ஏற்படுத்தலை.

உங்க மேல சொல்லப்பட்டிருக்கிற குற்றச்சாட்டுகளை நேர்மையோட எதிர்கொள்வீங்களா?

வழக்கை எல்லா வகையிலும் நேர்மையோட சந்திப்பேன். நேரா சந்திக்கிறோம், உண்மையைப் பேசுறோம், வருவதை எதிர்கொள்றோம். இதில் நம்மை அச்சப்படுத்த ஒண்ணுமில்லை. சந்திக்கத் தயாரா இருக்கோம். நாடு எப்படி இருக்குங்கிறதைப் பார்க்கவேண்டிய அவசியம் இருக்கு. இந்த நாட்டுல ஜட்ஜு அடிக்கப்பட்டு, அதற்கான நியாயம் கிடைக்கல. ஒரு போலீஸ் கொல்லப்பட்டு, அதற்கான நியாயம் கிடைக்கல. நேர்மையான அதிகாரிகளையும் செயல்பட விடுறதில்ல. ஜெயலலிதா செத்ததே, இறந்தாரா இல்லை கொல்லப்பட்டாரா தெரியலை. ஜெயலலிதா பங்களாவில மர்ம மரணம் பத்தி எதுவும் தெரியலை. இங்க எது நடந்தாலும் கேட்க ஆளில்லை. அதெல்லாம் ஆளும் வகுப்போட தந்திரங்கள். அதனால, இப்பகூட பாருங்க. என்னைக் கூட்டிட்டுப் போய் வெச்சு நிறைய ஊசியெல்லாம் போட்டாங்க.

உங்களைப் போல பலர் போராட்டம் பண்றாங்க, உங்களை மட்டும் டார்கெட் செய்ய என்ன காரணம்?

நான் ஒண்ணு கேட்கிறேன், ஸ்டெர்லைட்டை எதிர்த்து சிறைக்குள்ள போராட்டம் பண்ணேன், என்னைக் கொண்டுபோய் மதுரைச் சிறையில் கொசுக்கடிக்குள் வைத்து கொல்லப்பார்த்தாங்க. கேட்டால் நிர்வாகக் காரணமா மாத்தினதாச் சொன்னாங்க. பிரச்னையைப் பொறுத்தவரை, யார் சரியா உயர்த்திப் பிடிக்கிறாங்க என்பதில் தெளிவா இருக்காங்க.

அடுத்த கட்டுரைக்கு