Published:Updated:

மும்பை: திருமணத்துக்கு மறுத்த நடிகைக்குக் கத்திக் குத்து... போலீஸில் சிக்கிய தயாரிப்பாளர்!

நடிகை மால்வி மல்ஹோத்ரா
நடிகை மால்வி மல்ஹோத்ரா ( Twitter/MalviMalhotra )

மும்பையில் திருமணம் செய்ய மறுத்த நடிகை மால்வி மல்ஹோத்ரா கத்தியால் குத்தப்பட்டார்.

மும்பையில் டி.வி சீரியல் மூலம் பிரபலமான நடிகை மால்வி மல்ஹோத்ரா, கத்தியால் குத்தப்பட்டார். சொகுசு காரில் வந்த ஒருவர், நடிகையை வயிற்றில் ஒரு முறையும், கைகளில் இரண்டு முறையும் கத்தியால் குத்தியிருக்கிறார். சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட நடிகை மால்வி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச்சென்ற நபர் தயாரிப்பாளர் யோகேஷ்குமார் மகிபால் சிங் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

நடிகை மால்வி மல்ஹோத்ரா
நடிகை மால்வி மல்ஹோத்ரா
Instagram/Malvimalhotra

இந்தச் சம்பவம் தொடர்பாக நடிகை மால்வி மல்ஹோத்ரா காவல்துறையினரிடம், `யோகேஷ்குமார் மகிபால் சிங்கை எனக்கு ஒரு வருடமாகத் தெரியும். இருவரும் நண்பர்களாகப் பழகிவந்தோம். அவர் என்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தினார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். பின்னர், அவருடன் பேசுவதை நான் நிறுத்திவிட்டேன்’ என்று கூறியிருக்கிறார்.

`நான்கு கண்டிஷன்கள்!'- போதைப்பொருள் வழக்கில் நடிகை ரியாவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன்

மால்வி துபாயிலிருந்து கடந்த 25-ம் தேதி திரும்பிய நிலையில், அதற்கு அடுத்த நாள் அவரைச் சந்திக்க யோகேஷ்குமார் முயன்றிருக்கிறார். மும்பையின் வெர்சோவா பகுதியிலுள்ள உணவகம் ஒன்றிலிருந்து கடந்த 26-ம் தேதி இரவு 9 மணியளவில் மால்வி வெளியே வந்திருக்கிறார். அப்போது, சொகுசு கார் ஒன்றில் வந்திறங்கிய யோகேஷ், மால்வியை வழிமறித்து தன்னுடன் பேசுவதை ஏன் நிறுத்தினாய் என்று கேட்டிருக்கிறார். வாக்குவாதம் முற்றியநிலையில், மால்வியை மூன்று முறை கத்தியால் குத்திவிட்டு, அந்த இடத்திலிருந்து யோகேஷ்குமார் காரில் தப்பியிருக்கிறார்.

நடிகை மால்வி மல்ஹோத்ரா
நடிகை மால்வி மல்ஹோத்ரா
Instagram/Malvimalhotra

இந்தச் சம்பவம் தொடர்பாக யோகேஷ்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாக வெர்சோவா போலீஸார் தெரிவித்தனர். மருத்துவமனையிலுள்ள நடிகை மால்வி மல்ஹோத்ரா குணமடைந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு