Election bannerElection banner
Published:Updated:

மும்பை: கூலிப்படையைவைத்து கணவனைத் தீர்த்துக்கட்டிய பெண் போலீஸ்!

ஸ்நேகல்
ஸ்நேகல்

மும்பையில் பெண் கான்ஸ்டபிள் ஒருவர், தன் கணவனை கூலிப்படைவைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அருகிலுள்ள பால்கரில், கான்ஸ்டபிளாக இருப்பவர் ஸ்நேகல் பாட்டீல். இவரின் கணவர் புந்தாலிக் பாட்டீல். இவர் ஆட்டோ ஓட்டிவருகிறார். ஸ்நேகல் பாட்டிலுக்கு அவருடன் பணியாற்றிய மற்றொரு கான்ஸ்டபிளான விகாஸ் பாஸ்டே என்பவருடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இவர்களின் உறவு காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அதோடு புந்தாலிக் பாட்டீல் ஆட்டோ ஓட்டச் சென்ற நேரத்தில் விகாஸ் அவர்களது வீட்டுக்குச் சென்று வந்திருக்கிறார். புந்தாலிக் அடிக்கடி தனது மனைவிக்குச் சாப்பாடு எடுத்துக்கொண்டு காவல் நிலையத்துக்குச் செல்வது வழக்கம்.

ஸ்நேகல்
ஸ்நேகல்

அப்படி ஒருநாள் சாப்பாடு எடுத்துச் சென்றபோது, அவருக்கு விவகாரம் தெரியவந்திருக்கிறது. அதோடு ஒருமுறை புந்தாலிக் வெளியில் சென்ற நேரம் பார்த்து விகாஸ், ஸ்நேகல் வீட்டுக்கு வந்திருக்கிறார். இருவரும் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் திடீரென புந்தாலிக் வீட்டுக்குள் வந்துவிட்டார். இதனால் கணவன், மனைவி இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது.

மிகவும் எரிச்சலடைந்த ஸ்நேகல், இனியும் தன் கணவனை விட்டுவைத்தால் நிம்மதியாக இருக்க முடியாது என்று முடிவு செய்திருக்கிறார். இதற்காக விகாஸுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். விகாஸ், தனது நண்பர்கள் ஸ்வப்னில், அவினாஸ் இருவரிடமும் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். அவர்களுக்கு கொலையை செய்ய ரூ.2.5 லட்சம் தருவதாக விகாஸ் தெரிவித்திருக்கிறார். கொலையாளிகள் இரண்டு பேரும் மேலும் ஒருவரைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டு இந்தக் காரியத்தில் ஈடுபடத் திட்டமிட்டனர்.

இதையடுத்து ஆட்டோ டிரைவரான புந்தாலிக்கிடம் வாடிக்கையாளர்போல் மூன்று பேரும் ஆட்டோவில் ஏறினர். மனோர் என்ற இடத்துக்குச் செல்லும்படி ஆட்டோ டிரைவரிடம் கேட்டுக்கொண்டனர். மனோர், காடுகள் நிறைந்த பகுதி. ஆட்டோ, ஆள் நடமாட்டம் இல்லாத இடம் வழியாகச் சென்றபோது பின்னாலிருந்த மூன்று பேரும் கத்தியால் புந்தாலிக்கின் தலை மற்றும் கழுத்தில் தாக்கியிருக்கிறார்கள். இதில் பலத்த காயமடைந்த புந்தாலிக், அங்கேயே உயிரிழந்தார். விபத்தில் இறந்ததுபோல் காட்டுவதற்காக, புந்தாலிக்கின் உடலை பின் சீட்டில் தூக்கிப் போட்டுவிட்டு ஆட்டோவை கவிழ்த்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

விழுப்புரம்: கணவனைக் கொன்று புதைத்து நாடகமாடிய மனைவி - திருமணம் மீறிய உறவு காரணமா?

போலஸார் புந்தாலிக்கின் உடலைக் கைப்பற்றி விசாரித்து, அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து தீவிர விசாரணையில் இறங்கினர். ஆரம்பத்தில் எந்தத் துப்பும் கிடைக்காமல் இருந்தது. அதன் பிறகு ஆட்டோ கவிழ்ந்துகிடந்த சாலையிலிருந்த ஏராளமான கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதோடு கொலை நடந்த இடத்திலிருந்து யாரெல்லாம் போனில் பேசியிருக்கின்றனர் என்ற போன் கால் விவரங்களையும் போலீசார் சேகரித்தனர். அதில் கொலையாளிகள் சிக்கினர். ஸ்வப்னில், அவினாஸ் ஆகியோரைக் கைதுசெய்து விசாரித்தபோது விகாஸ் சிக்கினார். விகாஸிடம் விசாரித்த பிறகுதான் இதில் ஸ்நேகல் முக்கியக் குற்றவாளி என்று தெரியவந்தது. தற்போது போலீஸார் ஐந்து பேரையும் கைதுசெய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு