Election bannerElection banner
Published:Updated:

மும்பையை உலுக்கிய ஆபாசப் பட சர்ச்சை; நடிகை உட்பட 9 பேர் கைது! - என்ன நடந்தது?

கெஹானா வசிஸ்த்
கெஹானா வசிஸ்த்

மும்பையில் மாடல் அழகிகளைவைத்து ஆபாசப் படம் எடுத்ததாக இந்தி நடிகை உட்பட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

வளர்ந்துவரும் நடிகைகள் சரியான வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடும்போது, அவர்களை வலையில் விழவைத்து ஆபாசப் படங்களில் நடிக்கவைத்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்திருக்கிறது ஒரு கும்பல். சமீபத்தில் மும்பை மலாடு மத் தீவிலுள்ள ஒரு பங்களாவில் போலீஸார் ரெய்டு நடத்தியபோது அங்கு ஆபாசப் படத்துக்காக வீடியோ எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அங்கிருந்த ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர்.

உமேஷ்
உமேஷ்

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்தி நடிகை கெஹானா வசிஸ்த் என்பவர்தான் இந்த ஆபாசப் படம் எடுக்கும் கும்பலுக்குத் தலைவி என்று தெரியவந்திருக்கிறது. கெஹானா, இந்தி உட்பட பல மொழிப் படங்களில் நடித்திருப்பதோடு விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் சொந்தமாக வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் போன்றவற்றை வைத்திருக்கிறார். இவற்றில் பெரும்பாலும் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் இடம்பெற்றிருக்கும். பணம் கட்டினால் மட்டுமே அவற்றைப் பார்க்க முடியும். இந்த வெப்சைட்டில் பதிவேற்றம் செய்வதற்காகவே கெஹானா சொந்தமாக ஆபாசப் படம் தயாரித்துவந்திருக்கிறார் என்கிறார்கள் போலீஸார். அவர் இந்தப் படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு ரூ.15,000 - 20,000 வரை சம்பளம் கொடுத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்படும் நடிகைகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு வெப் சீரீஸில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாகக் கூறுவது இந்தக் கும்பலின் வழக்கம். அவர்களின் வலையில் விழும் பெண்களைக் கட்டாயப்படுத்தி, ஆபாசப் படங்களில் நடிக்கவைத்துவிடுவார்களாம். பணத்துக்கு ஆசைப்பட்டு வேறு வழியில்லாமல் சில பெண்கள் தொடர்ச்சியாக இது போன்ற படங்களில் நடித்துவிடுகின்றனர். ஆபாசப் படங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் விளம்பரமும் செய்வதுண்டு. கெஹானா, தன் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை முற்றிலும் மறுத்திருக்கிறார். ஆனால், அவரது வங்கிக் கணக்கில் வெப்சைட் பார்க்க வாடிக்கையாளர்கள் கொடுத்த பணம் இருந்தது. இந்த ஆபாசப் பட மோசடி தொடர்பாக உமேஷ் காமத் என்பவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இவர் மும்பையில் தயாரிக்கப்படும் ஆபாசப் படங்களை பிரிட்டனுக்கு விற்பனை செய்வதில் முக்கியப் பங்காற்றிவந்தார். இந்த ஆபாசப் படங்கள் தயாரிக்கப்பட்டதில் தொடர்புடைய ஒருவர் குஜராத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இதில் தொடர்புடைய ஒன்பது பேர் இது வரை கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். கைதுசெய்யப்பட்டிருக்கும் கெஹானா 2012-ம் ஆண்டு மிஸ் ஆசிய பிகினி அழகிப்போட்டியில் வெற்றி பெற்றவர். அவரது உண்மையான பெயர் வந்தனா திவாரி. இதில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து கெஹானாவிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.

நெல்லை: கஞ்சா போதை... ஆபாசப் படம்... பாலியல் தொல்லை - 3 இளைஞர்களால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

இதற்கிடையே மேலும் ஒரு மாடல் அழகி, தனக்கும் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஆபாசப் படம் எடுத்துவிட்டதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். 29 வயதான அந்த மாடல் அழகியும் தன்னை மலாடு மத் தீவு பங்களாவில்வைத்து மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து வீடியோ எடுத்ததாகச் சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் அப்பெண்ணிடம் ஆபாசப் படத்தில் நடிக்கும் படி கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர் மறுத்ததால் மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து படத்தை எடுத்திருக்கிறார்கள். அந்தப் படத்துக்காக அவருக்கு ரூ.30,000 கொடுத்திருக்கிறார்கள். இது குறித்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு