Published:Updated:

மதுரை: `பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழிக்கிறார் என் கணவர்!’ - அதிரவைத்த காவலர் மனைவியின் புகார்

சமூக ஊடக போலிக் கணக்குகள்
சமூக ஊடக போலிக் கணக்குகள்

கமிஷனரின் உத்தரவின்பேரில் போலீஸ்காரர் முத்துசங்குவிடம் விசாரணை நடந்துவருகிறது. அவருடைய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.

"சமூக ஊடகங்களில் போலியான பெயர்களில் கணக்குகளைத் தொடங்கி, பல பெண்களை மிரட்டியும், வாழ்க்கையைச் சீரழித்தும்வருகிறார் என் கணவர். அவரை விசாரியுங்கள்" என்று போலீஸ்காரரின் மனைவியே கமிஷனரிடம் புகார் கொடுத்திருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளம்
சமூக வலைதளம்

மதுரை மாநகர காவல்துறையின் டெல்டா அதிரடிப்படையில் பணியாற்றிவருகிறார் முத்துசங்கு. காவலர் குடியிருப்பில் வசித்துவரும் நிலையில், இவர் மனைவி சுபாஷினி மதுரை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.

அதில், ``எனக்கும் முத்துசங்குவுக்கும் கடந்த 2019-ல் திருமணம் நடந்தது. தான் எஸ்.ஐ-யாக இருப்பதாகப் பொய் சொல்லித்தான் திருமணம் செய்தார். அதற்காக 25 பவுன் நகையும், ரூ.1,30,000 ரொக்கமும் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டது. அவர் எஸ்.ஐ இல்லையென்பது திருமணத்துக்குப் பிறகுதான் தெரிந்தது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
representational image

அதன் பின்பும் இன்னும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். இதனால் நான் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். `நான் அமைச்சருக்கு பாதுகாப்புக்குச் செல்பவன்’ என்று சொன்னதால் மகளிர் காவல்துறையினர் அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை.

அதன் பிறகு பெரியவர்கள் சமாதானப்படுத்தி, எங்களைச் சேர்ந்து வாழச்சொன்னார்கள். ஆனால், அதற்குப் பிறகு மிக மோசமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். என் உடலில் சூடுவைத்தார்.

இந்தநிலையில்தான், அவர் செல்போனைப் பார்த்ததில் அவருடைய உண்மையான முகம் தெரிந்தது. சமூக ஊடகங்களில் பல பெயர்களில் போலிக் கணக்குகளை உருவாக்கிவைத்து, பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார்.

முத்துசங்கு
முத்துசங்கு

அதுமட்டுமல்லாமல், அந்தப் பெண்களுடன் நெருக்கமாக, ஜோடியாக போட்டோ எடுத்துவைத்திருந்தார். அந்தப் படங்களை அவர்களிடம் காட்டி, மிரட்டிப் பணம் பறித்தும் இருக்கிறார். அதனால் அவரை விசாரிக்க வேண்டும். அவருடைய செல்போனை ஆய்வு செய்தால் பல உண்மைகள் வெளிவரும்" என்று புகாரில் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து கமிஷனரின் உத்தரவின்பேரில் போலீஸ்காரர் முத்துசங்குவிடம் விசாரணை நடந்துவருகிறது. அவருடைய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு உறுதியானால், அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள் காவல் அதிகாரிகள்!

அடுத்த கட்டுரைக்கு