Published:Updated:

காதல் கூடாது; மகளைத் தீவைத்து எரித்து தற்கொலைக்கு முயன்ற தாய்! - நாகை அருகே சோகம்

நாகை அரசு மருத்துவமனை
நாகை அரசு மருத்துவமனை

நாகை அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய், பெற்ற மகளைத் தீவைத்துக் கொன்று, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த வாழ்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தச்சுத் தொழிலாளியான கண்ணன். இவரின் மனைவி உமா மகேஸ்வரி (வயது 48). இத்தம்பதிக்கு ப்ளஸ் ஒன் படித்துவந்த மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

தற்கொலை
தற்கொலை

ப்ளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்த அவர்களின் மகளுக்கு அதே தெருவில் வசிக்கும் ராஜ்குமார் என்பவரை இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்திருக்கிறார். இந்தக் காதல் விஷயம் தாய் உமா மகேஸ்வரிக்குப் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து மகளைக் கடுமையாகக் கண்டித்ததுடன் படிப்பையும் நிறுத்திவிட்டார். இருப்பினும் காதலில் உறுதியாக இருந்த மகள், காதலருடன் பேசிக்கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று அவர் காதலனை நேரில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்ததை, தாய் உமா மகேஸ்வரி பார்த்தாகச் சொல்கிறார்கள். அதில், கோபமடைந்தார் உமா மகேஸ்வரி. கணவர் கண்ணன் வெளியூர் வேலைக்குச் சென்றுவிடவே, மகன் வெளியில் படுத்துறங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது வீட்டில் தாய்க்கும் மகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. மகள், தன் காதலில் உறுதியாக இருந்தார். இதில் எரிச்சலான உமா மகேஸ்வரி, இன்று விடியற்காலை 4 மணிக்கு உறங்கிக்கொண்டிருந்த மகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டு, தானும் ஊற்றிக்கொண்டு தீயைப் பற்றவைத்திருக்கிறார். இருவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து, இருவரையும் நாகை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் சிகிச்சைப் பலனின்றி மகள் இன்று மாலை பரிதாபமாக இறந்தார். உமா மகேஸ்வரி பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகிறார்.

நாகை அரசு மருத்துவமனை
நாகை அரசு மருத்துவமனை

இதுபற்றி திட்டச்சேரி காவல் நிலைய போலீஸாரிடம் கேட்டபோது,``மகளுக்கு இன்னும் 10 நாள்களில் 18 வயது பூர்த்தியாகிறது. `அதன்பின் காதலனை மணம் முடிப்பேன். சட்டப்படி நாங்கள் ஒன்று சேர்வதை உன்னால் தடுக்க முடியாது' என்று பேசியதால் தாய் உமா மகேஸ்வரி இத்தகைய கொடூர முடிவுக்கு வந்துவிட்டார். அவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் உள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு