Published:Updated:

நாமக்கல்: 2 சிறுமிகள்... 6 மாதமாக பாலியல் வன்கொடுமை! 75 வயது முதியவர் உட்பட 7 பேர் கைது

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( Representational Image )

இந்த விவகாரத்தில், 75 வயது முதியவர் முத்துசாமி, சிவா, சண்முகம், மணிகண்டன், சூர்யா, செந்தமிழ்செல்வன், வரதராஜன் ஆகிய 7 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

நாமக்கல்லில் இரண்டு பெண் குழந்தைகளைக் கடந்த ஆறு மாதங்களாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 75 வயது முதியவர் உட்பட ஏழு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முத்துசாமி
முத்துசாமி

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அணைப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மகளுடனும், 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மகளுடன் இவர் தனியாக ஓலைக்குடிசை ஒன்றில் வசித்துவருகிறார். மிகவும் ஏழ்மையான நிலையில், பொருளாதாரரீதியாக மிகுந்த சிரமத்தை அந்தக் குடும்பத்தினர் சந்தித்துவருகிறார்கள்.

குடும்பச்சூழலால் வனிதா, அருகிலுள்ள தனியார் ஜவ்வரிசி மில்லில் கூலி வேலைக்குச் செல்கிறார். அடிக்கடி இரவு நேரத்திலும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழல். இதனால், அக்கா, தங்கையான இரண்டு சிறுமிகள் மட்டும் தனியாக வீட்டில் இருப்பார்கள். அதைப் பயன்படுத்திக்கொண்டு அந்தப் பகுதியிலுள்ள சிலர் அந்தச் சிறுமிகளைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.

வறுமையில் வாடிய விவரமறியா அந்தக் குழந்தைகளுக்குத் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து, `வெளியில் சொல்லக் கூடாது’ என்று மிரட்டியிருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளும் தங்களுக்கு நேர்ந்த அவலத்தை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கிறார்கள். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு, 75 வயது முதியவர் முத்துசாமி அந்தக் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்து பிரச்னை செய்திருக்கிறார். இதையறிந்த ஊர் மக்கள் அவரைப் பிடித்து பஞ்சாயத்து செய்திருக்கிறார்கள்.

கூட்டு பாலியல் வன்கொடுமை; குழந்தையுடன் கால்வாயில் வீசப்பட்ட பெண்! - பீகார் கொடூரம்

இந்தத் தகவல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா கவனத்துக்குச் சென்றிருக்கிறது. அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குழந்தைகளிடம் விசாரணை மேற்கொண்டார். அதில் இந்த அதிர்ச்சியான தகவல் தெரியவந்ததையடுத்து, அவர் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதையடுத்து 75 வயது முதியவர் முத்துசாமி, சிவா, சண்முகம், மணிகண்டன், சூர்யா, செந்தமிழ்ச்செல்வன், வரதராஜன் ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், சிலரை போலீஸார் தேடிவருகிறார்கள். பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும் நாமக்கல் குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா

இது பற்றி நாமக்கல் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியாவிடம் கேட்டோம். ``என்னுடைய கவனத்துக்கு வந்ததும், உடனே அந்த இடத்துக்குச் சென்றேன். குழந்தைகளைச் சந்தித்து அன்பாக விசாரணையைத் தொடங்கினேன். பத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக திடுக்கிடும் தகவல்கள் தெரிவித்தார்கள். அதையடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். இதுவரை ஏழு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். மீதமுள்ளவர்களைத் தேடிவருகிறார்கள். குழந்தைகள் தற்போது எங்கள் பாதுகாப்பில் இருக்கிறார்கள்’’ என்றார். இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு