Published:Updated:

`மனைவிக்குப் பாடம் புகட்டவே இப்படிச் செய்தேன்!' - தந்தையால் நாமக்கல் குழந்தைகளுக்கு நேர்ந்த விபரீதம்

மனைவியை தன்னுடன் வாழ வரும்படி பலமுறை அழைத்திருக்கிறார். அதற்கு அவர் வரமறுத்ததால் அந்தப் பெண்ணுக்குப் பாடம் புகட்ட நினைத்து குழந்தைகளை வீசியெறிந்து கொலை செய்திருக்கிறார்.

இறப்பு
இறப்பு

`என் மனைவி என்னோட வாழமாட்றா. அவளுக்குப் பாடம் புகட்டணும்னு நினைச்சிதான் என்னோடப் பிள்ளைகளை வியூ பாயின்ட்டிலிருந்து தூக்கி வீசிக்கொன்றேன்' என்று தந்தையே போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறப்பு
இறப்பு

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே அரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவரின் மனைவி பாக்கியம். இவர்களுக்கு கவிதர்ஷினி என்ற மகளும் கிரிதாஸ் என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில், சிரஞ்சீவி தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை துன்புறுத்திக்கொண்டிருந்திருக்கிறார்.

அவர் கொடுத்த டார்ச்சரைத் தாங்கமுடியாமல் கணவனை விட்டுப்பிரிந்து தன் பெற்றோர் வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார் பாக்கியம். இந்தநிலையில் சிரஞ்சீவி, தன் மனைவி மற்றும் பிள்ளைகளை தன்னோடு அனுப்புமாறு உறவினர்களிடம் பிரச்னையில் ஈடுபட்டிருக்கிறார். தெம்பளம் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பிள்ளைகளை அழைத்துக்கொண்டு மாமனார் வீட்டுக்குச் சென்ற சீரஞ்சீவி, அவர்களிடம் சமாதானமாகப் பேசி குழந்தைகளை அனுப்புமாறு கேட்டுள்ளார்.

கொல்லி மலை
கொல்லி மலை

மேலும், மனைவி பாக்கியத்தையும் சமாதானப்படுத்தி தன்னோடு அனுப்புமாறு கேட்டிருக்கிறார். இதையடுத்து, இரண்டு குழந்தைகளை மட்டும் சிரஞ்சீவியோடு அனுப்பி வைத்துள்ளனர் பாக்கியத்தின் பெற்றோர். இந்தநிலையில், இரண்டு நாள்களாகக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருந்திருக்கிறார் சிரஞ்சீவி. சந்தேகம் அடைந்து பிள்ளைகளுடன் பேசுவதற்காகப் பாக்கியம் பலமுறை முயற்சி செய்திருக்கிறார். முடியாதநிலையில், கொல்லிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதன் பெயரில் போலீஸார் சிரஞ்சீவியை அழைத்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

என்ன நடந்தது என்று வழக்கை விசாரித்துவரும் போலீஸாரிடம் பேசினோம். ``கணவன் மனைவிக்குள் நடந்த சின்ன சின்ன பிரச்னைதான், குழந்தைகளைக் கொல்லும் அளவுக்குச் சென்றிருக்கிறது. மனைவி கொடுத்த புகாரின் பெயரில் சிரஞ்சீவியை அழைத்து விசாரித்தோம்.

`அந்த தம்பி இறந்துட்டான்னு அம்மா சொன்னாங்க!'- சுஜித் விழுந்த குழியைப் பார்த்து கலங்கிய குழந்தைகள்

மனைவியைத் தன்னுடன் வாழவரும்படி பலமுறை கேட்டிருக்கிறார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், அந்தப் பெண்ணுக்குப் பாடம் புகட்ட நினைத்து கொல்லிமலை அருகே சீக்குப்பாறை என்னுமிடத்தில் உள்ள வியூ பாயின்ட்டில் (350 அடி பள்ளத்தில்) குழந்தைகளை வீசியெறிந்து கொலை செய்திருக்கிறார். அவர் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறை உதவியோடு இரு குழந்தைகளின் உடல்களை மீட்டோம். விசாரணை இன்னும் முடியவில்லை'' என்றதோடு முடித்துக்கொண்டனர்.