Published:Updated:

காஷ்மீர் டு கன்னியாகுமரி... ஆபரேஷன் ‘பிளாக்‌ஷீப்’ - தலைமறைவான குடும்பங்கள்! - வலை வீசும் என்.ஐ.ஏ

- கே.ஜி.பி

பிரீமியம் ஸ்டோரி

‘‘நம்மளை, சுத்தி வளைக்க ஆரம்பிச்சுட்டாங்க. இனிமேலும் தமிழ்நாட்டுல இருந்து செயல்படுறது ஆபத்து. சூடு குறையுறவரைக்கும் பிரிஞ்சு இருங்க. அப்புறம் ஒண்ணா சேர்ந்துக்கலாம்!’’ - இந்த எச்சரிக்கையை வெறுமனே கடந்து செல்ல முடியாது. இந்து முன்னணி பிரமுகர் அம்பத்தூர் சுரேஷ் கொலையில் தொடர்புடைய காஜா மொய்தீன், சமீபத்தில் டெல்லியில் கைதுசெய்யப்பட்டார். இவருக்கு எங்கோ ஒரு தேசத்திலிருந்து வந்த ரகசியத் தகவல்தான் இந்த எச்சரிக்கை. இந்தத் தகவலை மோப்பம்பிடித்த தேசியப் புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ), தமிழகத்தில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை வேட்டையாடத் தொடங்கியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் தமிழ்நாடு?

சட்டம் ஒழுங்கில் அமைதிப்பூங்காவாக திகழும் தமிழ்நாடு, சமீப ஆண்டுகளாக ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் நிதி கேந்திரமாகவும், அந்த இயக்கத்துக்கு ஆள் பிடிக்கும் ஏஜென்ட்டுகள் பதுங்கும் இடமாகவும் மாறியுள்ளது. 2014-ல் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே போர் நடைபெற்றபோது, இந்தியாவிலேயே முதல் ஆளாக கடலூரைச் சேர்ந்த ஹாஜா பக்ருதீன் என்பவர் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

தன் குடும்பத்தையும் சிரியாவுக்கு அழைத்துச் சென்ற ஹாஜா பக்ருதீன், அங்கு இருந்தபடியே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆள் பிடிக்கும் பணியையும் தமிழ்நாட்டில் செய்துவந்தார். மொய்தீன், ஷகீல் ஹமீத், முத்தலீப் என மூன்று பேருக்கும் தவறான போதனைகளை அளித்து, அவர்களை பயங்கரவாதிகளாக ஹாஜா பக்ருதீன் மாற்றியபோதுதான் என்.ஐ.ஏ விழித்துக் கொண்டது. சம்பந்தப்பட்ட மூவரையும் கைதுசெய்து விசாரித்தபோது, தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் தங்கள் இயக்கத்துக்கு ஆள் திரட்ட தமிழ்நாட்டைப் பயன்படுத்திவந்துள்ளது தெரியவந்தது.

நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு என்.ஐ.ஏ-வின் தென் பிராந்திய மூத்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

‘‘2011-ம் ஆண்டில் ஒசாமா பின்லேடன் மறைந்த பிறகு அல்கொய்தா இயக்கம் சுணங்கிவிட்டது. இந்தச் சூழலில்தான் சிரிய அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக உள்நாட்டில் பெரியளவில் கலவரம் வெடித்தது. இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அல்கொய்தா இல்லாத வெற்றிடத்தை நிரப்பிய இயக்கம்தான் ஐ.எஸ்.ஐ.எஸ். இந்தோனேஷியாவின் ஜெமா இஸ்லாமியா, லெபனானின் ஹிஸ்புல்லா, பாலஸ்தீனத்தின் ஹமாஸ், ஆப்கானிஸ்தானின் தாலிபான், நைஜீரியாவின் போகோ ஹராம் எனப் பல பயங்கரவாத இயக்கங்கள் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருந்த நேரத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் வெகுவேகமாகப் பரவியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2013-ம் ஆண்டில் சிரியாவின் ராஃகா நகரத்தைப் பிடித்தவர்கள், அடுத்த இரண்டே ஆண்டுகளில் சிரியாவின் கிழக்குப் பகுதி, ஈராக்கின் மேற்குப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள். உலகின் பணக்காரத் பயங்கரவாத இயக்கம் என்ற பெயரையும் பெற்றது அந்த இயக்கம். ‘இஸ்லாமியர்கள் வாழும் நாடுகள் முழுவதையும் கலீபாவின் ஆட்சிக்குள் கொண்டுவருவதே எங்கள் லட்சியம்’ என்று அவர்கள் வெளிப்படையாக அறிவித்தனர். இதனால் ஈர்க்கப்பட்டு சிரியாவுக்குப் போர் செய்ய புறப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரில் இந்தியர்களும் அடக்கம். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக உள்ளனர்.

ஆபரேஷன் ‘பிளாக்‌ஷீப்’
ஆபரேஷன் ‘பிளாக்‌ஷீப்’

கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டவர்கள் பட்டியல் நீளமானது. இங்கே இருந்து துருக்கி செல்பவர்கள், சாலை மார்க்கமாக சிரியாவுக்குள் நுழைகிறார்கள். பிறகு, சிரியாவில் இருந்துகொண்டே ஆள் திரட்டுவதையும் தங்கள் இயக்கத்துக்குத் தேவையான நிதி திரட்டுவதையும் தமிழகத்தில் செய்துள்ளனர். புலனாய்வுத் துறையினரின் கெடுபிடி அதிகமானதால்தான், ஐ.எஸ்.ஐ.எஸ் பாணியில் எங்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக அப்பாவியான சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனைக் கொன்றுள்ளனர்’’ என்றவரிடம், ‘‘தமிழகத்தை ஏன் டார்கெட் செய்கிறார்கள், மற்ற மாநிலங்களில் இந்தப் பிரச்னை இல்லையா?’’ என்றோம்.

‘‘எல்லா மாநிலங்களிலும் இந்தப் பிரச்னை உள்ளது. ஆனால், தமிழகத்திலும் கேரளாவிலும் வாழும் முஸ்லிம்கள் சற்று வசதி படைத்தவர்கள். இவர்களில் சிலரை மூளைச்சலவை செய்து நிதி வசூலிப்பதை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் செய்து வருகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் அமெரிக்கா, ரஷ்யாவால் பாதிக்கப்படுவது குறித்து பிரசாரம் செய்து நிதி திரட்டுகின்றனர். அதேசமயம் மார்க்கத்தின்மீது உண்மையான நம்பிக்கைகொண்ட முஸ்லிம்கள் இவர்களுக்கு உதவுவதில்லை. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு ஹவாலா முறைப்படி பணம் மாற்றுவது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறித்தான் இங்கு திரட்டப்படும் நிதி ஹாங்காங், ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபுரூட், மொனாகோவின் மான்டே கார்லோ உள்ளிட்ட நகரங்களுக்கு ஹவாலா முறையில் சென்று சேர்கிறது. தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகளுக்கு உதவியவர்கள், அடைக்கலம் கொடுத்தவர்கள் என அனைவரையும் எங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளோம். வேட்டை தொடரும்’’ என்றார்.

தலைமறைவான குடும்பங்கள்!

2019-ல் நடைபெற்ற இலங்கை தற்கொலைப் படை குண்டுவெடிப்பில் 259 பேர் இறந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது. இந்தக் கோரத் தாக்குதலை நிகழ்த்திய ஒன்பது பயங்கரவாதிகளில் இன்சாப், இல்ஹாம் இருவரும் சகோதரர்கள். மற்ற சில பயங்கரவாதிகளின் குடும்பத்தாரும் இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு உதவியுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் பயங்கரவாத எண்ணத்துடன் செயல்பட்டது இலங்கை உளவுத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக் கியது. அதேபோன்ற குடும்பங்கள் தமிழகத்திலும் தலைமறைவானதை என்.ஐ.ஏ கண்டறிந்துள்ளது. குறிப்பாக, 2014-க்குப் பிறகு சிரியா மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர்களை தொடர்ச்சியான கண்காணிப்பு வளையத்துக்குள் என்.ஐ.ஏ வைத்துள்ளது. 2019 ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தக் குடும்பங்கள் தலைமறைவாகிவிட்டன என்கிறது என்.ஐ.ஏ வட்டாரம்.

‘`இந்தக் குடும்பங்கள் மட்டுமல்லாது, போலீஸ் உள்ளிட்ட அரசுத் துறைகளிலும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் கலந்திருக்கிறார்கள் என்று என்.ஐ.ஏ சந்தேகிக்கிறது. நாட்டுக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இத்தகைய கறுப்பு ஆடுகளைக் கண்டறிந்து களையெடுக்கும் வேலை தற்போது தீவிரமாகியுள்ளது. இதை, ‘ஆபரேஷன் பிளாக் ஷீப்’ என்றுகூட சொல்லலாம். மிகமிக ரகசியமாகத்தான் இந்த வேட்டை ஆரம்பமாகியுள்ளது. இதன் ஒரு பகுதிதான் அடுத்தடுத்து தமிழகத்தில் நிகழும் ரெய்டுகளும் கைதுகளும்’’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

வலைவீசும் என்.ஐ.ஏ

இந்தியாவின் முதல் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதி ஹாஜா பக்ருதீனின் ஆசிரியரும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைத் தோற்றுவித்தவருமான காஜா மொய்தீனை டெல்லி போலீஸார் சில வாரங்களுக்கு முன்னர் கைதுசெய்தனர். நேபாளத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளை ஒன்றைத் தொடங்கிவிட்டு டெல்லி வந்தவரைப் பிடித்து திகார் சிறையில் அடைத்துள்ளனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான், வெளிநாட்டில் இருந்து ஒருவர் இந்திய பயங்கர வாதிகளை ஆபரேட் செய்வது என்.ஐ.ஏ-வுக்குத் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட மர்ம நபருடன் பேசுவதற்கு என பிரத்யேக சாப்ஃட் வேர்களை காஜா மொய்தீன் பயன்படுத்தி வந்துள்ளார். அந்த மர்மநபரையும் அவருடன் தொடர்பில் உள்ள மற்றவர்களையும் பிடிப்பதற்கு என்.ஐ.ஏ வலை வீசியுள்ளது.

தமிழகத்திலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துக்கு அதிகளவு நிதி சென்றுள்ளதையும், தமிழகத்தைச் சேர்ந்த பலர் அந்த இயக்கத்துக்கு ஆள் திரட்டும் பணியில் அதிகளவு ஈடுபட்டுள்ளதையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். தமிழகத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லையென்றாலும், இங்கு உள்ள கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்கள், பாதுகாப்புத் துறை தொடர்பான நிறுவனங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக, தன் அச்சத்தை மத்திய அரசிடம் என்.ஐ.ஏ பகிர்ந்துள்ளது.

மோடி அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றவுடன் மத்திய உளவுத்துறையான ஐ.பி-யில் டெல்லியில் கோலோச்சிய ஓர் உயரதிகாரியை, தமிழக உள்பாதுகாப்புக்குப் பொறுப்பாளராக நியமனம் செய்தனர். இந்த நியமனம், முழுக்க முழுக்க மத்திய உள்துறையின் பரிந்துரையின் பெயரிலேயே நடைபெற்றது. இந்த அதிகாரியின் செயல்பாடுகளால்தான், கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இன்று வரை சுமார் 16 பயங்கரவாதிகள் கைதுசெய்யப் பட்டுள்ளனர் என்கிறது என்.ஐ.ஏ வட்டாரம். வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் மர்மநபர்களுக்கு மட்டுமல்லாது, இங்கு உள்ள சுறா மீன்களுக்கும் வலை வீசியுள்ளது என்.ஐ.ஏ.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு