Published:Updated:

``குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்திருப்பது உண்மையா?” - களநிலவரமும் அரசின் கடமையும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை

விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் மட்டும் குழந்தைகள் மீதான வன்முறை தொடர்பாக இத்தனை புகார்கள் வந்துள்ளன என்கிற ரீதியில் இந்தப் புள்ளிவிவர அறிக்கையை அணுகுவது தவறு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு, தேசிய குற்றஆவணக் காப்பகத் தரவறிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலைகள் பற்றிக் குறிப்பிடவே இல்லை என்று ஒருபக்கம் இருந்தாலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளின் எண்ணிக்கை அதிர்ச்சி தரக்கூடிய அளவில் உள்ளன.

அதிலும் தென்னிந்தியாவில் குழந்தைகள் மீதான வன்முறை எண்ணிக்கை 2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது.

குற்ற ஆவணக் காப்பகப் புள்ளிவிவரம்
குற்ற ஆவணக் காப்பகப் புள்ளிவிவரம்

இந்திய அளவில், குழந்தைகள் மீதான வன்முறைகளின் எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டில் 94,172 என்றிருந்தது, 2017 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 1,29,032 என அதிகரித்துள்ளது. அதாவது ஒரு லட்சம் இந்தியக் குழந்தைகளில் சுமார் 28 சதவிகிதம் பேர் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிற பகீர் தகவலை ஆவண அறிக்கை சொல்கிறது.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் பல்வேறு ஒடுக்குமுறைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் பயனாக அதிகப் புகார்கள் பதிவு செய்யப்படுவதும், இந்தத் திடுக்கிடும் எண்ணிக்கைக்குக் காரணமாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். 

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்
தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்

ஆனால், உத்திரப்பிரதேசத்திலும் மத்தியப்பிரதேசத்திலும் தலா 14.3 சதவிகித புகார்கள் பதிவாகி இருப்பதை விழிப்புணர்வு என்கிற பெயரில் ஒதுக்கமுடியாது. தமிழகத்தில் 2017ம் வருடத்தில் மட்டும் 3,529 சிறார் மீதான வன்முறைகள் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புள்ளிவிவரம் வெளியிடுவது மட்டும் போதுமா?

வன்முறைகள் தொடர்பான எண்ணிக்கை உண்மையிலேயே அச்சுறுத்தும் வகையில் இருக்கிறதா அல்லது அதிகப் புகார்கள் பதிவு செய்யப்படுவதால் உருவாகியிருக்கும் பிம்பமா? என்பதையறிய சிறார் மற்றும் குழந்தைகளுக்கான சமூகநலச் செயற்பாட்டாளர் தேவநேயனிடம் பேசினேன்.

``விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் மட்டும் இத்தனை புகார்கள் வந்துள்ளன என்கிற ரீதியில் இந்தப் புள்ளிவிவர அறிக்கையை அணுகுவது தவறு. இந்தியக் குடும்பங்களின் பிற்போக்குத்தனமான மனநிலைக்கிடையிலேயே இத்தனை புகார்கள் எண்ணிக்கை வந்திருக்கின்றன என்பது ஆபத்துக்குரிய விஷயம். குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளைப் புறந்தள்ளிவிட்டு குழந்தைகள் மீதான வன்முறைகள் தொடர்பான அரசின் தனி ஆய்வு என்று அணுகினால் 200 ஆண்டுக்குப் பிறகு எந்தவித ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை.

தேவநேயன்
தேவநேயன்

2016 ஆம் வருடத்தின்படி, போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை 1,543. இதில் 199 வழக்குகள் மட்டுமே தீர்வு காணப்பட்டிருக்கின்றன; 213 குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி, எத்தனை வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன என்பன போன்ற விவரங்கள் ஏன் குற்ற ஆவணக்காப்பக அறிக்கையில் இடம்பெறவில்லை. பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பற்றிமட்டும்தான் அரசு பேசுகிறது. எத்தனை வழக்குகள் தீர்வுகாணப்பட்டன, நீதி வழங்கப்பட்டன என்று ஆழமாக ஆராய வேண்டியது அரசின் கடமை.

வழக்குப் பதிவு செய்யப்பட்டு இதைக் கண்காணித்துவரும் அமைப்புகள், துரிதமாக நடவடிக்கை எடுக்கிறார்களா? மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்தான் மாநிலத்தில் போக்ஸோவைக் கண்காணிக்கின்றன. ஆனால், கண்காணிப்பதற்கான பொருளாதார ஒதுக்கீடு அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. புள்ளிவிவர எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

நேற்று அறிக்கை வெளியான நிலையில் ஆளுங்கட்சியோ எதிர்க்கட்சியோ தாமாக முன்வந்து இதுதொடர்பாக விவாதத்தை எழுப்பியதா?

18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வாக்குரிமை கிடையாது என்பதற்காக அலட்சியப்படுத்துவது சரியான போக்கு கிடையாது. கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காகத் தனி அமைச்சரவையே இயங்கும்போது இங்கே அவர்களைச் சமூகநலத்துறையின் கீழ் கொண்டுவந்து, அதில் மூன்றாவது அங்கமாகவே அவர்களின் நலன்கள் அணுகப்படுகின்றன. அறிக்கைகளின் மீது அக்கறையெடுத்து ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும். இல்லையென்றால் இனிவரும் ஆண்டுகளிலும் எண்ணிக்கை இதுபோல அதிகரித்துக் கொண்டே செல்லும்” என்றார்.

தமிழக அரசு, குற்ற ஆவணக்காப்பக அறிக்கை தொடர்பாக அக்கறை செலுத்துமா?

` குழந்தைகள் மீது நடத்தப்படும் மறைமுக யுத்தம்!' - தனித்துப் போராடும் புதுகை செல்வா #MyVikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு